'ஆலுமா டோலுமா' பாடலில் எனக்குத் திருப்தியில்லை: அனிருத்

By செய்திப்பிரிவு

பிரபல 'ஆலுமா டோலுமா' பாடலில் முதலில் தனக்குத் திருப்தியில்லை என்றும், ஆனாலும் இயக்குநர் 'சிறுத்தை' சிவா அதைப் பயன்படுத்தினார் என்றும் இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித்குமார், லக்‌ஷ்மி மேனன், ஷ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் 2015ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் 'வேதாளம்'. அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படத்தின் ஆலுமா டோலுமா பாடல் படம் வெளியாகும் முன்னரே மாபெரும் வெற்றி பெற்றது. அந்தத் தருணத்தில் பல பொது நிகழ்ச்சிகளில் இந்தப் பாடல் இசைக்கப்பட்டு பலர் நடனமாடுவது வாடிக்கையாக இருந்தது.

யூடியூபில் இந்தப் பாடலின் லிரிக் வீடியோ 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும், பாடல் வீடியோ 9 கோடிகும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளது. இன்றளவும் அஜித்தின் சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்றாக இது இருந்து வருகிறது. ஆனால் இந்தப் பாடலில் தனக்குத் திருப்தியில்லை என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனிருத் பேசியதாவது:

"பாடலை முடித்துக் கொடுத்துவிட்டேன். படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டனர். ஆனால் எனக்கு அந்த மெட்டில் திருப்தியில்லை. அன்றிரவே இயக்குநர் சிவாவை அழைத்து, அந்தப் பாடலைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் வேறொரு பாடலைத் தருகிறேன் என்றும் சொல்லிவிட்டேன்.

அடுத்த நாள் மாலை சிவாவை அழைத்துப் பேசிய போது, அவருக்குப் பாடல் பிடித்துப் போனதால் படப்பிடிப்பையே முடித்துவிட்டதாகக் கூறினார். எனக்குத் திருப்தியில்லை என்றாலும் பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. எனவே ஒரு பாடலின் வெற்றியை நம்மால் கணிக்க முடியாது என்பதை இதன் மூலம் கற்றேன். ஆலுமா டோலுமாவின் வெற்றி அஜித் அவர்களையும், சிவா அவர்களையுமே சேரும்.

வெற்றித் தோல்வியைப் பற்றிக் கவலைப்படமால சிறந்த உழைப்பைக் கொடுத்துக் கொண்டே இருப்பதுதான் முக்கியம்" என்று அனிருத் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE