என் பதிவுகள் பிடிக்கவில்லையா? தொடராதீர்கள்: ரசிகருக்கு யுவன் பளிச் பதில்

By செய்திப்பிரிவு

தனது மத நம்பிக்கை குறித்த பதிவுகளை விமர்சித்த ரசிகர் ஒருவருக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அளித்திருக்கும் பதில் நெட்டிசன்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

தற்போது 41 வயதாகும் யுவன் ஷங்கர் ராஜா 2014ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவுவதாக அறிவித்தார். தனது பெயரை அப்துல் ஹாலிக் என்றும் மாற்றிக் கொண்டார். ஆனால், தனது மத நம்பிக்கை குறித்து தனது வலைதளப் பக்கங்களில் இதுவரை அவர் பெரிதாக எதுவும் பகிர்ந்ததில்லை.

யுவனின் மனைவி இன்ஸ்டாகிராமில் பகிரும் இஸ்லாம் ரீதியான பதிவுகளில் யுவன் பற்றிய கேள்விகளுக்கு அவர் பதிலடி கொடுத்த சம்பவம் கடந்த வருடம் நடந்தது. தற்போது யுவன் ஷங்கர் ராஜாவின் பக்கத்தில் அதே மாதிரியான சம்பவம் நடந்துள்ளது.

குரான் வரிகளை தனது சமூக வலைதளப் பக்கங்களில் யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்திருந்தார். இதற்கு ஒரு ரசிகர், 'உங்கள் இசைக்காகத்தான் நான் உங்களைப் பின்தொடர்கிறேன். உங்கள் மத நம்பிக்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள அல்ல. நான் உங்களைத் தொடரட்டுமா வேண்டாமா' என்று கேட்க, இதற்கு யுவன், 'தொடர வேண்டாம்' என்று பளிச் பதில் அளித்துள்ளார்.

இதேபோன்ற இன்னொரு கருத்துக்கு பதில் சொல்லியிருந்த யுவன், "நான் ஒரு இந்தியன், ஒரு தமிழன், ஒரு இஸ்லாமியன். அரேபியாவில் மட்டும்தான் இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமையையே காட்டுகிறது. நம்பிக்கை, இனம் இரண்டும் வெவ்வேறு. மொழி, இனம் இரண்டும் வெவ்வேறு. தேச அடையாளமும், மதமும் வெவ்வேறு. நம்பிக்கை என்பது மட்டும்தான் நமக்குள் இருப்பது.

இந்த எளிய விஷயத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையென்றால் வேறு எதைப் புரிந்துகொள்ள முடியும்? நான் என் நேரத்தை ஒதுக்கி இதை உங்களுக்கு விளக்கக் காரணம் உங்கள் உளறலை நீங்கள் நிறுத்த வேண்டும் என்பதால்தான். இப்படி வெறுப்பைப் பரப்புவதை நிறுத்துங்கள். உங்களுக்கு மன அமைதி கிடைக்கட்டும்" என்று விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE