அமைதியுடன் உறங்குங்கள் ஜார்ஜ் ஃப்ளாய்ட்: நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஹாலிவுட் பிரபலங்கள் மகிழ்ச்சி

By ஐஏஎன்எஸ்

ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞரான ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலை வழக்கில் காவல் அதிகாரி டெரக் சாவின் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்து ஹாலிவுட் பிரபலங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதம், அமெரிக்காவில் கறுப்பின இளைஞரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலை செய்யப்பட்டார். பலரும் பார்க்கும் வண்ணம் காவலர்களாலேயே அந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டது. வெள்ளை இனக் காவல் அதிகாரியான டெரக் சாவின், ஃப்ளாய்டின் கழுத்தில் காலை வைத்து அழுத்திய காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

என்னால் மூச்சுவிட முடியவில்லை என ஃப்ளாய்ட் திணறிக் கொண்டு பேசியது உலகம் முழுவதும் ஒலித்தது. இனவெறிக் கொலை என தெள்ளத்தெளிவாகத் தென்பட்ட அந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவல் அதிகாரி டெரக் சாவின் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்தத் தீர்ப்பு குறித்து தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அவர்களுடைய பதிவுகள்:

நடிகர் க்றிஸ் எவான்ஸ்: நீதி வென்றது. ஜார்ஜ் ஃப்ளாய்ட் குடும்பத்துக்கு என்னுடைய அன்பு.

நடிகை வயோலா டேவிஸ்: குற்றம் நீரூபிக்கப்பட்டுவிட்டது! இப்போது அமைதியுடன் உறங்குங்கள் ஜார்ஜ் ஃப்ளாய்ட்.

பாடகி கேட்டி பெர்ரி: நீதியில் சாந்தி பெறுங்கள் ஜார்ஜ் ஃப்ளாய்ட்.

நடிகை கெர்ரி வாஷிங்டன்: குற்றம் நிரூபிக்கப்பட்டது. ஆனால், நீதிக்கான போராட்டம் இன்னும் முடியவில்லை. இன்னும் நாம் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது. இன்னும் நமக்கு முன்னால் நிறைய போராட்டங்கள் உள்ளன.

இவ்வாறு ஹாலிவுட் பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE