மிகச்சிறந்த பணி; க்யூப் மூலம் செதுக்கிய கேரளச் சிறுவனுக்கு ரஜினி பாராட்டு

By செய்திப்பிரிவு

300 க்யூப்கள் கொண்டு தன் உருவப் படத்தைச் செதுக்கிய கேரளச் சிறுவனுக்கு ரஜினி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தன்னைப் பற்றிய புதிய விஷயங்களை யாரேனும் செய்தால் உடனடியாக அவர்களை அழைத்துப் பாராட்டுவது ரஜினியின் வழக்கம். சில மாதங்களுக்கு முன்பு, அவருடைய ரசிகர் ஒருவர் மும்பையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். கரோனாவினாலும் பாதிக்கப்பட்டார். இது தொடர்பான அவருடைய ட்வீட்கள் பெரும் வைரலாக, உடனடியாக ரஜினி அவர் பூரண நலம்பெற ஆடியோ ஒன்றை வெளியிட்டார். தற்போது அவரும் பூரண நலமாகிவிட்டார்.

தற்போது கேரளாவைச் சேர்ந்த அத்வைத் மானழி என்ற சிறுவனின் செயலால் நெகிழ்ந்த ரஜினி, அவரைப் பாராட்டி ஒரு வாய்ஸ் நோட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்வைத் மானழிக்கு க்யூப்களை வைத்து உருவங்களை உருவாக்குவது ரொம்பவே பிடிக்கும். இதில் தனக்குப் பிடித்தமான நடிகர் ரஜினியை 300 க்யூப்கள் கொண்டு உருவாக்கி அதனை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

க்யூப்களால் ரஜினியை உருவாக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றுடன் அத்வைத் மானழி கூறியிருப்பதாவது:

"ரஜினிகாந்த் முகம் ரூபிக்ஸ் க்யூபி மொஸைக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. எனது 300 க்யூப்களை வைத்து என்றும் இளமையான நடிகரின் உருவத்தை உருவாக்கிய வாய்ப்பு கிடைத்தது என் ஆசீர்வாதம், மிக்க மகிழ்ச்சி.

சார், என் பெயர் அத்வைத் மானழி. பவன்ஸ் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளி, காக்கநாடு, கொச்சி, கேரளாவில் 9ஆம் வகுப்பு மாணவன். எனக்கு க்யூப் புதிர் விளையாட்டு பிடிக்கும். க்யூப்களை வைத்து உருவப் படங்களை உருவாக்குவது எனக்குப் பிடிக்கும். இன்று, 300 க்யூப்களை பயன்படுத்தி இந்தப் படத்தை உருவாக்க முயன்றேன். உங்களுக்கு இது பிடிக்கும் என்று நம்புகிறேன்".

இவ்வாறு அத்வைத் மானழி தெரிவித்தார்.

அத்வைத் மானழியின் இந்த ட்வீட் மற்றும் அவருடைய புகைப்படம், ரஜினி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இதனால் ட்விட்டரிலும் பெரும் வைரலானது. இதை அப்படியே ரஜினியின் பார்வைக்கும் எடுத்துச் சென்றார்கள்.

உடனே, அத்வைத் மானழியைப் பாராட்டி ரஜினி ஒரு வாய்ஸ் நோட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "மிகச்சிறந்த ஆக்கபூர்வமான பணி அத்வைத். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். லவ் யூ" என்று குறிப்பிட்டுள்ளார் ரஜினி.

ரஜினியின் பாராட்டால் நெகிழ்ந்த அத்வைத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"ரஜினி சார், உங்கள் ஆடியோ மெசேஜுக்கு நன்றி. உங்களிடமிருந்து கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதமாக இதை நான் கருதுகிறேன். என்னுடைய வாழ்நாள் முழுவதும் இதை நான் பாதுகாப்பேன். உங்களுக்கு நிறைய நிறைய அன்பு, நன்றி சார்"

இவ்வாறு அத்வைத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE