ஒரே நாளில் திரையரங்கிலும், ஓடிடியிலும் சல்மான் கானின் 'ராதே' ரிலீஸ்?

By செய்திப்பிரிவு

சல்மான் கான் நடிப்பில் வெளியாகவிருக்கும் ’ராதே’ திரைப்படம் ஒரே நாளில் ஓடிடியிலும், திரையரங்கிலும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், மேகா ஆகாஷ், திஷா படானி, பரத் ஆகியோர் நடித்திருக்கும் படம் 'ராதே'. 'வெடரன்' என்கிற தென் கொரியத் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது. இந்தப் படம் கடந்த வருடம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா நெருக்கடியால் தள்ளிப்போனது.

படத்தின் தொலைக்காட்சி, டிஜிட்டல், திரையரங்கு மற்றும் இசை உரிமை என அனைத்தையும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு, ரூ.230 கோடிக்கு சல்மான் விற்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், கண்டிப்பாகப் படம் திரையரங்கில்தான் முதலில் வெளியாகும் என்று சல்மான் கான் உத்தரவாதம் அளித்திருந்தார்.

மேலும், சில நாட்களுக்கு முன் ’இந்த ஈகைத் திருநாளுக்கு ’ராதே’ திரைப்படத்தை வெளியிட நாங்கள் முடிவெடுத்து, முயன்று வருகிறோம். ஊரடங்கு தொடர்ந்தால் படம் அடுத்த வருட ஈகைத் திருநாளுக்கு வெளியாகும்’ என்று சல்மான் தெரிவித்திருந்தார். ஆனால் சில நாட்களுக்கு முன் ’ராதே’ திரைப்படம் ஒரே நாளில் ஜீ ப்ளெக்ஸ் ஓடிடி தளத்திலும், திரையரங்கிலும் வெளியாக இருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதுகுறித்து ஜீ ஸ்டூடியோஸ் தரப்பில் விசாரித்தபோது, "திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு ஜீ ப்ளெக்ஸ் தளத்தில் வெளியிடத் திட்டமிட்டிருப்பது உண்மைதான். ஆனால், அது அதே நாளிலா, ஒரு மாதம் கழித்தா என்றெல்லாம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மேலும் 50 சதவீத இருக்கை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தாலும் கண்டிப்பாக படம் திட்டமிட்டபடி மே 13 அன்று வெளியாகும்" என்று கூறப்பட்டது.

தற்போது மே 13 அன்று திரையரங்கிலும், ’ராதே’ திரைப்படத்தைப் பார்க்க மட்டும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டி (pay per view) ஜீ ப்ளெக்ஸ் தளத்தில் பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா ஸ்கை, டிஷ் டிவி, ஏர்டெல் டிஜிட்டல் டிவி உள்ளிட்ட டிடிஹெச் மூலமாகவும் பணம் செலுத்திப் பார்க்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE