இந்த ஆண்டும் தொகுப்பாளரின்றி ஆஸ்கர் விழா: புதிய விதிமுறைகளுடன் விரிவான ஏற்பாடுகள்

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஆஸ்கர் விழா, மேடையில் தொகுப்பாளரின்றி நடைபெறவுள்ளது. மேலும் பல விதிமுறைகளை ஆஸ்கர் குழு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் நிலவி வரும் கரோனா நெருக்கடி காரணமாக இம்முறை ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆஸ்கர் விருதுக்குத் தகுதி பெற வேண்டுமென்றால் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடியிருக்க வேண்டும் என்கிற விதி இந்த ஆஸ்கருக்காக மட்டும் தளர்த்தப்பட்டது.

புதிய விதிகளின் படி, திரையரங்கில் வெளியாகத் திட்டமிட்டிருந்து நேரடியாக டிஜிட்டலில் வெளியான திரைப்படங்களை, அகாடமிக்கான பிரத்யேகத் திரையிடல் அறையில் திரையிட்டு ஆஸ்கருக்குப் போட்டியிடலாம். இது படம் டிஜிட்டலில் வெளியான 60 நாட்களுக்குள் நடக்க வேண்டும். திரையரங்கில் வெளியாகும் படங்களுக்கு இது கட்டாயம் கிடையாது. மேலும் ட்ரைவ்-இன் தியேட்டர்களில் வெளியிட்டாலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் அன்று அறிவிக்கப்பட்டது.

தற்போது ஆஸ்கர் விழா நடக்கும் முறையில் புதிய வழிமுறைகள் பின்பற்றப்படவுள்ளன. சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் மேடைத் தொகுப்பாளர் என்று தனியாக யாரும் கிடையாது. ஆனால் விருதினை அறிவிக்க, வழங்கிட பல பிரபல நட்சத்திரங்கள் மேடையேறுவார்கள்.

மேடையில் இருக்கும்போது, கேமரா முன் தோன்றும்போது சம்பந்தப்பட்டவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், மற்ற நேரங்களில் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். டால்பி தியேட்டரில் மட்டுமல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன் அரங்கிலும் இம்முறை விழா நடக்கும்.

விழாவில் பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை 170 என்ற எண்ணிக்கையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 170 என்கிற எண்ணிக்கை சுழற்சி முறையில் இருக்கும். ஒவ்வொரு விருந்தினரும் எப்போது உள்ளே நுழைய வேண்டும், எப்போது வெளியே வர வேண்டும் என்கிற வழிகாட்டுதல்கள் அவரவருக்குத் தனித்தனியாக வழங்கப்படும்.

விழாவில் நேரில் பங்கேற்பவர்கள் அதற்கு முன் மூன்று முறையாவது கோவிட்-19 பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்பதை உறுதி செய்தபின்தான் வர வேண்டும். இது இல்லாமல் விழா நடக்கும் இரண்டு இடங்களிலும் இதற்காகத் தனிக் குழு அமைக்கப்பட்டிருக்கும். அங்கேயே பரிசோதனையும் செய்யப்பட்டு உடனடியாக முடிவுகளும் அறியப்படும்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வர முடியாத பங்கேற்பாளர்கள் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே விழாவில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காணொலி மூலமாக இவர்கள் விழாவை கவனிப்பார்கள், கலந்துகொள்வார்கள். எப்போதும் போல ஸ்டார் மூவிஸ் சேனலில் இந்த விழாவின் நேரலை ஒளிபரப்பாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE