திரையரங்குகள் தொடர்ந்து செயல்படும்: உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் திரையரங்குகள் தொடர்ந்து இயங்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரித்து வருகிறது. ஒருசில மாநிலங்களில் முழு ஊரடங்கே நிலவி வரும் நிலையில் தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 20) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதில் திரையரங்குகளுக்கு 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி, தினசரி 3 காட்சிகள் மட்டும் அனுமதி, ஞாயிறு அன்று முழு ஊரடங்கால் திரையரங்குகள் திறக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வளவு கட்டுப்பாடுகளுடன், இருக்கும் படங்களை வைத்து திரையரங்குகளை நடத்துவது அதிக நஷ்டத்தையே தரும் என்பதால் தளர்வுகள் வரும் வரை திரையரங்குகளை மொத்தமாக இழுத்து மூடுவதே சரியாக இருக்கும் என்று சில திரையரங்க உரிமையாளர்கள் நினைத்ததால் இதுகுறித்து முடிவு செய்ய இன்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பெயர் வெளியிட விரும்பாத திரையரங்க உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:

"அரசு எல்லா தொழிலுக்குமே கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திரையரங்குகளும் இதில் விதிவிலக்கல்ல. எனவே அரசே சொல்லும் வரை திரையரங்குகளைத் திறந்து வைக்கலாம் என்றே முடிவெடுத்துள்ளோம். பல மாத ஊரடங்குக்குப் பின் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் திரையரங்குகளுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அரசிடம் கோரிக்கை வைப்போம் என்று சிலர் கருதினார்கள்.

ஆனால், தேர்தல் முடிவு வரும் வரை அரசு அதிகாரிகள்தான் எல்லாவற்றையும் நடத்திக் கொண்டிருப்பார்கள். இன்றைய சூழலில் அவர்களுக்குத் திரையரங்குகள் பிரதானமாக இருக்காது. புதிய அரசு வந்தவுடன் அவர்கள் கையில் ஏற்கெனவே பல பிரச்சினைகள் இருக்கும்போது எங்கள் தரப்பு பிரச்சினை பெரிதாக இருக்காது.

அதனால் நாமே இழுத்து மூடுகிறோம் என்றெல்லாம் சொல்லி மாட்டிக்கொள்ள வேண்டாம். இருக்கும் படங்கள் ஓடட்டும். 'மாஸ்டர்', 'காங் வெர்சஸ் காட்ஸில்லா', 'சுல்தான்', 'கர்ணன்' ஆகிய படங்கள் மட்டுமே பெரிய வெற்றி என்று சுப்பிரமணியன் கூறியிருந்தார். ஆனாலும் நாங்கள் ஓட்டிக்கொண்டுதான் இருக்கிறோம்.

லாபம் இல்லையென்றாலும் ஏதோ ஓரளவு வரும். ரசிகர் கூட்டத்தை வைத்துச் சமாளித்து ஊழியர்களுக்கு சம்பளம், மின் கட்டணம் என்று கொடுத்து வருகிறோம். அப்படியே தொடரலாம் என்று பெரும்பான்மையானோர் பேசினோம். இதை மற்றவர்கள் ஒப்புக்கொண்டார்கள். மேலும், இப்போது அரங்குகளை மூடினால் ஓடிடிக்குச் செல்ல நாங்களே வழிகொடுத்தது போல ஆகிவிடும்.

மேலும், பெரிய படங்கள் இல்லையென்றாலும் திரையரங்குகள் இருந்தால்தான் புதிய சிறிய படங்களும் வெளியாகும். எனவே, நம்மால் இயலும் வரை திரையரங்குகளை நடத்துவோம். பிரச்சினை தீவிரமானால் அடுத்ததாக யோசிக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்".

இவ்வாறு திரையரங்க உரிமையாளர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE