விவேக்கின் இந்தக் கதாபாத்திரங்கள் நம்மைவிட்டு என்றும் நீங்காது! 

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

'ஜனங்களின் கலைஞர்', 'சின்ன கலைவாணர்' என்றெல்லாம் அன்புடன் அழைக்கப்பட்ட நடிகர் விவேக் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் திரைப்பட ரசிகர்களையும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாழும் தமிழறிந்த மனிதர் ஒவ்வொருவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் அகால மரணமடைந்துவிட்டார்.

அவர் நம்மைவிட்டு மறைந்துவிட்டாலும் அவர் நடித்த 220க்கு மேற்பட்ட திரைப்படங்களும் அவற்றில் அவர் நம்மை விலா நோக சிரிக்க வைத்த நகைச்சுவைக் காட்சிகளும் சிந்திக்க வைத்த சமூக கருத்துகளும் குணச்சித்திர வேடங்களில் அவருடைய நகைச்சுவையைத் தாண்டிய அபாரமான நடிப்புத் திறன் வெளிப்பட்ட தருணங்களும் என்றென்றும் நம்முட வாழப் போகின்றன. அவற்றில் விவேக்கின் ஆளுமையின் வீச்சையும் சிந்தனையின் தாக்கத்தையும் முழுமையாக உணரவைக்கும் திரைப்பட கதாபாத்திரங்களைத் தருணங்களை நினைவுகூர்வது அவர் நம்மைவிட்டு நிரந்தரமாக நீங்கிவிட்ட வலியை மட்டுப்படுத்தும் மருந்தாக அமையக்கூடும்.

விட்டல் - புதுப் புது அர்த்தங்கள் (1989)

'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்கிற பிரபலமான வசனமே போதும் இந்தப் படமும் இதில் விவேக்கின் கதாபாத்திரமும் நடிப்பும் ரசிகர்களிடம் எவ்வளவு தூரம் சென்றடைந்தன என்பதை உணர. 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் விவேக். அந்தப் படத்தில் நாயகியின் தம்பிகளில் ஒருவராக சிறிய துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக பாலசந்தர் இயக்கிய 'புதுப் புது அர்த்தங்கள்' படத்தில்தான் விவேக்குக்கு நகைச்சுவைத் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வசனத்தைத் தாண்டி பணக்கார திமிரும் அடியாள் பலமும் மிக்க ஜெயசித்ராவின் ஊழியராக அவரையே ஏமாற்றி அடிபணிய வைத்து காரியம் சாதித்துக்கொள்வதும் பின் உண்மை அம்பலப்பட்டவுடன் அடிவாங்கிப் பம்முவதுமாக முழுமையான ரசிக்கத்தக்க நகைச்சுவை நடிப்பை வழங்கியிருந்தார் விவேக்.

ராஜம் – மோகமுள் (1995)

தி.ஜானகிராமன் எழுதி கிளாஸிக் அந்தஸ்தைப் பெற்றுவிட்ட 'மோகமுள்' நாவலின் திரைவடிவத்தில் நாயகன் பாபுவின் நண்பன் ராஜமாக விவேக் நடித்திருந்தார். நாவலில் விரிவாக வரும் ராஜம் கதாபாத்திரம் படத்தில் திரைக்கதையின் தேவை கருதிச் சுருக்கப்பட்டது. இருந்தாலும் நண்பனின் பொருந்தாக் காதலை எண்ணி முதலில் கலக்கமடைவது பின்னர் அதைப் புரிந்துகொள்வது இறுதியில் நண்பனுக்காக அவனை ஆட்கொண்ட அவனைவிட பத்து வயது மூத்தவளான யமுனாவிடம் பரிந்து பேசுவது என அனைத்து இடங்களிலும் ராஜம் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உள்வாங்கி மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார் விவேக்.

ராஜா- எனக்கொரு மகன் பிறப்பான் (1997)

1990களில் நாயகர்களின் நண்பனாக நகைச்சுவை நடிகராக கவனம் ஈர்க்கத் தொடங்கிவிட்ட விவேக் சில படங்களில் நாயகனுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நாயகன் என்று சொல்லத்தக்கக் கதாபாத்திரங்களிலும் நடித்தார். அவற்றில் இந்தப் படமும் ஒன்று. இதில் சமூக அவலங்களைத் தட்டிக் கேட்கும் பத்திரிகையாளராக நடித்திருப்பார் விவேக். இவருடைய துணிச்சல் மிக்க இதழியல் பணியால் பாதிக்கப்படும் அரசியல்வாதிகளின் மிரட்டல் முயற்சிகள்தான் படத்தின் இரண்டாம் பாதி திரைக்கதையின் முக்கியப் பகுதிக்கும் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிக்கும் வித்திடும். நாயகனின் நண்பனாக அவரின் தவிர்க்க முடியாத தேவைக்காக தன் மகனை அவருடைய மகனாகவும் அவருடைய மகளை தன் மகளாகவும் ஏற்பதால் விளையும் குழப்பங்களையும் அவஸ்தைகளையும் சமாளிப்பவராக வெகு சிறப்பாக நடித்திருப்பார்.

கிராமத்தில் சிக்கிக்கொண்ட நகர்ப்புற இளைஞர்- 'திருநெல்வேலி' (2000)

1990களின் பிற்பகுதியில் 'ஹரிச்சந்த்ரா', 'சொல்லாமலே', 'கண்ணெதிரே தோன்றினாள்', 'வாலி', 'பூமகள் ஊர்வலம்' உள்ளிட்ட பல படங்களின் மூலம் ஒரு நகைச்சுவை நடிகராக பெரும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுவிட்டார் விவேக். ஆனால் புத்தாயிரத்தின் தொடக்கத்தில் வெளியான இந்தப் படத்தில்தான் அவருடைய நகைச்சுவையில் சமூக அவலங்களைப் பிற்போக்குத்தனங்களை நகைச்சுவை பாணியில் சாடும் போக்கு தொடங்கியது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவை மூலம் சமூக முன்னேற்றத்துக்கான விழிப்புணர்வு கருத்துகளை வெளிப்படுத்திய விவேக் 'சின்ன கலைவாணர்' என்னும் அடைமொழியைப் பெறுவதற்கான தொடக்கப்புள்ளி இந்தப் படத்தின் நகைச்சுவைப் பகுதிதான். கிராமங்களில் மலிந்து கிடக்கும் மூட நம்பிக்கைகள், சாதிய பெருமிதங்கள் ஆகியவற்றை முன்வைத்து 'உங்களை எல்லாம் இருநூறு பெரியார் வந்தாலும் திருத்த முடியாது டா" என்பார். 1990களில் தொடங்கிய நவீன முன்னேற்றங்களின் காலத்தில் சமூக நீதிக்காகப் பாடுபட்ட பெரியாரின் பெயரை அவருடைய சமூக சீர்திருத்தப் பணியின் முக்கியத்துவத்தைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்த முதல் குரல் விவேக்குடையதுதான்.

சொக்கு – மின்னலே (2001)

நாயகனின் நண்பனாகப் பல திரைப்படங்களில் தோன்றியிருக்கும் விவேக் அந்தக் கதாபாத்திரத்தில் உச்சம் தொட்ட திரைப்படம் என்று இதைச் சொல்லலாம். நாயகன் உட்பட அனைத்து நண்பர்களையும் மானாவாரியாகக் கிண்டலடிப்பது, நாயகியின் தோழிக்கு ரூட் விடுவது, காதல் குறித்தும் பெண்கள் குறித்தும் இளம் ஆண்களின் ஏக்கங்களுக்கு வடிகாலாக அமையும் கருத்துகளை உதிர்ப்பது, நாயகனின் காதலுக்கு உதவுவது, நாயகனின் எதிரியிடம் மாஸ் வசனம் பேசுவது என நகைச்சுவை கலந்த துணைக் கதாபாத்திரமாக இந்தப் படத்தில் விவேக்கின் நடிப்பு தலைமுறைகள் கடந்து கொண்டாடப்படும்.

மோகன் - ரன் (2002)

நகைச்சுவை மூலம் விவேக் வெளிப்படுத்திய சிந்தனையைத் தூண்டும் கருத்துகள் பல தளங்களுக்கு விரிந்தன. இந்தப் படத்தில் சிறு நகரங்களிலிருந்து மாநகரமான சென்னைக்கு வருபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பேசியிருப்பார். அதன் வழியே சென்னை மீதான விமர்சனமாக சென்னை மக்களே ரசிக்கக்கூடிய வகையில் நகைச்சுவைக் காட்சிகளாக வடிவமைத்திருப்பார். அதே நேரம் பெற்றோரை மதிக்காமல் இருப்பதன் தீய விளைவுகளையும் பிரச்சார நெடியின்றி புகுத்தியிருப்பார்.

வெங்கட்ராமன் - 'சாமி' (2003)

விவேக்கின் நகைச்சுவை வழியிலான சமூக சீர்திருத்தப் பிரச்சாரம் மிகப் பிரமாதமாக வெளிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தில் பிராமண புரோகிதராக நடித்திருப்பார். பிராமணர்கள் உட்பட அனைத்து சாதியினரிடமும் நிலவும் மூட நம்பிக்கைகளையும் சாதிய ஏற்றதாழ்வு சிந்தனையையும் பகடி செய்யும் நகைச்சுவை ரசிகர்களின் மனங்களின் ஆழமான தாக்கம் செலுத்தின. “அரிசு கோதும ரவா மொத்தத்துல அவா இல்லன்னா உங்களுக்கெல்லாம் ஏதுங்கானும் பூவா", என்று தீண்டாமைக்கு எதிரான கருத்தைப் பதிவு செய்ததோடு சமூகத்துக்கு மிக முக்கியமான பங்களிப்பாற்றும் பிரிவினரைத் தீண்டாமையால் ஒதுக்கிவைத்திருப்பதன் அவலத்தையும் சுட்டிக்காட்டினார்.

மங்களம் சார் – பாய்ஸ் (2003)

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் விவேக்கை முதல் முறையாகப் பயன்படுத்திய திரைப்படம். நகர்ப்புற விடலைகளின் சிக்கல்களையும் ஏக்கங்களையும் கனவுகளையும் மையப்படுத்திய இந்தப் படத்தில் மையக் கதாபாத்திரங்களான ஐந்து இளைஞர்கள் மீதும் அன்பும் அக்கறையும் செலுத்துபவராகவும் அவர்களைக் கரித்துக்கொட்டும் பெற்றோரிடம் அவர்கள் தரப்பில் நின்று வாதாடும் மூத்தவராகவும் திகழ்ந்த 'மங்களம் சார்' போன்ற ஒருவர் தன் வாழ்வில் இருக்க வேண்டும் என்று எல்லா இளைஞர்களும் விரும்புவர்.

அறிவு - சிவாஜி (2007)

கமல் ஹாசனைத் தவிர முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்துவிட்ட விவேக் ௧௯௯௦-களிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சில படங்களில் நடித்துவிட்டார் என்றாலும் 'சிவாஜி'யில்தான் படம் முழுவதும் வரும் வகையிலான முக்கியமான வேடம் அமைந்தது. இதில் ரஜினியைவிட வயதில் இளையவர் என்றாலும் உறவு முறைப்படி அவருடைய தாய்மாமாவாக நடித்திருப்பார் . ரஜினி இவரை 'மாமா' என்று அழைத்தபடி செய்யும் அலப்பறைகளும் அதற்கு இவருடைய ரியாக்‌ஷன்களும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. நகைச்சுவை வேடம் என்பதைத் தாண்டி படத்தில் நாயகனின் வீழ்ச்சியின் போது தோள்கொடுப்பவராகவும் எழுச்சியின்போது துணை நிற்பவராக முதன்மையான துணைக் கதாபாத்திரமாகவும் விவேக்கின் ஆளுமை சிறப்பாக வெளிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

அசால்ட் ஆறுமுகம் – படிக்காதவன்

வடிவேலுக்காக எழுதப்பட்டு அவரை வைத்து போட்டோஷூட் வரை சென்றுவிட்ட இந்தக் கதாபாத்திரத்தில் தீடீர் மாற்றமாக விவேக் நடித்தார். இந்தப் படத்தில் விவேக்கின் நகைச்சுவைக்குக் கிடைத்த வரவேற்பு அவர் வடிவேலு பாணியிலான ஸ்லாப்ஸ்டிக், ரியாக்‌ஷன்களை மையப்படுத்திய நகைச்சுவையிலும் கில்லி என்பதை நிரூபித்தது. "காக்கி நாடா உனக்கு பாவாட நாடா" எனக்கு என்று ஆந்திரத்தை அடக்கி ஆளும் தாதாவான சுமனிடம் வீராவேசமாகப் பேசிவிட்டு ஆடைகள் கிழிந்து தொங்கும் அளவுக்கு அடிவாங்கிய பின்னும் தடுமாறியபடியே நடந்தாலும் முகத்தில் மட்டும் கெத்தை விட்டுக்கொடுக்காமல் விவேக் நடந்து செல்லும் காட்சி தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த நகைச்சுவைக் காட்சிகளில் ஒன்று என்றே சொல்லலாம்.

எமோஷனல் ஏகாம்பரம் – உத்தமபுத்திரன் (2010)

விவேக்கின் நகைச்சுவை பட்டையைக் கிளப்பிய திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் முரட்டுத்தனமும் முட்டாள்தனமும் மிக்க அண்ணன், தம்பிகளின் அராஜகங்களைச் சமாளிக்கும் ஆடிட்டராக அந்த இரு குடும்பங்களும் சொத்துக்காக அபகரிக்க நினைக்கும் பெண்ணை காப்பாற்றுவதற்காக வரும் நாயகனால் தன்னையறியாமல் ஆட்டுவிக்கப்படும் எமோஷனல் ஏகாம்பரமாக விவேக்கின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களை விலா நோகச் சிரிக்க வைத்தன. குறிப்பாக நாயகனான தனுஷ் பழைய சோறு தின்பதைப் பார்த்து “பரவால்ல சாப்பிடுப்பா உன்னப் பாத்தா பல மாசமா சாப்பிடாதவன் மாறி இருக்க" என்று தனுஷையே கிண்டலடிக்கும் ரசிக்கத்தக்கக் குறும்புகளும் வெளிப்பட்டன.

பாலா - நான்தான் பாலா (2014)

விவேக் கதாநாயகனாக அல்லது மையக் கதாபாத்திரமாக நடிக்கும் முயற்சிகளில் முழுமையாகக் கைகூடிய முதல் படம் இதுவே. இந்தப் படத்தில் சமூக சீர்திருத்த நோக்கம் கொண்ட பிராமணராக அமைதியும் நிதானமும் முதிர்ச்சியும் நிறைந்த அதிர்ந்து பேசாத அகிம்சை விரும்பியாக நடித்திருந்தார் விவேக். இதில் நடித்ததன் மூலம் தன்னுடைய நெடிய திரைப் பயணத்தில் அதுவரை வெளிப்படாத முற்றிலும் வேறொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

நடிகர் விவேக் – பிருந்தாவனம் (2017)

நடிகர் விவேக்காக தன் நிஜ வாழ்க்கை ஆளுமையைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் விவேக் நடித்திருந்த படம் இது. உணர்வுபூர்வமான காட்சிகளுக்காகவும் இயல்பான நகைச்சுவைக்காகவும் ரசிகர்களின் மனங்களில் தனி மதிப்பைப் பெற்றுவிட்ட ராதா மோகன் இயக்கிய இந்தப் படத்தில் விவேக்கின் நகைச்சுவை நடிப்பில் மட்டுமல்லாமல் உணர்வுபூர்வ நடிப்பிலும் புதிய பரிமாணம் வெளிப்பட்டது.

ருத்ரன் கணேசன் - வெள்ளைப்பூக்கள் (2019)

விவேக் மையக் கதாபாத்திரமாக நடித்த திரைப்படங்களில் வெகு சிறப்பான திரைப்படமான இதுவே அவர் மையக் கதாபாத்திரத்தில் நடித்த கடைசிப் படமாக அமைந்துவிட்டது வேதனைக்குரியது. அமெரிக்காவில் தன் மகனின் குடும்பத்துடன் தங்கும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக நரைத்த தலைமுடி, வெள்ளை நிறச் சட்டை, மூக்குக் கண்ணாடி எனத் தோற்றத்திலும் உடல்மொழியிலுமே அந்த வயதுக்குத் தேவையான நிதானத்தையும் முதிர்ச்சியையும் கண்ணியத்தையும் கொண்டுவந்திருப்பார்.. அமெரிக்காவில் நிகழும் தொடர் கொலைகளைத் துப்பறிந்து கண்டறியும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அதன் அழுத்தங்களின் சுமையையும் அதனால் நிகழும் இழப்புகளின் வலியையும் இதையெல்லாம் தாண்டி குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் பணியில் விடாப்பிடியான தீவிர முனைப்பையும் ஒரு தேர்ந்த நடிகருக்கான லாகவத்துடன் வெளிப்படுத்தியிருப்பார்.

டாக்டர் கண்ணதாசன் - 'தாராள பிரபு' (2020)

விவேக் நடிப்பில் அவர் உயிருடன் இருக்கும்போது வெளியான கடைசிப் படமான 'தாராள பிரபு' அவருடைய நடிப்பை வேறொரு தளத்தில் முன்னிறுத்தி ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தந்தது. 'விக்கி டோனர்' திரைப்படத்தின் மறு ஆக்கமான இந்தப் படத்தில் தீர்க்க முடியாத பாலியல் பிரச்சினைகளைக் கொண்ட தம்பதியர் உயிரணுக் கொடை மூலம் குழந்தைகள் பெறவைக்கும் மருத்து நிறுவனத்தை நடத்துபவராக நடித்திருப்பார் விவேக். தன் காரியத்தைச் சாதித்துக்கொள்வதற்காக உயிரணுக் கொடை அளிக்கும் நாயகனை மிரட்டிப் பணிய வைப்பது அதே நேரம் அவர் மீது அக்கறையுடன் அவருடைய பெயரில் சொத்துக்களை வாங்குவது என நல்லவரா கெட்டவரா என்று வகைப்படுத்திவிட முடியாத கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார் விவேக்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்