ஷங்கர் ஒரு ஜீனியஸ் இயக்குநர்: ‘அந்நியன்’ ரீமேக்கில் நடிப்பது குறித்து ரன்வீர் சிங் பகிர்வு

By செய்திப்பிரிவு

ஷங்கர் ஒரு ஜீனியஸ் இயக்குநர் என்று நடிகர் ரன்வீர் சிங் புகழ்ந்துள்ளார்.

கமல் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இந்தப் படத்துக்குப் பின் ராம் சரண் நடிக்கும் படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஷங்கர். தில் ராஜு தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகிறது. பெரும் பொருட்செலவில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என அத்தனை பிரதான மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்த இரண்டு படங்களுக்குப் பின், ரன்வீர் சிங் நடிக்கும் இந்திப் படமொன்றை ஷங்கர் இயக்குகிறார். இதற்கான பேச்சுவார்த்தை இறுதியடைந்துள்ளது. இந்தப் படம் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'அந்நியன்' படத்தின் ரீமேக் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.

இப்படத்தில் நடிப்பது குறித்து ரன்வீர் சிங் கூறியுள்ளதாவது:

''ஷங்கரின் அற்புதமான சினிமா உலகில் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததை ஆசீர்வாதமாக உணர்கிறேன். அவர் பொது விதிகளுக்கு அப்பாற்பட்டவர். திரையில் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என்று நமக்குக் காட்டியவர். அவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்புக்காக எப்போதும் ஏங்கியுள்ளேன். நாங்கள் இணைந்து மாயாஜாலம் நிகழ்த்துவோம் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு ஏற்படுகிறது.

‘அந்நியன்’ போன்ற ஒரு படத்தில் நாயகனாக நடிப்பதுதான் எந்தவொரு நடிகனுக்கும் கனவாக இருக்கும். நாட்டில் உள்ள மிகச்சிறந்த திறமையாளர்களில் ஒருவரும், நான் மிகவும் மதிக்கும் நடிகருமான விக்ரம், 'அந்நியன்' படத்தில் யாராலும் ஈடுசெய்ய முடியாத மிகச் சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார். என்னுடைய நடிப்பும் அதே வகையில் பார்வையாளர்களை ஈர்க்கும் என்று நம்புகிறேன். நிச்சயமாக இது வாழ்வில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. என்னுடைய நடிப்பின் ஒவ்வொரு சொட்டையும் இந்தப் பாத்திரத்துக்காகக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். ஷங்கர் ஒரு ஜீனியஸ் இயக்குநர். அவரது இயக்கத்தில் நடிப்பது குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை''.

இவ்வாறு ரன்வீர் சிங் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE