இந்தியில் ரீமேக்காகும் 'அந்நியன்' - ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங்

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'அந்நியன்' படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்கிறார்.

கமல் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இந்தப் படத்துக்குப் பின் ராம் சரண் நடிக்கும் படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஷங்கர். தில் ராஜு தயாரிக்கும் 50-வது படமாக இது உருவாகிறது. பெரும் பொருட்செலவில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என அத்தனை பிரதான மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்த இரண்டு படங்களுக்குப் பின், ரன்வீர் சிங் நடிக்கும் இந்திப் படமொன்றை ஷங்கர் இயக்குகிறார். இதற்கான பேச்சுவார்த்தை இறுதியடைந்துள்ளது. இந்தப் படம் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'அந்நியன்' படத்தின் ரீமேக் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.

இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளதாவது:

''அந்நியனை இந்தியில் ரீமேக் செய்யவேண்டுமென்றால் அந்தப் பாத்திரத்துக்கு ஏற்ற திறமையான, கவர்ந்திழுக்கக் கூடிய ஒருவர் தேவை. அது ரன்வீர் சிங்கிடம் இருப்பதை நான் கண்டுகொண்டேன். காரணம் தனது அற்புதமான நடிப்பின் மூலம் இரு பாத்திரங்களுக்கு உயிரூட்டக் கூடியவர் ரன்வீர். இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக 'அந்நியன்' படத்தை ரீமேக் செய்ய மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். இந்த சக்திவாய்ந்த கதை அனைவரது மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்''.

இவ்வாறு ஷங்கர் கூறியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 2022ஆம் ஆண்டு மத்தியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE