’கர்ணன்’ படத்தில் உதயநிதி சுட்டிக்காட்டிய தவறு: இரு தினங்களில் சரி செய்வதாக உறுதி

By செய்திப்பிரிவு

’கர்ணன்’ திரைப்படத்தின் சம்பவங்கள் 1995ஆம் ஆண்டு நடந்ததைப் போல இரு தினங்களில் மாற்றுவதாக படத்தின் தயாரிப்புத் தரப்பு உறுதியளித்துள்ளது என்று நடிகர், தயாரிப்பாளர் மற்றும் திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ஏப்ரல் 9-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில், முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் கர்ணன் நிகழ்த்தியிருக்கிறது.

இந்தப் படம் கொடியங்குளம் கலவரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. படத்தில் கொடியங்குளம் என்பது பொடியங்குளம் என்று மாற்றப்பட்டிருந்தது. மேலும் படத்தின் சம்பவங்கள் 1997க்கு முன் நடந்ததாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அதிமுக ஆட்சியின்போது நடந்த கலவரத்தைப் பற்றிய கதை ஏன் திமுக ஆட்சியில் நடந்ததைப் போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்று ஒருசிலர் கேள்வியெழுப்பினர். இதுகுறித்து தயாரிப்புத் தரப்பு எந்தவொரு விளக்கமும் தராத நிலையில், தற்போது இதையொட்டி இன்னும் இரு தினங்களில் படத்தில் மாற்றம் செய்யப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணியின் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

" ‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியங்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் திமுக ஆட்சியில் நடந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. இதனைத் தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி" என்று உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE