'99 சாங்ஸ்' கதையின் ஆரம்பப் புள்ளி; தயாரிப்பாளராக உருவெடுத்தது ஏன்?- ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி 

By செய்திப்பிரிவு

'99 சாங்ஸ்' திரைப்படத்தின் மூலம் சதம் அடிக்கப் போகும் ஏ.ஆர்.ரஹ்மான் தனது முதல் தயாரிப்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். கதையின் ஆரம்பப் புள்ளி, தயாரிப்பாளராக மாறியது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான '99 சாங்ஸ்' திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கில் ஏப்ரல் 16 அன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது.

ஜியோ ஸ்டுடியோஸால் வெளியிடப்படவுள்ள இத்திரைப்படத்தை ரஹ்மானின் தயாரிப்பு நிறுவனமான ஒய்.எம்.மூவிஸ் ஐடியல் என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து தயாரித்துள்ளது.

ரஹ்மானின் முதல் தயாரிப்பான இப்படைப்பின் கதாசிரியரும் அவரே ஆவார். ‘தி தேவாரிஸ்ட்ஸ்’ மற்றும் ‘பிரிங் ஆன் தி நைட்’ புகழ் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். திறமைமிக்க நடிகரான ஏஹன் பட்டை ‘99 சாங்ஸ்’ மூலம் ரஹ்மான் அறிமுகப்படுத்துகிறார். நடிகை எடில்ஸி வர்காஸுக்கு ஜோடியாக ஏஹன் பட் நடித்துள்ளார்.

திரைப்படத்தைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், “என்னுடைய தயாரிப்பு நிறுவனமான ஒய்.எம். மூவிஸின் சார்பாக இந்த பரீட்சார்த்தமான திரைப்படத்திற்காக ஜியோ ஸ்டுடியோஸுடன் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது. பழைய மற்றும் புதிய உலகங்களுடனான ஒரு மனிதனின் போராட்டமே '99 சாங்ஸ்'-ன் மையக்கருவாகும். அதற்கான மாற்று மருந்தாக இசை அமைகிறது. இத்திரைப்படத்தின் இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திறமைமிக்க நடிகர்களான ஏஹன் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ் ஆகியோரை அறிமுகப்படுத்துவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். மனிஷா கொய்ராலா மற்றும் லிசா ரே போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்கள், ரஞ்சித் பாரோட், ராகுல் ராம் போன்ற இசை மேதைகளுடன் இணைந்து பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது” என்றார்.

இப்படம் குறித்து அவர் அளித்த சிறப்பு பேட்டி:

'99 சாங்ஸ்' படக்கதையின் ஆரம்பப் புள்ளி என்ன?

2010-ம் ஆண்டு எனக்குக் கஷ்டமான காலம். அப்போது நிறைய விஷயங்கள் நடந்தன. அவற்றை முடித்து டிசம்பரில் விமானத்தில் வந்தபோது தேவதை கதை மாதிரி ஒரு யோசனை வந்தது. ஒரு பையன், ஒரு பெண்ணை அடைவதற்கு 100 பாட்டுகள் எழுதினால் எப்படியிருக்கும். இந்தக் கருவிலிருந்து நிறைய ஆய்வுகள் மேற்கொண்டு இந்தக் கதையை உருவாக்கினேன். இந்தப் படத்தை இயக்குவதற்கு விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி கிடைத்தார். இதற்கு நிதியளிக்க ஐடியல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் கிடைத்தது. அதன்பின் ஒவ்வொரு கூட்டாளியாகக் கண்டுபிடித்துதான் இந்தப் படம் உருவானது.

முழுக்க இசைப் பின்னணி கொண்டது என்பதால் எளிதாக எழுதிவிட்டீர்களா?

எதுவும் எளிதாக வராது. எளிதாக இருந்தால் அலுப்பு தட்டிவிடும். வாழ்க்கை, அனுபவ அறிவு, இசையின் பல கோணங்கள் ஆகியவற்றைச் சேர்த்து எழுதினேன். சினிமாத் துறையில் மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில் இசை சற்று எளிதானது. வெளியே செல்லத் தேவையில்லை. ஆனால், இந்தப் படப்பிடிப்புக்காக, நான் வெளியே செல்லும்போது பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. வழக்கமாக, நான் அதிகம் பேசமாட்டேன். ஆனால், தற்போது படப்பிடிப்பில் பலர் முன்னிலையில் நாம் சொல்ல வரும் கருத்தை எப்படி தெளிவாகத் தெரிவிப்பது என்பது எல்லாம் பழகிவிட்டது. அந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன்.

தயாரிப்பாளராக உருவெடுத்தது ஏன்?

ஒரு இசையமைப்பாளராக இருந்துவிட்டு, திடீரென வேறு வேலை பண்ணும்போது, அத்துறையைச் சார்ந்த பிரபலத்திடம் சென்று நமது யோசனையைத் தெரிவித்தால், அவர்கள் ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். அதனால் புது நபர்களை வைத்து இந்தப் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தேன். அனுபவம் வாய்ந்த இயக்குநரிடம் சென்றால், அவர்கள் தங்கள் அனுபவ அறிவைத் தருவார்கள். ஆனால், அதைவிட எனக்கு சுதந்திரம் முக்கியம். சின்ன சின்ன விஷயங்கள் தவறாகப் போனாலும், சரிசெய்து கொள்ளலாம். கற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் வெற்றியும் பெற வேண்டும். அந்தச் சமநிலை இந்தக் குழுவால் கிடைத்தது. அதனால் தயாரிப்பாளர் ஆனேன்.

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் அளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE