முதல் பார்வை - ஜோஜி

By செய்திப்பிரிவு

கேரளாவின் மலைக்கிராமம் ஒன்றில் அன்னாசிப் பழத்தோட்டங்கள் சூழ வாழ்ந்து வரும் பணக்காரர் குட்டப்பன். குடும்பத்தை எப்போதும் தன் கட்டுக்குள்ளேயே வைத்திருக்கும் இவருக்கு மூன்று மகன்கள். மூவருமே மத்திய வயதை அடைந்து விட்டவர்கள் என்றாலும் சின்ன சின்ன விஷயங்களை செய்வதற்கு கூட அப்பாவின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள்.

இரண்டாவது மகனின் மனைவி பின்ஸி மட்டுமே அந்த வீட்டை கவனித்துக் கொள்ளும் ஒரே பெண். குட்டப்பனின் கடைசி மகன் ஜோஜி குதிரை வியாபாரத்தில் ஏராளமான பணத்தை இழந்து விடுகிறார். மூவரில் மூத்த மகன் ஜாமோன் மட்டுமே அப்பாவிடம் சற்று நெருக்கமானவராக இருக்கிறார். இரண்டாவது மகன் ஜாய்சனும், அவரது மனைவி பின்ஸியும் எப்படியாவது சொத்தை பிரித்துக் கொண்டு தனியாக செல்லக் காத்திருக்கிறார்கள். எனினும் அப்பாவின் மீதான் பயத்தால் அதைப் பற்றி வாய்திறப்பதில்லை.

இப்படியான சூழலில் ஒருநாள் எதிர்பாராதவிதமாக குட்டப்பன் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகிறார். இந்த சூழலில் மகன்களின் சுயநலம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்குகிறது. இறப்பார் என்று எதிர்பார்த்த தந்தை ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்குப் பின் பாதி குணமடைகிறார். ஆனால் படுக்கையில் இருந்தாலும் அந்த வீட்டின் ராஜாவாகவே இருக்கிறார் குட்டப்பன். ஒரு இக்கட்டான சூழலில் கடைசி மகன் ஜோஜி எடுக்கும் ஒரு விபரீத முடிவு அந்த குடும்பத்துக்கும் பெரும் இன்னலாக முடிகிறது. மகன்களின் எண்ணம் நிறைவேறியதா? ஜோஜியால் அந்த விபரீத முடிவின் விளைவுகளிலிருந்து வெளிவர முடிந்ததா இப்படத்தின் மீதிக் கதை.

வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘மெக்பெத்’ மற்றும் 1985ஆம் ஆண்டு கே.ஜி ஜார்ஜ் இயக்கிய ‘இரகல்’ திரைப்படம் ஆகியவற்றின் சாரத்தை தழுவி உருவாக்கியுள்ள படமே ‘ஜோஜி’.

திலீஷ் போத்தன் - ஃபகத் கூட்டணியின் இது மூன்றாவது படம். இதற்கு முன்பு இந்த கூட்டணியின் ‘மகேஷிண்டே ப்ரதிகாரம்’ மற்றும் ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும்’ படங்களின் க்ளாசிக் அந்தஸ்தால் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ‘ஜோஜி’?

படம் தொடங்கிய உடனேயே கதாபாத்திரங்களின் தன்மைகளும் நம்மோடு ஒன்ற ஆரம்பித்து விடுகின்றன. ஜோமோனின் பதின்பருவ மகன் பாப்பியில் தொடங்கி, குட்டப்பன், ஜாமோன், ஜாய்ஸன், இறுதியாக ஜோஜி என அனைவருக்கும் ஒவ்வொரு குணம். கதாபாத்திர வடிவமைப்பில் இயக்குநர் திலீஷ் போத்தன் - திரைக்கதை ஆசிரியர் ஷ்யாம் புஷ்கரனின் அசுர உழைப்பு தெரிகிறது. படத்தில் நாயகன், வில்லன் என்று தனித்தனி கதாபாத்திரங்கள் இல்லை. சூழ்நிலைக்கேற்ப ஒவ்வொருவரும் நாயகனாகவும், வில்லனாகவும் செயல்படுகிறார்கள். குடிபோதைக்கு அடிமையான மூத்த மகன் ஜாமோன், தந்தை தொடங்கி, ஊர் பாதிரியார் வரை அனைவரிடம் கெஞ்சும் போக்கைக் கொண்டிருக்கும் இரண்டாவது மகன் ஜாய்சன், எப்படியாவது தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி பெரும் பணக்காரனாகி விடத் துடிக்கும் கடைசி மகன் ஜோஜி என ஒவ்வொருவரிடம் அவர்களுக்கான நியாயங்கள் உண்டு.

முதல் அரை மணி நேரம் கதாபாத்திரங்களுக்கிடையிலான உறவுமுறை என்ன என்பதை புரிந்து கொள்ள சிரமம் இருப்பினும் நேர்த்தியாக எழுதப்பட்ட திரைக்கதையின் போக்கில் அது குறையாக தெரியவில்லை. படத்தில் தேவையின்றி எந்த காட்சியும், எந்த கதாபாத்திரமும் இல்லை. சிறிது பிசகினாலும் கொட்டாவி வரவைத்து விடும் ஆபத்தை உணர்ந்து படம் எந்த இடத்திலும் சறுக்கி விடாமல் சீராக கொண்டு சென்றதில் இயக்குநரின் உழைப்பு தெரிகிறது.

ஜோஜியாக ஃபஹத் பாசில். உடல் எடையை வெகுவாக குறைத்திருக்கிறார். வாழ்க்கையில் கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த ஒரு கதாபாத்திரத்தின் உடல்மொழியை காட்சிக்கு காட்சி கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். தந்தை முன்பு கூனிக் குருகுவதாகட்டும், தந்தை அவமானப்படுத்திவிட்டு சென்ற பின்பு அறையின் இருக்கும் பொருட்களை அடித்து உதைத்து கோபத்தை காட்டுவதாகட்டும், படத்துக்குப் படம் மெருகேறிக் கொண்டே இருக்கிறார்.

ஜாமோனாக வரும் பாபுராஜ், ஜாய்சனாக வரும் ஜோஜி முன்டகாயம், தூரத்து உறவினராக வரும் ஷம்மி திலகன் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் குறையின்றி நடித்துள்ளனர். குட்டப்பனாக நடித்திருக்கும் பி.என்.சன்னி சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். எந்த சூழலில் மகன்களை நம்பாத முரட்டுத்தனம் + கண்டிப்பு கலந்த அப்பா பாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். அதிலும் பக்க வாதம் வந்த பிறகு ‘செக்’கில் கையெழுத்துப் போடும் காட்சி செம மாஸ். அதே போல மைத்துனரின் குற்றச் செயல்களுக்கு உறுதுணையான அண்ணியாக உன்னிமாயா பிரசாத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மைத்துனரின் முகத்தில் வெளிப்படும் குற்ற உணர்ச்சியையும், குரூரத்தையும் மறைக்க முகக்கவசம் அணிந்து வரச்சொல்லும் காட்சி ஒரு உதாரணம்.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இரண்டு விஷயங்கள் ஒளிப்பதிவு மற்றும் இசை. படம் முழுக்க பார்வையாளர்களை ஒருவித பதற்றத்துடனே வைத்திருக்கும்படியான ஒளிப்பதிவு. பிற மலையாளப்படங்களில் பச்சை பசேலென கண் கவரும்படி காட்டப்படும் அதே பகுதிகளை கதையின் போக்குக்கு ஏற்ப ஒருவித இருண்ட தன்மையோடு காட்டியிருக்கிறது ஷைஜு காலித்தின் கேமரா. ஜஸ்டின் வர்கீஸின் சர்வதேச தரத்திலான பின்னணி இசை படத்த வெறொரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது. படம் முடிந்த பிறகு அந்த பியானா இசைக் கோர்ப்பு காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. திரைக்கதையின் வேகத்தை குறைக்கு வகையில் பாடல்கள் எதுவும் இல்லாதது பெரும் ஆறுதல்.

முந்தைய இரண்டு படங்களோடு, திலீஷ் - ஃபகத் கூட்டணிக்கு இது ஹாட்ரிக் வெற்றி என்று தான் சொல்லவேண்டும். முந்தைய இரண்டு படங்களுக்கு எந்த விதத்திலும் சளைதததல்ல ‘ஜோஜி’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE