பாலிவுட் படங்களில் நடிக்காதது ஏன்? - ஃபகத் பாசில் விளக்கம்

பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டுமென்றால் இந்தியில் சிந்திக்க வேண்டும் என்று நடிகர் ஃபகத் பாசில் கூறியுள்ளார்.

ஃபகத் பாசில் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஜோஜி’. திலீஷ் போத்தன் இயக்கியுள்ள இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. இப்படம் ஷேக்ஸ்பியரின் ‘மெக்பெத்’ நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்த பல்வேறு தகவல்களை ஃபகத் பாசில் பகிர்ந்துள்ளார். ஐஏஎன்எஸ் ஏஜென்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

''திலீஷ் போத்தன் இயக்குநரவாதற்கு முன்பே ஒரு தேர்ந்த நடிகர். ‘மெக்பெத்’ நாடகம் அவருக்கு ஏற்கெனவே மேடைகளில் பரிச்சயமான ஒன்று. அவர் இயக்குநரான பின்னர், என்னை அழைத்து வித்தியாசமான ஒரு முயற்சியை மேற்கொள்ள விரும்புவதாகக் கூறினார். இப்படம் மெக்பெத் நாடகத்தின் நேரடித் தழுவல் அல்ல. இப்படம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறது.

பாலிவுட் படங்களில் நடிக்கவேண்டுமென்றால் நான் முதலில் சரளமாக இந்தி பேச வேண்டும். என்னால் இந்தி பேச முடியாது என்பது மட்டுமே காரணம் அல்ல. அதையும் தாண்டி ஒரு காட்சியை மேம்படுத்த நான் இந்தியில் சிந்திக்க வேண்டும். ஒரு மொழியைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அங்கு சென்று என்னால் பணிபுரிவது சந்தேகமே''.

இவ்வாறு ஃபகத் பாசில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE