முதற்கட்ட தடுப்பூசி போட்ட பின்பும் நக்மாவுக்கு கரோனா தொற்று 

By செய்திப்பிரிவு

முதற்கட்ட தடுப்பூசிப் போட்டுக் கொண்ட சில நாட்களிலேயே நக்மாவுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

1990-ம் ஆண்டு சல்மான்கான் நடித்த 'பாஹி' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நக்மா. அதனைத் தொடர்ந்து பல்வேறு இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், போஜ்பூரி உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த 'காதலன்' படத்தின் மூலம் அறிமுகமானார்.

2000-ம் ஆண்டுக்கு மேல் போஜ்பூரி படங்களில் கவனம் செலுத்தி வந்தார் நக்மா. 2008-ம் ஆண்டுக்குப் பிறகு திரையுலகில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்காக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் நக்மா.

தற்போது கரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில், முதற்கட்ட கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நக்மா. அடுத்தல் சில நாட்களிலேயே அவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக நக்மா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"சில தினங்களுக்கு முன்பு கரோனாவுக்காக முதற்கட்ட தடுப்பூசி எடுத்துக் கொண்டேன். நேற்று எனக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்.

முதற்கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் அனைவரும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கவும். எந்த வகையிலும் மெத்தனமாக இருக்க வேண்டாம்"

இவ்வாறு நக்மா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE