கரோனாவிலிருந்து மீண்ட லோகேஷ் கனகராஜ்

By செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படங்கள் அடைந்த வெற்றியால், தற்போது முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். அடுத்து கமல் நடிப்பில் உருவாகும் 'விக்ரம்' படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

மார்ச் 14-ம் தேதி இவருக்கு கரோனா தொற்று உறுதியானது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து பல்வேறு திரையுலக பிரபலங்களும் அவர் பூரண நலம் பெற வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், கரோனா தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். இன்று (ஏப்ரல் 6) தனது வாக்கினையும் பதிவு செய்துள்ளார். வாக்களித்துவிட்டுப் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்து லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பதாவது:

"கரோனாவில் இருந்து மீண்டுவிட்டேன். பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. உங்கள் அனைவரது வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. தயவுசெய்து வாக்களியுங்கள்".

இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தற்போது 'விக்ரம்' படத்தின் முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அந்தப் படத்தை முடித்துவிட்டு, பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE