கோவிட்-19 தொற்று பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்‌ஷய் குமார்

கோவிட்-19 தொற்று உறுதியானதால் முன்னெச்சரிக்கையாக நடிகர் அக்‌ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலை அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தியா முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் பல பாலிவுட் பிரபலங்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரன்பீர் கபூர், ஆலியா பட், கார்த்திக் ஆர்யன், ஆமிர் கான், கோவிந்தா, பூமி பெட்னேகர் ஆகிய நடிகர்கள் வரிசையில் தற்போது அக்‌ஷய் குமாரும் பாதிக்கப்பட்டுள்ளார்.

"அனைவரது அன்பான வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. அவை பயனளிக்கின்றன. நான் தற்போது நலமாக உள்ளேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். விரைவில் வீடு திரும்புவேன் என நம்புகிறேன்" என்று அக்‌ஷய் குமார் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அன்று தனக்குக் கரோனா தொற்று உறுதியானதாகவும், வீட்டுத் தனிமையில் இருப்பதாகவும் அக்‌ஷய் குமார் பகிர்ந்திருந்தார். தேவைப்படும் நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றுவதாகவும் தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

அக்‌ஷய் குமார் ’ராம் சேது’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் ’ஹவுஸ்ஃபுல் 5’, ’பச்சன் பாண்டே’, ’அத்ரங்கி ரே’, ’பெல் பாட்டம்’ மற்றும் ’சூர்யவன்ஷி’ ஆகிய படங்களிலும் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE