'நேர்கொண்ட பார்வை'யில் அஜித் தெரியவில்லை, பவன் கல்யாண் தான் தெரிந்தார்: தயாரிப்பாளர் 'தில்' ராஜு  

By செய்திப்பிரிவு

'நேர்கொண்ட பார்வை' படத்தைப் பார்க்கும்போது அதில் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்தால் கச்சிதமாக இருக்கும் என்றும், அதனால் எல்லா காட்சிகளிலும் பவன் கல்யாணே தன் கண்ணுக்குத் தெரிந்ததாகவும் தயாரிப்பாளர் 'தில்' ராஜு கூறியுள்ளார்.

இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பிங்க்'. தமிழில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதை போனி கபூர் தயாரித்தார்.

தற்போது பவன் கல்யாண், அஞ்சலி, நிவேதா தாமஸ் உள்ளிட்டவர்கள் நடிக்க 'வக்கீல் சாப்' என்கிற பெயரில் தெலுங்கில் உருவாகியுள்ளது. தில் ராஜூ மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படம் ஏப்ரல் 9 அன்று வெளியாகவுள்ளது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பிரம்மாண்டமான பொது நிகழ்ச்சி ஒன்று ஹைதராபாதில் நடந்தது. இதில் படத்தின் இணை தயாரிப்பாளர் 'தில்' ராஜு பேசுகையில், "நான் விநியோகஸ்தராக இருந்த காலத்திலிருந்தே பவன் கல்யாண் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பை கவனித்து வந்தேன். நாம் ஒரு நாள் தயாரிப்பாளராக மாறினால் கண்டிப்பாகப் பவன் கல்யாணை வைத்துப் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் தயாரிப்பாளராக மாறிய பின்பு முயற்சி செய்தேன். ஆனால் பல காரணங்களால் அவரை வைத்துப் படம் தயாரிக்க முடியவில்லை. வாய்ப்பு தள்ளிப் போனபடியே இருந்தது.

'பின்க்' திரைப்படத்தைத் தமிழில் போனி கபூர் அஜித் அவர்களை நாயகனாக வைத்து தயாரித்தார். 'நேர்கொண்ட பார்வை' படத்தின் ட்ரெய்லரை போனி கபூர் என்னிடம் பகிர்ந்தார். அதில் அஜித் அவர்களைப் பார்த்த அந்த நொடி, இதில் பவன் கல்யாண் நடித்தால் எப்படி இருக்கும் என்று தான் யோசிக்க ஆரம்பித்தேன். அப்போதிலிருந்தே அதில் நான் அஜித்தைப் பார்க்கவில்லை, பவன் கல்யாணைத்தான் பார்த்தேன்.

படம் தமிழில் வெளியாகி வெற்றி பெற்றவுடன் கண்டிப்பாக இதைத் தெலுங்கில் ரீமேக் செய்யலாம் என்று நினைத்தேன். ஒரு நாள் 'அலா வைகுண்டபுரமுலோ' படப்பிடிப்பில் இயக்குநர் த்ரிவிக்ரமை சந்திக்கச் சென்றேன். அப்போது 'நேர்கொண்ட பார்வை' ரீமேக் குறித்து பேச்சு வந்தது. என் மனதில் இருந்ததை த்ரிவிக்ரமிடம் சொன்னேன். 'பவன் கல்யாணை சந்தித்துப் பேசினீர்களா?' என்று கேட்டார். எனக்குத் தயக்கமாக இருப்பதாகச் சொன்னேன். பின் அவர் தான் பவன் கல்யாணிடம் இது குறித்துச் சொல்லி அவரது சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அப்படித்தான் இந்தப் படம் சாத்தியமானது" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE