சிம்ரன் பிறந்த நாள் ஸ்பெஷல்: நடிப்பாலும் நடனத்தாலும் தனி இடம் பிடித்த நடிகை 

By ச.கோபாலகிருஷ்ணன்

தன் அபார நடிப்புத் திறமையாலும், தனித்துவம் வாய்ந்த நடனத் திறமையாலும் தமிழ் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்திருப்பவரான நடிகை சிம்ரன் இன்று (ஏப்ரல் 4) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

1990களின் இறுதிப் பகுதியில் தமிழ் சினிமாவில் நாயகிகள் வெறுமனே கதாநாயகனுடன் டூயட் பாடிவிட்டுச் செல்லும் அழகுப் பதுமைகளாக வந்துபோய்க் கொண்டிருந்த காலகட்டத்தில் அறிமுகமான சிம்ரன், வழக்கமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கக் கிடைத்த வாய்ப்புகளைத் தான் ஒரு அபாரமான நடிகை என்பதை நிரூபிக்கப் பயன்படுத்திக் கொண்டார். அதேபோல் உலகமயமாக்கலின் தாக்கத்தால் தமிழ் சினிமாவில் நவீன நடன வடிவங்களுக்கான வரவேற்பு அதிகரித்திருந்தபோது அனைத்து வகையான நடனங்களிலும் தனித்திறமை பெற்றிருந்ததும் சிம்ரனின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவரான சிம்ரன் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றினார். அதன் பிறகு ஒருசில பாலிவுட் படங்களில் நடித்தார். அப்படியே கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று ஏனைய தென்னிந்திய மொழி சினிமாக்களில் அறிமுகத் தடம் பதித்துவிட்டு தமிழுக்கு வருகை புரிந்தார். 1997 ஜூலை 4 அன்று 'வி.ஐ.பி', 'நேருக்கு நேர்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. முன்னதில் பிரபுதேவாவுக்கும், பின்னதில் சூர்யாவுக்கும் ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து அன்றைய இளம் நட்சத்திரங்களான விஜய், அஜித், பிரசாந்த், அப்பாஸ் ஆகியோருடன் தொடர்ந்து நடித்துவந்தார்.

விஜய்யுடன் 'துள்ளாத மனமும் துள்ளும் படத்தில்' பார்வை பறிபோன பெண்ணாக மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அஜித்துடன் 'வாலி' படத்தில் கணவனின் அன்புக்கும் அவனது அண்ணனின் பொருந்தாக் காமத்துக்கும் இடையில் ஆட்பட்டிருக்கும் இளம் பெண்ணாக அவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த இரு படங்களும் மிகப் பெரிய வெற்றி பெற அவற்றில் நாயகனுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த சிம்ரனின் கதாபாத்திரமும், அதில் அவருடைய நடிப்பும் முதன்மையான பங்களித்தன.

கமல்ஹாசன். விஜயகாந்த், சரத்குமார், முரளி போன்ற மூத்த நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தார். தெலுங்கிலும் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா, வெங்கடேஷ் என நட்சத்திர நடிகர்களுடன் வெற்றிப் படங்களில் நடித்தார். இயக்குநர் கே.பாலசந்தரின் 100ஆம் படமான 'பார்த்தாலே பரவசம்'. மணிரத்னத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படங்களில் நாயகியாக நடித்தார். 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் தத்துக் குழந்தைக்கும் பெற்ற குழந்தைகளுக்கும் இடையில் தத்தளிக்கும் இளம் தாயாக அவருடைய நடிப்பு அனைவராலும் புகழப்பட்டது.

மணிரத்னம் அடுத்ததாக இயக்கிய 'ஆய்த எழுத்து' படத்திலும் அவரையே நாயகியாக்க முடிவு செய்தார். ஆனால், அந்தப் படத்திலிருந்து சிம்ரன் விலக நேர்ந்தது. பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வசூலில் புதிய வரலாறு படைத்த 'சந்திரமுகி' படத்தில் தலைப்பு கதாபாத்திரத்துக்கு முதலில் பரிசீலிக்கப்பட்டவர் சிம்ரன்தான். அப்போது அவர் கருத்தரித்திருந்ததால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போகவே அந்த வாய்ப்பு ஜோதிகாவுக்குச் சென்றது.

முன்னணி நட்சத்திரமாக இருந்தபோதே 2004இல் திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த அவருக்கு சூர்யாவின் காதல் மனைவியாகவும், அம்மாவாகவும் நடித்த 'வாரணம் ஆயிரம்', ரஜினிகாந்துடன் நடித்த 'பேட்ட' என ஒருசில படங்களில் மட்டுமே அவருடைய நடிப்புத் திறமையையும் அழகையும் சிறப்பாக எடுத்தியம்பிய கதாபாத்திரங்கள் அமைந்தன.

தற்போதைய ட்ரெண்டாக மாறிவரும் ஓடிடி படங்கள், வெப் சீரீஸ்கள் மூலம் சிம்ரன் போன்ற திறமையான கலைஞர்களுக்கு மற்றொரு சாளரம் திறந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் 'நெட்ஃப்ளிக்ஸ்'இல் வெளியான 'பாவக் கதைகள்' ஆந்தாலஜி படத்தில் கலாச்சாரம், சமூகக் கட்டுப்பாடுகளுக்கு பெரும் மதிப்பு கொடுக்கும் குடும்பத் தலைவியாக, மூன்று குழந்தைகளின் அன்னையாக சிம்ரன் நடித்திருந்த விதம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது.

மாதவன் இயக்கி நடித்திருக்கும் 'ராக்கெட்ரி: நம்பி விளைவு', கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரமுடன் 'துருவ நட்சத்திரம்', கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் விக்ரமின் 60ஆம் படமான 'சீயான் 60', 'அந்தாதூன்' இந்தி படத்தின் தமிழ் மறு ஆக்கமான 'அந்தகன்' என சிம்ரன் நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் பட்டியல் அவருடைய ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகம் அளிக்கிறது. நட்சத்திர மதிப்புமிக்க இந்தப் படங்களின் வெற்றி வாய்ப்புகள் சிம்ரனின் நடிப்புப் பங்களிப்பால் பன்மடங்கு உயரும் என்று உறுதியாக நம்பலாம்.

இந்தத் திரைப்பயணம் நீண்ட காலம் தொடர வேண்டும், இன்னும் பல திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் அமையப்பெற்று வெற்றிகளையும் விருதுகளையும் குவிக்க வேண்டும் என்று இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிம்ரனை மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE