கர்நாடகாவில் அதிகரிக்கும் கரோனா தொற்று: திரையரங்குகளில் மீண்டும் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி

By செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வருவதால் கட்டுக்குள் வந்த கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அந்தந்த மாநிலச் சூழலுக்கு ஏற்ப அரசுகள் புதிய ஊரடங்கு, கட்டுப்பாடு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

அப்படி கர்நாடக மாநிலத்திலும் தொற்று அதிகரித்து வருவதால் அம்மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதன்படி பள்ளிக்கு வந்து கொண்டிருந்த 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜிம், நீச்சல் குளங்கள் மூடப்படுகின்றன. ஆன்மிக வழிபாட்டுத் தலங்களில் எந்தவிதக் கூட்டமும் அனுமதிக்கப்படாது. போராட்டங்கள், பேரணிகளுக்கும் அனுமதி கிடையாது. திரையரங்குகளில், பார்களில், உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்குமென்றாலும் வருகைப் பதிவு கட்டாயமில்லை. கர்நாடகாவில் நேற்று புதிதாக 4,991 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டுமே 3,509 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தப் புதிய கட்டுப்பாடு விதிகள் ஏப்ரல் 20 வரை அமலில் இருக்கும். இவற்றை மீறுபவர்களின் இடங்கள் கோவிட் பிரச்சினை தீரும் வரை இழுத்து மூடப்படும் என்று கர்நாடக அரசு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE