முதல் பார்வை: சுல்தான்

By ஸ்கிரீனன்

அப்பா செய்து கொடுத்த சத்தியத்தை மகன் நிறைவேற்றும் கதைதான் 'சுல்தான்'

சென்னையில் பெரிய தாதாவாக வலம் வருகிறார் நெப்போலியன். அவரிடம் நூற்றுக்கணக்கான ரவுடிகள் வேலை செய்கிறார்கள். அனைவருமே ஒருவருக்கு ஒருவர் பாசமாக இருக்கிறார்கள். நெப்போலியனின் மனைவி அபிராமிக்கு இந்த ரவுடித் தொழில் பிடிக்கவில்லை. தன் மகன் ரவுடியாக இருக்கவே கூடாது என்று ஆசை. ஆனால், பிரசவத்தில் அவர் இறக்க மகன் பிறக்கிறான். அந்தக் குழந்தைதான் கார்த்தி. அவரை ரவுடிகள்தான் வளர்க்கிறார்கள்.

ரோபோட்டிக்ஸ் இன்ஜினீயராகப் பணிபுரியும் கார்த்திக்கும் இவர்கள் யாரும் ரவுடியாக இருக்கக் கூடாது என்று ஆசை. அந்தச் சமயத்தில் சென்னையில் ரவுடிகள் என்கவுன்ட்டர் தொடங்குகிறது. தனது அப்பாவுடன் இருந்த ரவுடிகளைக் காப்பாற்ற முயற்சிகள் எடுக்கிறார் கார்த்தி. அப்போது அப்பா செய்து கொடுத்த சத்தியம் தெரியவருகிறது. அது என்ன சத்தியம், ரவுடிகளை என்கவுன்ட்டரிலிருந்து கார்த்தி காப்பாற்றினாரா என்பதுதான் மீதிக் கதை.

நல்லதொரு கமர்ஷியல் கதையைக் கையிலெடுத்துள்ளார் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். கதையின் நாயகன் சுல்தானாக கார்த்தி. காதல், எமோஷன், ஆக்‌ஷன் என ஒட்டுமொத்தக் கதையையும் தோளில் சுமந்துள்ளார். அப்பாவின் சத்தியம், வில்லன்களுடன் ஆக்ரோஷமாக மோதுவது என அவருக்கு ஏற்ற களத்தை தனது நடிப்பின் மூலம் சிறப்பாகச் செய்திருக்கிறார். நாயகியாக ராஷ்மிகா மந்தனா. தமிழில் முதல் படம். கதைக்கு முக்கியமான கதாபாத்திரம்தான் என்றாலும், நடிப்பதற்குப் பெரிதாக வேலை இல்லை. பல இடங்களில் அவரது முகச் சுழிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

கார்த்தியின் அப்பாவாக நெப்போலியன். சின்ன கதாபாத்திரம்தான் என்பதால் பெரிதாக மனதில் பதியவில்லை. அவரிடம் பணிபுரிபவராக லால். கார்த்திக்குப் பிறகு இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இவருடையதுதான். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து பிரமாதமான நடிப்பை வழங்கியுள்ளார். ஆனால், இவருடைய டப்பிங்கை கொஞ்சம் சரி செய்திருக்கலாம். சில இடங்களில் அவர் பேசுவது புரியவில்லை. அதற்குப் பிறகு பெரிய ரவுடிக் கூட்டம்தான் படத்தின் ஹைலைட். பலருக்கும் முக்கியத்துவம் இல்லை என்றாலும், சிலர் மனதில் பதிகிறார்கள். வில்லத்தனம் கலந்த அர்ஜய், சண்டை போடும் காமராஜ், காது கேட்காத சென்றாயன் உள்ளிட்ட சிலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஓட்ட லாரி கதாபாத்திரத்தில் யோகி பாபு. சில கவுண்ட்டர் வசனங்களுக்குத் திரையரங்குகளில் சிரிப்புச் சத்தத்தைக் கேட்க முடிகிறது. ஆனால், அவருடைய கதாபாத்திரத்தை ஒரு கட்டத்தில் கழட்டிவிட்டார்கள் போல. கார்த்தியுடன் வெளிநாட்டிலிருந்து வருபவராக சதீஷ். 2 காட்சிகள்தான். அதோடு அவரையும் காணவில்லை.

நிலப்பரப்பு, எக்கச்சக்க நடிகர்கள் சார்ந்த கதையில் ஒளிப்பதிவின் பங்கு அதிகம். படத்தின் பிரம்மாண்டத்தை ஒளிப்பதிவில் பிரமாதமாகக் கொண்டு வந்திருக்கிறார் சத்யன் சூரியன். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியின் ஒளிப்பதிவு பிரமாதம். விவேக் - மெர்வின் இசையில் பாடல்கள் கதைக்குப் பொருந்தியுள்ளன. யாரையும் இவ்வளோ அழகா பார்க்கல பாடலும், படமாக்கப்பட்ட விதமும் அற்புதம். படத்தின் பின்னணி இசையை யுவன் அமைத்துள்ளார். அவசர அவசரமாகச் செய்துள்ளார். ஆனாலும், காட்சிகளின் பிரம்மாண்டத்தை தன் இசையாலும் உணர்த்தியிருக்கிறார் என்று சொல்லலாம்.

இந்தப் படத்தின் களம் புதியது என்றாலும், திரைக்கதை அமைப்பில் வரும் காட்சிகள் பல படங்களை ஞாபகப்படுத்துகின்றன. இதில் விவசாயிகள் பிரச்சினைகள், அதை முன்வைத்து வசனங்கள் எனக் கொஞ்சம் போரடிக்கிறது. கார்த்திக்கு வரும் பிரச்சினைகள், ரவுடிகளுடன் ஊருக்குச் செல்வது, ராஷ்மிகா கதாபாத்திரத்தை வைத்து வரும் காட்சிகள், ரவுடிகள் கூட்டத்துக்குள் இருக்கும் வில்லன், மாஸான சண்டைக்காட்சியுடன் இடைவேளை என முதல் பாதியே நல்ல கமர்ஷியல் படம் பார்த்த திருப்தியைக் கொடுத்துவிடுகிறார்கள்.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு, இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். முழுக்க ஹீரோவுக்கு மட்டுமே முக்கியத்துவத்தை வைத்து எழுதியிருப்பதால், மீதி கதாபாத்திரங்கள் எல்லாம் அவ்வப்போது தலைகாட்டிவிட்டுச் செல்கின்றன. இரண்டாம் பாதியில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் ரசிக்கத்தக்கப் படமாக இருந்திருக்கும்.

இரண்டாம் பாதியில் என்கவுன்ட்டரில் ரவுடிகளைக் காப்பாற்ற கார்த்தி போடும் திட்டம், விவசாயத்தைக் கையில் எடுக்கும் விதம், கார்ப்பரேட் வில்லன் எனக் காட்சிகள் நகர்கின்றன. அதில் புதிதாக ஒன்றுமே இல்லை. வழக்கமாக தமிழ் சினிமாவில் பார்த்துப் புளித்துப் போன காட்சிகள்தான். இரண்டாம் பாதியில் வரும் ஒரு சண்டைக் காட்சி நாயகி பார்ப்பதற்காக மட்டுமே வைக்கப்பட்டிருக்கிறது. கதைக்குத் தேவையே இல்லை.

மொத்தத்தில் இந்தக் கோடை காலத்தில் திரையரங்கில் ஏசியில் உட்கார்ந்து பார்க்கக் கூடிய படம்தான் 'சுல்தான்'. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் கண்டிப்பாக ரசிக்கலாம். புதுமை விரும்பிகளாகச் சென்றால் சோகமாகத்தான் வெளியே வருவார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE