பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹரிக்கு கரோனா தொற்று

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று புதிதாக 81,466 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு பாதிப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே 84.61 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதும் துரதிர்ஷ்டவசமாக பப்பி லஹரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருந்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு ரசிகர்களின் வாழ்த்தும், பிரார்த்தனைகளும் தேவை. அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரும் நலத்துடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று பப்பி லஹரி சார்பாக கேட்டுக் கொள்கிறோம்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாலிவுட் சினிமாவில் பாப் இசையை அறிமுகப்படுத்திய பெருமை பப்பி லஹரியைச் சேரும். தமிழிலும் 'அபூர்வ சகோதரிகள்', 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா', 'பாடும் வானம்பாடி' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏராளமான பாடல்களையும் பாடியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE