என் பயணத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் பால்கே விருதைச் சமர்ப்பிக்கிறேன்: ரஜினி நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

தன் பயணத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் பால்கே விருதை அர்ப்பணிப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று (ஏப்ரல் 1) ரஜினி, தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பதிவில் அறிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தனக்கு பால்கே விருது அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"இந்தியத்‌ திரையுலகின்‌ மிக உயரிய தாதா சாகேப்‌ பால்கே விருது எனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும்‌, பாரத பிரதமர்‌ நரேந்திர மோடிக்கும்‌ என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

என்னில்‌ இருந்த நடிப்புத்‌ திறமையை கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஒட்டுநரான நண்பன்‌ ராஜ்‌ பகதூருக்கும்‌, வறுமையில்‌ வாடும்‌போதும்‌ என்னை நடிகனாக்கப் பல தியாகங்கள்‌ செய்த என்‌ அண்ணன்‌ சத்யநாராயணா ராவ்‌ கெய்க்வாட்‌டுக்கும்‌, என்னைத் திரையுலகிற்கு அறிமுகம்‌ செய்து, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர்‌ பாலசந்தருக்கும்‌, திரையுலகத் தயாரிப்பாளர்கள்‌, இயக்குநர்கள்‌, தொழில்நுட்பக் கலைஞர்கள்‌, விநியோகஸ்தர்கள்‌, திரையரங்க உரிமையாளர்கள்‌, ஊடகங்கள்‌ மற்றும்‌ என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ்‌ மக்களுக்கும்‌, உலகெங்கிலும்‌ உள்ள எனது ரசிகப் பெருமக்களுக்கும்‌ இந்த விருதினைச் சமர்ப்பிக்கிறேன்‌.

என்னை மனமார்ந்து வாழ்த்திய தமிழக முதல்வர்‌ எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்‌ ஓ.பன்னீர்‌செல்வம்‌‌, எதிர்க்கட்சித் தலைவர், நண்பர் மு.௧.ஸ்டாலின்‌, நண்பர்‌ கமல்‌ஹாசன், மத்திய, மாநில அரசியல்‌ தலைவர்கள்‌, நண்பர்கள்‌, திரையுலக நண்பர்கள்‌, என்னுடைய நலம்‌ விரும்பிகள் என அனைவருக்கும் என்னுடைய நன்றி‌".

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது ட்விட்டர் பதிவில் ரஜினி, "இந்திய அரசுக்கு என் மன்மார்ந்த நன்றி, பிரதமர் நரேந்திர மோடி, பிரகாஷ் ஜவடேகர், எனக்கு தாதா சாகேப் பால்கே விருதை அளித்த நடுவர் குழுவைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. எனது இந்தப் பயணத்தில் என்னுடன் பங்கெடுத்த அனைவருக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன். இறைவனுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கு பால்கே விருது அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு ரஜினி, "நரேந்திர மோடி ஜி, உங்கள் வாழ்த்தால், மிகவும் பெருமைக்குரிய தாதா சாகேப் பால்கே விருதால் மிகுந்த கவுரவத்தை உணர்கிறேன். உங்களுக்கும் இந்திய அரசுக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE