டிசி மற்றும் ஸ்னைடர் ரசிகர்களின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஒருவழியாக வெளியாகிவிட்டது ‘ஸாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக்’.
2017ஆம் ஆண்டு வெளியான ‘ஜஸ்டிஸ் லீக்’ உருவாக்கத்தின்போது தனது மகளின் மரணத்தால் பாதியில் படத்தை விட்டுச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார் ஸாக் ஸ்னைடர். மீதிப் படத்தை எடுத்து முடிப்பதற்காக இயக்குநர் ஜாஸ் வீடனை நியமித்தது வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம். படமும் வெளியானது. ஆனால் ஸாக் ஸ்னைடர் எடுத்திருந்த பெரும்பாலான காட்சிகளை வீடன் கொத்து பரோட்டா போட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டினர் வெறித்தனமான டிசி ரசிகர்கள். ஸ்னைடர் எடுத்திருந்த காட்சிகளைத் திரைப்படமாக வெளியிட வேண்டும் என்று சமூக வலைதளங்கள் மட்டுமல்லாது தெருவிலும் இறங்கிப் போராடினர். அப்படி நீண்ட போராட்டத்தின் (?) விளைவாக வெளியான ‘ஸ்னைடர் கட்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.
டூம்ஸ்டே என்ற ராட்சத வில்லனால் சூப்பர்மேன் (ஹென்றி கெவில்) கொல்லப்பட்டு விட்டார். அவரது மரணம் தந்த சோகத்தில் இருந்து இன்னும் பேட்மேன் (பென் அஃப்லெக்) மீளவில்லை. இன்னொரு பக்கம் ஆதிகாலம் முதல் பல்வேறு உலகங்களை அழித்துக் கொண்டிருக்கும் வில்லன் டார்க்ஸீட். அதற்காக மதர் பாக்ஸ் என்ற பெயர்கொண்ட மூன்று பெட்டிகளை அவர் பயன்படுத்துகிறார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை பூமியை அழிக்க முற்படும்போது அமேசான்ஸ், அட்லாண்டியன்ஸ், மனிதர்கள் ஆகியோரால் வீழ்த்தப்படுகிறார் டார்க்ஸீட். அந்த மூன்று பெட்டிகளும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு மூன்று இடங்களில் மறைத்து வைக்கப்படுகின்றன.
» 'வலிமை' அப்டேட்: பெரும் விலைக்குத் தமிழக உரிமை விற்பனை
» பாடல் படப்பிடிப்புடன் தொடங்கும் 'தளபதி 65': வைரலாகும் நடன இயக்குநரின் ட்வீட்
தற்போது டார்க்ஸீட் தன்னுடைய அடியாளான ஸ்டெப்பன்வொல்ஃப் என்ற ஒருவரை பூமிக்கு அனுப்பி அந்த மூன்று பெட்டிகளைக் கண்டுபிடிக்கச் சொல்கிறார். அவை கிடைத்ததும் உடனடியாக பூமியை அழிக்கவும் உத்தரவிடுகிறார். இதனை எப்படியோ அறிந்துகொள்ளும் பேட்மேன் அவ்வளவு பெரிய வில்லனை எதிர்க்க வேண்டுமென்றால் ஒரு சூப்பர்ஹீரோ குழுவால்தான் முடியும் என்று தீர்மானிக்கிறார். இதற்காக வொண்டர் வுமன் (கால் கேடட்), சைபார்க் (ரே ஃபிஷர்), ஃப்ளாஷ் (எஸ்ரா மில்லர்), அக்வாமேன் (ஜாஸன் மாமோ) ஆகியோரை ஒன்றிணைக்கிறார். ஆனால், சூப்பர்மேனின் உதவியில்லாமல் தங்களால் வெற்றிபெற முடியாது என்று அறியும் சூப்பர்ஹீரோ குழு, சூப்பர்மேனுக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் முயற்சியில் இறங்குகிறது. சூப்பர்மேன் மீண்ரும் உயிர்த்தெழுந்தாரா? ஸ்டெப்பன்வொல்ஃபால் மூன்று பெட்டிகளையும் ஒன்றிணைக்க முடிந்ததா? டார்க்ஸீடின் நோக்கம் நிறைவேறியதா? என்பதை நான்கு மணி நேரப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
2017ஆம் ஆண்டு வெளியான ‘ஜஸ்டிஸ் லீக்’ படத்தில் தான் எடுத்த காட்சிகளையும், மேலும் சில புதிய காட்சிகளையும் எடுத்துக்கொண்டு ஒரு முழுப் படத்தையும் உருவாக்கியுள்ளார் ஸாக் ஸ்னைடர். பழைய படத்தில் இருந்த பிரச்சினைகளையும், அது தோல்வி அடைந்ததற்கான காரணங்களையும் ஸ்னைடர் நன்கு உள்வாங்கியே இந்தப் படத்தை உருவாக்கியிருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. பழைய படத்தின் மிகப்பெரிய பிரச்சினையே கதாபாத்திரங்களின் வலுவில்லாத பின்னணி. ‘அவெஞ்சர்ஸ்’ என்ற ஒரு படத்துக்காக மார்வெல் நிறுவனம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகாலம் எடுத்துக்கொண்டது. ஆனால், அதை விட ஆழம் கொண்டதாகச் சொல்லப்படும் டிசி கதாபாத்திரங்களையும் அவர்களது தனித்தனி குணாதிசயங்களையும் சொல்ல வெறும் இரண்டே மணி நேரத்தை எடுத்துக் கொண்டது டிசி நிறுவனம்.
இந்தப் படத்தில் ஓரளவு அந்தப் பிரச்சினையைச் சரி செய்துள்ளார் ஸ்னைடர். நான்கு மணி நேரத்தில் முதல் இரண்டு மணி நேரம் கதாபாத்திரங்களின் பின்னணியை மிக ஆழமாக அலசியுள்ளார். முந்தைய படத்தில் சைபார்க் மற்றும் ஃப்ளாஷ் கதாபாத்திரங்கள் ஏதோ துணை நடிகர்களுக்குக் கொடுப்பதைப் போன்ற ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் சைபார்க் மற்றும் அவரது தந்தைக்கும் இடையிலான உணர்வுப் போராட்டம், அவரது பால்ய கால நினைவுகள், அவருடைய முழுமையான சக்தி என விரிவாகக் காட்டப்பட்டுள்ளது. அதே போல ப்ளாஷ் கதாபாத்திரத்தின் ஆளுமைத் திறன் இந்தப் படத்தில் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வொண்டர் வுமன், அக்வாமேன், ஆல்ஃப்ரெட், லாயிஸ் லேன் என ஒவ்வொருவருக்கும் கூட விரிவான காட்சிகள் படத்தில் உள்ளன.
படத்தின் மிகப்பெரிய பிளஸ் கிராபிக்ஸ். முந்தைய படத்தில் டிசி காமிக்ஸின் தன்மையிலிருந்து விலகியது போல கண்ணைக் கூசும் வகையில் கிராபிக்ஸ் அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் அதை முற்றிலுமாக மாற்றி வழக்கமான டிசி படங்களின் பின்னணியிலேயே அமைத்துள்ளனர். வில்லன் ஸ்டெப்பென்வொல்ஃபின் தோற்றம் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு பழைய ஜஸ்டிஸ் லீக் வெளியானபோது ரசிகர்கள் வைத்த முக்கியக் குற்றச்சாட்டு ஸ்டெப்பன்வொல்ஃப் தோற்றம். அதை இப்படத்தில் ஸ்னைடர் சரி செய்தது டிசி ரசிகர்களுக்கு ஆறுதலான் விஷயம். கூடவே படத்தின் பெரும்பாலான காட்சிகளும் சிஜியில் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளன.
குறிப்பிட்டுக் கூறவேண்டிய இன்னொரு விஷயம் இசை. முந்தைய படத்தில் டேனி எல்ஃப்மேன் இசை விமர்சனங்களுக்கு ஆளாகவில்லை என்றாலும், குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்கவில்லை. ஆனால், தற்போது இப்படத்துக்கு ஜங்கி எக்ஸ்எல் இசையமைத்துள்ளார். பழைய ஜஸ்டிஸ் லீக் படத்துக்கும் முதலில் ஒப்பந்தம் ஆனவர் இவரே. ஆனால், பிறகு பல்வேறு காரணங்களால் இவருக்கு பதில் டேனி எல்ஃப்மேன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தச் சூழலில் மீண்டும் ஜங்கி எக்ஸ்எல்-லை ஸ்னைடர் தன்னுடைய படத்தில் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சூப்பர்ஹீரோ படத்துக்கு இதை விட யாராலும் சிறந்த இசையைக் கொடுத்துவிட முடியாது என்று கூறும் அளவுக்கு தன்னுடைய பணியைச் செவ்வனே செய்துள்ளார் ஜங்கி எக்ஸ்எல்.
பழைய படத்தில் எந்தெந்த விஷயங்கள் எல்லாம் விமர்சனத்துக்குள்ளானதோ அவற்றையெல்லாம் விவரமாக நீக்கிய ஸ்னைடரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். குறிப்பாக பார்ப்பவர்களின் பொறுமையை சோதிக்கும் ஃப்ளாஷ் காமெடி வசனங்கள். மார்வெல் படப் பாணி காமெடி முயற்சி செய்கிறேன் பேர்வழி என்று பல காட்சிகளில் எரிச்சலை வரவழைத்திருப்பார்கள். அவை யாவும் இந்தப் படத்தில் மிகப்பெரிய ஆறுதல். அதே போல பழைய படம் வெளியானபோது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்ட விஷயம் சூப்பர்மேனின் மீசை. அப்போது‘மிஷன் இம்பாஸிபிள்’ படத்தில் ஹென்றி கெல்வி ஒப்பந்தமாகியிருந்ததால் மீசையை எடுக்க முடியாத நிலை. இதனால் அந்தப் படத்தில் சூப்பர்மேனின் முகத்தை சிஜியில் குதறி வைத்திருப்பார்கள். அது இப்படத்தில் முற்றிலுமாகச் சரிசெய்யப்பட்டுள்ளது. படத்தின் கடைசி ஒரு மணி நேரம் சூப்பர்ஹீரோ ரசிகர்களுக்கு விஷுவல் விருந்து என்று சொல்லலாம்.
முந்தைய படத்தில் ஸ்டெப்பன்வொல்ஃப் தான் முக்கிய வில்லன். ஆனால், இந்தப் படத்தில் ஸ்டெப்பன்வொல்ஃபுக்கு மேலே டார்க்ஸீட் என்ற ஒரு பெரிய வில்லனை அறிமுகப்படுத்தி டிசி படங்களில் அடுத்த பாகங்களுக்கான அச்சாரத்தைப் போட்டுள்ளார் ஸ்னைடர். இதன்பிறகு வரும் டிசி படங்களில் டார்க்ஸீடின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
படத்தின் குறையென்று சொன்னால் நிச்சயமாக நான்கு மணி நேர நீளம். இந்தப் படம் 2017ஆம் ஆண்டு வந்திருந்தால் கூட இதில் உள்ள காட்சிகளை ஸ்னைடர் வைத்திருப்பாரா என்பது சந்தேகமே. அதிலும் பழைய படத்தைப் பார்த்தவர்களுக்கு முதல் இரண்டு மணி நேரம் மிகப்பெரிய சோதனை. எப்படியும் நேரடியாக ஆன்லைனில் வெளியிடுவது என்று முடிவெடுத்த பின் ஏன் முழுப் படமாக வெளியிட வேண்டும் என்று புரியவில்லை. இப்படத்தை ஒரு மினி தொடராக வெளியிட்டிருந்தால் கூட முதல் பாதியில் அலுப்பு தட்டுவதைத் தவிர்த்திருக்க முடியும்.
சைபார்க் மற்றும் தந்தை இடையிலான பந்தத்தை விளக்க எதற்கு இவ்வளவு காட்சிகள்? அதனைக் குறைத்துவிட்டு அக்வாமேன் கதாபாத்திரத்துக்கு இன்னும் சில வலுவான காட்சிகளைச் சேர்த்திருக்கலாம். சூப்பர்மேனின் கருப்பு உடை, மார்ஷியன் மேன்ஹண்டன் பாத்திரம், கிளைமேக்ஸுக்கு பிந்தைய பேட்மேனின் கனவுக் காட்சி போன்ற விஷயங்கள் படத்தில் தெளிவாக விளக்கப்படவில்லை.
முதல் படத்தில் மிஸ் ஆன கதாபாத்திரங்களின் ஆழமான பின்னணி, உணர்வுபூர்வமான காட்சிகள், சிறந்த இசை, உறுத்தாத கிராபிக்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் முந்தைய படத்தை விட இதுவே சிறந்த படம் என்று கண்ணை மூடிச் சொல்லலாம். ஆனால், நான்கு மணி நேரத்தில் இப்படத்தை ஆழமாகச் சொல்ல ஸ்னைடருக்குக் கிடைத்த வாய்ப்பு வெறும் இரண்டே மணி நேரத்தில் இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட்டிருந்தால் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.
2017 ‘ஜஸ்டிஸ் லீக்’ ஒரு கரண்டி மாவில் சுடப்பட்ட கல்தோசை என்றால் இந்த ‘ஸாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக்’ அதே கரண்டி மாவில் பெரிதாகச் சுடப்பட்ட மசால் தோசை.
முக்கிய செய்திகள்
சினிமா
56 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago