ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய முயற்சியால் இளம் தலைமுறையினருக்கு ஊக்கம்: அனிருத்

By செய்திப்பிரிவு

ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய முயற்சிகள் இளம் தலைமுறையினருக்கு ஊக்கமாக இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘99 ஸாங்ஸ்’. இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் பணிபுரிந்த இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் இதர இசையமைப்பாளர்கள் என ஒரு பெரும் படையே கலந்து கொண்டது.

இந்த விழாவில் இசையமைப்பாளர்களில் யுவன், ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத் மூவருமே கலந்து கொண்டனர். இதில் இசையமைப்பாளர் அனிருத் பேசியதாவது:

"நான் சிறுவயதில் முதன்முதலாகக் கேட்க ஆரம்பித்தது ‘காதலன்’ பட பாடல்கள். அது தான் எனக்கு முதல் ஊக்கமாக அமைந்தது. பள்ளிக்காலங்களில் நானும் எனது நண்பர்கள் அனைவரும் ரஹ்மான் வெறியர்களாக இருந்தோம். அவரது பாடல் கேசட் வெளியானதும் முதல் நாளே எப்படியாவது போய் வாங்கி விடுவோம்.

அவரது பாடல் கேசட்களைத்தான் பலமுறை கேட்டுத் தேய்ந்து மீண்டும் போய் வாங்குவோம். இதே அனுபவம் அனைவருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

எனக்கும் எனது நண்பன் லியோனுக்கும் ரஹ்மான் சார் ஒரு கீ போர்ட் பரிசளித்தார். இசையைத் தேர்ந்தெடுக்க அதுதான் முக்கிய காரணமாக அமைந்தது. இப்போதும் அவர் புதிய விஷயங்களை முயற்சி செய்வது எங்களைப் போன்ற இளம் தலைமுறையினருக்கு ஊக்கமாக இருக்கிறது"

இவ்வாறு அனிருத் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE