ஓடிடி தயாரிப்பில் களமிறங்கும் ஏவிஎம் நிறுவனம்: அறிவழகன் இயக்குகிறார்

By செய்திப்பிரிவு

ஓடிடி தயாரிப்பில் களமிறங்குகிறது ஏவிஎம் நிறுவனம். முதல் தயாரிப்பை அறிவழகன் இயக்குகிறார்.

75 ஆண்டுகளுக்கும் மேலாகப் படத் தயாரிப்பில் இருக்கும் நிறுவனம் ஏவிஎம். இந்நிறுவனம் முன்னணி நடிகர்கள் அனைவரையும் கொண்டு படங்களைத் தயாரித்துள்ளது. தமிழ்த் திரையுலகில் இருக்கும் பழம்பெரும் நிறுவனமான ஏவிஎம், தங்களுடைய படத் தயாரிப்பை நிறுத்திவிட்டது.

தற்போது ஓடிடி நிறுவனத்துக்கான தொடர்கள் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது ஏவிஎம் நிறுவனம். 'தமிழ் ஸ்டாக்கர்ஸ்' என்ற பெயரில் உருவாகும் புதிரான, த்ரில்லர் தொடரை அறிவழகன் இயக்குகிறார். தற்போது அருண் விஜய் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் அறிவழகன். அதனை முடித்துவிட்டு இந்தத் தொடருக்கான பணிகளைக் கவனிக்கவுள்ளார்.

தமிழ்த் திரைப்பட உலகில் சமீபகாலமாக நடக்கும் திரைப்படத் திருட்டு கும்பலை மையமாகக் கொண்டு அதன் யதார்த்தங்களைச் சொல்லும் தொடராக உருவாகவுள்ளது 'தமிழ் ஸ்டாக்கர்ஸ்'. இந்தத் தொடரின் சோனி லைவ்வில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு படைப்பைச் சட்டவிரோதமாகவும், அங்கீகாரம் இல்லாமலும் நகல் எடுப்பது பெரும் குற்றம் மட்டுமின்றி, படைப்புத் திருட்டு என்பது, உலகெங்கும் உள்ள படைப்பாளர்களின் பெரும் கவலைகளில் ஒன்றாகும். இந்தியாவில் தமிழ்த் திரையுலகம், பல்வேறு ஆன்லைன் திருட்டு வலைத்தளங்களின் காரணமாக இந்தப் பிரச்சினையுடன் முடிவில்லாத போரை நடத்தி வருகிறது.

இந்தக் கதை அந்தத் திருட்டு உலகின் இருண்ட பக்கத்தை ஆழமாகச் சென்று காட்டுகிறது. மேலும், திருட்டு உள்ளடக்கத்தை வெளியிடுவதில் ஈடுபட்டுள்ள குழுவை அடையாளம் காட்டுவதற்கு திரைத்துறையின் தொடர்ச்சியான போரைப் பற்றியும் சொல்கிறது 'தமிழ் ஸ்டாக்கர்ஸ்'.

இந்தத் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE