ஆளைப் பார்த்து எடை போடக்கூடாது என்பதை யோகிபாபுவிடம் கற்றுக் கொண்டேன்: கார்த்தி

By செய்திப்பிரிவு

ஒருவரது உருவத்தைப் பார்த்து எதையும் தீர்மானிக்கக் கூடாது என்பதை தான் யோகி பாபுவிடம் கற்றதாக நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சுல்தான்'. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருக்கு, இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புதன்கிழமை காலை சென்னையில் நடந்தது.

இதில் யோகி பாபு கலந்து கொள்ள முடியவில்லையென்றாலும் அவரைப் பற்றிப் படத்தின் நாயகன் கார்த்தி பேசினார்.

" ஆளைப் பார்த்து எடை போடக் கூடாது என்பதை யோகிபாபுவைப் பார்த்து தான் கற்றுக் கொண்டேன். அவருடன் முதல் முறையாக நடிக்கிறேன். ஆமிர் அவர்களின் அலுவலகத்தில் அவர் வெளியே நிற்பதைப் பார்த்திருக்கிறேன். அதன் பிறகு அவர் படிப்படியாக சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்தது, யாமிருக்க பயமே படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து நான் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். நேரில் அவரை சந்தித்த போதுதான் அவர் எவ்வளவு பெரிய புத்திசாலி என்பது புரிந்தது.

அவ்வளவு நாட்கள் லொள்ளு சபாவில் பணிபுரிந்து, ஒரு காட்சியை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார். ஒரு வார்த்தை சொன்னால் அதை வைத்து நூறு விஷயங்கள் சொல்வார். ஒரு நாள் மொட்டைமாடியில் கிரிக்கெட் ஆடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்தார். அவர் நல்ல விளையாட்டு வீரர் என்பதும் அப்போதுதான் தெரிந்தது. நடிகர் சங்க விழா ஒன்றில் கால்பந்து சிறப்பாக ஆடினார்" என்று கார்த்தி பாராட்டிப் பேசினார்.

ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்க வெளியீட்டுக்கு சுல்தான் தயாராகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE