சிவசாமிக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி: தனுஷ்

By செய்திப்பிரிவு

சிவசாமிக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் தனுஷ் தெரிவித்தார்.

மார்ச் 22-ம் தேதி 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த மாநில மொழித் திரைப்படமாகத் தமிழில் 'அசுரன்' தேர்வானது. படத்தின் நாயகன் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். 'ஆடுகளம்' படத்துக்குப் பிறகு அவர் வெல்லும் இரண்டாவது தேசிய விருது இது.

முன்னணித் திரையுலகினர் பலரும் 'அசுரன்' படக்குழுவினருக்குத் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். தேசிய விருது வென்ற மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருப்பதால், தனுஷ் இதில் கலந்து கொள்ளவில்லை.

ஆனால், வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலமாக பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார் தனுஷ்.

அதில் அவர் கூறியதாவது:

"வணக்கம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்ன சொல்வதென்று தெரியவில்லை. என்ன சொல்ல வேண்டும் என நினைத்தேனோ, அதை அறிக்கையாக வெளியிட்டுவிட்டேன். தொடர்ச்சியாக நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி.

'அசுரன்' ரொம்பவே ஸ்பெஷலான படம். நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே ரொம்பப் பிடித்த கதாபாத்திரம் சிவசாமி. அதற்கு தேசிய அங்கீகாரம் கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருக்கும் நன்றி. குறிப்பாக வெற்றிமாறனுக்குப் பெரிய நன்றி. என் தயாரிப்பாளர் தாணு சாருக்கு ரொம்ப ரொம்ப நன்றி".

இவ்வாறு தனுஷ் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE