‘தாம் தூம்’ முதல் ‘தலைவி’ வரை - சர்ச்சைகளுக்கு மத்தியில் சாதனை படைத்த கங்கணா

By செய்திப்பிரிவு

இந்திய சினிமாவில் கங்கணா அளவுக்கு அதிக வசவுகளை, விமர்சனங்களை எதிர்கொண்ட ஒரு நடிகை வேறு யாரும் இருக்க முடியாது. கடந்த இரண்டு ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலைக்குப் பிறகு செய்திகளிலும், சமூக ஊடகங்களிலும் கங்கணாவின் பெயர் இடம் பெறாத நாட்களே இல்லை எனலாம். அப்படி ‘சர்ச்சைகளின் நாயகி’ என்று அழைக்கும் அளவுக்கு பாலிவுட் சினிமாவை ஆட்டி வைத்திருந்தார்.

இமாச்சல் பிரதேசத்தில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், வாரிசுகளின் ஆதிக்கம் நிறைந்த பாலிவுட் சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இன்றி நுழைந்து இன்று நான்காவது தேசிய விருதைப் வென்றுள்ளார். 2008ஆம் ஆண்டு வெளியான ‘தாம் தூம்’ படத்தில் நடித்தபோது கங்கணா மட்டுமல்ல நாமும் நினைத்திருக்க மாட்டோம் 12 வருடங்களுக்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில் இந்த பெண் நடிப்பாரென்று.

இமாச்சல் பிரதேசத்தின் பம்ப்லா என்று அழைக்கப்படும் ஒரு சிறிய ஊரில் பிறந்த கங்கணாவை எப்படியாவது டாக்டராக ஆக்கியே தீர வேண்டும் என்பது அவரது பெற்றோர் கனவு. ஆனால் அதில் ஆர்வமில்லாத கங்கணா 12-ம் வகுப்பில் வேதியியல் பாடத்தில் தோல்வி அடைந்து பெற்றோரின் கனவுக்கு மூடுவிழா நடத்தினார்.

தனது வாழ்க்கைப் பயணத்தை தானே அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பிய அவர் தனது 16-வது வயதில் டெல்லிக்கு இடம்பெயர்ந்தார்.

கங்கணாவின் தோற்றத்தால் கவரப்பட்ட மாடலிங் நிறுவனம் ஒன்று அவரை பயன்படுத்திக் கொள்ள விரும்பியது. ஆனால் மாடலிங் துறையில் தனக்கு பிரகாசமான எதிர்காலம் இல்லையென்பதை உணர்ந்த கங்கணா அங்கிருந்து விலகி நாடக இயக்குநர் அரவுந்த கவுர் என்பவரின் நாடகக் குழுவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

அந்தத் தருணத்தில் மறைந்த நடிகரும் எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் எழுதிய ‘தலேடண்டா’ என்ற நாடகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். நாடகங்களில் கங்கணாவில் நடிப்பால் கவரப்பட்ட பாலிவுட் தயாரிப்பாளர்கள் ரமேஷ் ஷர்மா மற்றும் பஹ்லஜ் நிஹானி இருவரும் தாங்கள் தயாரிக்கவுள்ள ‘ஐ லவ் யூ பாஸ்’ என்ற படத்தில் கங்கணா நடிக்கவுள்ளதாக அறிவித்தனர். ஆனால் அப்படம் தொடங்கப்படவே இல்லை. பின்னாட்களில் தயாரிப்பாளர்களில் ஒருவரான பஹ்லஜ் நிஹானி படத்தில் தன்னை ஆடைகளின்றி நடிக்க சொன்னதாக கங்கணா குற்றம்சாட்டியிருந்தார். இப்படித்தான் தொடங்கியது கங்கணாவின் திரை வாழ்க்கை.

பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர்களை தேர்வு செய்யும் ஒரு நிறுவனம் மூலம் தயாரிப்பாளர் மகேஷ் பட்டுக்கு கங்கணா அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். தான் தயாரித்துக் கொண்டிருந்த ‘கேங்க்ஸ்டர்’ என்ற படத்துக்கு கதாநாயகியை தேடிக் கொண்டிருந்த மகேஷ் பட்டுக்கு கங்கணாவின் தோற்றம் மிகவும் பிடித்துப் போனது. 2006ஆம் ஆண்டு வெளியான ‘கேங்க்ஸ்டர்’ படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. கங்கணாவின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது. அந்த படம் வெளியான போது கங்கணாவின் வயது 17.

இதன் பிறகு அதே ஆண்டில் ‘வோம் லம்ஹே’ என்ற பட வாய்ப்பு கங்கணாவுக்கு கிடைத்தது. இதில் மறைந்த நடிகை பர்வீன் பாபியின் கதாபாத்திரம். இரண்டாவது படத்திலேயே ஒரு கனமான பாத்திரத்தை சுமந்து நடித்திருந்தார். படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவினாலும், கங்கணாவின் நடிப்பை ஊடகங்களும், விமர்சகர்களும் குறிப்பிட்டு பாராட்டினர். தொடர்ந்து பட வாய்ப்புக்கள் கங்கணாவுக்கு குவியத் தொடங்கின. அதில் ஒன்றுதான் தமிழில் மறைந்த இயக்குநர் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’. இதில் தமிழ் சினிமாக்களில் காலம் காலமாக வரும் அதே கிராமத்து துறுதுறு நாயகி பாத்திரம். ஆனால் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத இப்படத்தில் கங்கணாவின் பாத்திரமும் பெரிதாக சோபிக்க்வில்லை.

அதே 2008ஆம் ஆண்டு மதுர் பண்டர்கர் இயக்கத்தில் வெளியான ‘ஃபேஷன்’ திரைப்படம் கங்கணாவுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனலாம். இந்திய ஃபேஷன் உலகின் நிழல் உலகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய இப்படம் கங்கணாவின் நடிப்புக்கு சரியான தீனியாக அமைந்தது. பெரும் வசூலை குவித்த இப்படம் கங்கணாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் ‘ராஸ்’, ‘எக் நிரஞ்சன்’, ‘கைட்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த கங்கணாவுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நல்ல கதாபாத்திரங்கள் எதுவும் அமையவில்லை. அப்போதுதான் இரண்டு படங்களை இயக்கிய் பெரிதாக பிரபலமாகாமல் இருந்த ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ‘தானு வெட்ஸ் மானு’ படத்தில் நடிக்க கங்கணா ஒப்புக் கொண்டார். 2011ஆம் ஆண்டு வெளியான இப்படம் கங்கணாவின் முற்றிலும் வேறொரு பரிணாமத்தை வெளிக் கொண்டு வந்தது. படத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த ஒரு கதாபாத்திரம் கங்கணாவுக்கு.

இதன்பிறகு வந்த படங்கள் கங்கணாவுக்கு இறங்குமுகமாகவே அமைந்தன. ‘ஷூட் அவுட் அட் வடாலா’, ‘கிரிஷ் 3, ‘ரஜ்ஜோ’ என்று எதுவும் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. எந்த விமர்சகர்கள் கங்கணாவின் நடிப்பை புகழ்ந்தனரோ அதே ஊடகங்கள் அவரை கேலி செய்யவும் செய்தனர்.

2014ஆம் ஆண்டு விகாஸ் பாஹி இயக்கத்தில் வெளியான ‘குயின்’படம் மூலம் மீண்டும் இரண்டாவது சுற்றுக்கு தயாரானார் கங்கணா. நிச்சயம் செய்யப்பட்ட மணமகனால் கைவிடப்பட்ட ஒரு பெண், தாங்கள் திட்டமிட்டிருந்த ஹனிமூனுக்கு (பிரான்ஸ்) தனியே செல்கிறார். அங்கு அவர் சந்திக்கும் புதிய மனிதர்களும், சிக்கல்களுமே இப்படத்தின் கதை. பெரும் வெற்றியை பெற்ற இப்படம் கங்கணாவின் திரைவாழ்வில் ஒரு மகுடம் என்று சொல்லும் அளவுக்கு தனது சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார். இப்படத்தின் மூலம் கங்கணாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

அடுத்த ஆண்டே (2015) மீண்டும் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ‘தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ்’ படத்துக்காக மீண்டும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.

2019ஆம் ஆண்டு ஜான்சி ராணியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘மணிகர்னிகா: தி குயின் ஆஃப் ஜான்சி’ என்ற படத்தில் நடித்தார். இப்படத்தை முதலில் இயக்கத் தொடங்கிய ராதா கிருஷ்ணா ஜகர்லமுடி கங்கணாவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் பாதியில் விலகவே, மீதிப் படத்தை கங்கணாவே இயக்கி முடித்தார்.

கங்கணாவின் திரைப்பயணத்தில் அப்போதுத் தொடங்கிய சர்ச்சைகள், நடிகர் சுஷாந்த் தற்கொலைக்குப் பிறகு அதிகரித்தது. பாலிவுட்டில் நடக்கும் திரைமறைவு விஷயங்களைப் பற்றி அவ்வப்போது பேசி வந்த கங்கணா, சுஷாந்த் மரணத்துக்குப் பிறகு தொடர்ந்து குரல் கொடுக்கத் தொடங்கினார். சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளிப்படையாகவே பாலிவுட் ஜாம்பவான்களின் பெயர்களை குறிப்பிட்டே குற்றம்சாட்டினார். வாரிசு அரசியல், போதைப் பொருட்களின் பயன்பாடு என கங்கணா எழுப்பிய விவகாரங்கள் அனைத்தும் பாலிவுட் உலகில் பெரும் புயலை கிளப்பின. கரண் ஜோஹர் தொடங்கி, சல்மான் கான் வரை பாலிவுட் ரசிகர்களின் ஆதர்சங்களில் பிம்பங்கள் அனைத்தையும் தனது குற்றச்சாட்டுகளின் மூலம் சுக்கு நூறாக உடைத்தார். இதனால் பலரது வசவுகளுக்கும், கடும் விமர்சனங்களுக்கும் ஆளானார்.

பாலிவுட் மட்டுமல்லாது விவசாயிகளின் போராட்டம், மகாராஷ்டிரா அரசுடனான நேரடி மோதல், டெல்லி நிஜாமுதீன் கரோனா பரவல் என தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு பெரும் விமர்சனங்களுக்கும் ஆளானார். இடையில் தன்னை தேவையின்றி டாம் க்ரூஸ் மற்றும் மெரில் ஸ்ட்ரீப் ஆகியோருடன் ஒப்பிட்டதால் கேலி, கிண்டல்களிருந்தும் கங்கணா தப்பவில்லை.

தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது 67வது தேசிய விருது பட்டியலில் மீண்டும் இடம்பிடித்து விட்டார் கங்கணா. இந்த முறை ‘மணிகர்னிகா’ மற்றும் ‘பாங்கா’ ஆகிய இரண்டு படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார். ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அனைத்தையும் மறந்து கங்கணாவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நேற்று (23.03.2021) கங்கணாவின் 34வது பிறந்தநாள், தேசிய அறிவிப்புடன் இரட்டிப்பு மகிழ்ச்சியாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்துல் அவர் நடித்த ‘தலைவி’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை வெளியானபோது மேக்கப் மற்றும் சிஜிக்காக கங்கணாவின் தோற்றம் பெரிதும் கிண்டல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது தன்னை கிண்டல் செய்தவர்களையே தன்னுடைய அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பின் மூலம் மனதார பாராட்ட வைத்ததுதான் கங்கணாவின் வெற்றி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

2 days ago

மேலும்