'சூப்பர் டீலக்ஸ்' அதிக விருதுகளை வாங்க விரும்பினேன்: கார்த்திக் நரேன்

By செய்திப்பிரிவு

'சூப்பர் டீலக்ஸ்' அதிக விருதுகளை வாங்க வேண்டும் என்று விரும்பினேன் என்று கார்த்திக் நரேன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தனுஷ், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் நரேன். சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஹாலிவுட் படத்தை முடித்துவிட்டுத் திரும்பியவுடன், கார்த்திக் நரேன் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ்.

நேற்று (மார்ச் 23) 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 'அசுரன்' மற்றும் 'ஒத்த செருப்பு' ஆகிய படங்களுக்கு தலா 2 விருதுகளும், 'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்காக விஜய் சேதுபதிக்கும், 'விஸ்வாசம்' படத்தின் பாடல்களுக்காக இமானுக்கும், 'கேடி (எ) கருப்புத்துரை' படத்துக்காக நாக விஷால் என தமிழ்த் திரையுலகிற்கு மொத்தம் 7 விருதுகள் கிடைத்தன.

தேசிய விருது வென்றவர்களுக்கு தமிழ்த் திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில் இயக்குநர் கார்த்திக் நரேன் கூறியிருப்பதாவது:

"படம் பார்த்ததிலிருந்து இந்தத் தருணத்துக்காகத்தான் காத்திருந்தேன். உங்களை நினைத்து அதிகப் பெருமை அடைகிறேன் தனுஷ். மனமார்ந்த வாழ்த்துகள்.

தியாகராஜன் குமாரராஜாவின் ஒரு ரசிகனாக இந்திய சினிமாவின் மாணிக்கமான 'சூப்பர் டீலக்ஸ்' அதிக விருதுகளை வாங்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனாலும், அதற்குத் தேசிய அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. உங்கள் திறமைக்கு உரிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி விஜய் சேதுபதி”.

இவ்வாறு கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE