தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற லாரன்ஸ்

மறைந்த தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுள்ளார் ராகவா லாரன்ஸ்.

'ரேணிகுண்டா', 'பில்லா 2', 'தென்மேற்கு பருவக்காற்று', 'உஸ்தாத் ஹோட்டல்', 'நீர்ப்பறவை', 'கண்ணே கலைமானே' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். ஆனால், அடுத்தடுத்த திரை வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அவர் பாதிக்கப்பட்டார். பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில், தீப்பெட்டி கணேசன் பல்வேறு சிறு தொழில்களைச் செய்து வந்தார்.

கரோனா ஊரடங்கின் போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு உதவிக்கரம் நீட்டினார்கள். ஆனால், திடீரென்று உடல்நலக் குறைவால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.

தீப்பெட்டி கணேசனின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்தார்கள். மதுரையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின், தீப்பெட்டி கணேசனின் மறைவைக் கேட்டு உடனடியாக நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தீப்பெட்டி கணேசனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். தற்போது அவர்களுடைய கல்விச் செலவை ஏற்றுக் கொள்வதாக ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதாவது:

"நடிகர் தீப்பெட்டி கணேசன் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இவ்வருடம் அவரின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொண்டு செய்தேன். இனி வரும் காலத்திலும் என்னால் இயன்றவகையிலான உதவிகளை அவரின் குழந்தைகளுக்குச் செய்வேன். கணேசனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்"

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE