முதன்முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நடுவராகும் தேவி ஸ்ரீ பிரசாத் 

By மகராசன் மோகன்

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் முதன் முறையாக ஒரு மியூசிக் ரியாலிடி நிகழ்ச்சி வழியே நடுவராக தொலைக்காட்சிக்கு வருகிறார். 'ராக்ஸ்டார்' என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ள அந்த நிகழ்ச்சியை ஜீ தமிழ் சேனல் இந்த மாத இறுதி முதல் தொடங்குகிறது.

நிகழ்ச்சியின் புதுமையாக ஏற்கனவே பிரபலமான இசை நட்சத்திரங்களைக் கொண்டு இந்த நிகழ்ச்சியை வழங்க உள்ளனர். அவர்கள்தான் போட்டியாளர்களும்கூட. இதில், ராகுல் நம்பியார், ரஞ்சித், பம்பா பாக்யா, சத்யன் மகாலிங்கம், பிரியா ஹிமேஷ், என்.எஸ்.கே. ரம்யா, சின்னப்பொண்ணு, வினைதா, சுரேஷ் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் போட்டியாளர்களாகப் பங்கேற்க உள்ளனர்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் பாடகர்கள் மனோ, ஸ்ரீனிவாஸ் இருவரும் நடுவர்களாகப் பொறுப்பேற்கின்றனர். இந்த இசை நிகழ்ச்சி குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியதாவது :

நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள எல்லோரும் பெரிய பெரிய பாடகர்கள். பொதுவாக இவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமான பரிமாணத்தில்தான் இதுவரை தெரிந்திருக்கும். இந்த நிகழ்ச்சி வழியே இவர்களுக்குப் பல திறமைகள் இருக்கிறது என்பதும் வெளிப்படும். ஒரு பாடகரை எடுத்துக்கொள்ளும்போது, அவருக்குச் சோகப்பாடல்தான் செட் ஆகும்; இவருக்கு பாப் பாடல்தான் சரி வரும் எனச் சொல்வோம்.

அப்படி நினைக்கும் பல விஷயங்களை இந்த நிகழ்ச்சி புதுமையை ஏற்படுத்த உள்ளது. ஒவ்வொருவருக்கும் பல லேயர் இருக்கிறது என்பதை ரசிகர்கள் கொண்டாடும்விதமாக இந்த நிகழ்ச்சியை வழங்க உள்ளோம். குறிப்பாக இந்த ‘ராக்ஸ்டார்’ நிகழ்ச்சியில் புதிய திறமையாளர்களையும் அறிமுகப்படுத்த உள்ளோம். அதெல்லாம் நிகழ்ச்சிக்கு இடையிடையே நடக்கும்.

உங்கள் பகுதியில் இசை சார்ந்த திறமைசாலிகள் இருந்தாலும் எங்களுக்கு அடையாளப்படுத்தலாம். நிகழ்ச்சியில் அவர் மேடை ஏற்றப்படுவார். நான் நிகழ்ச்சியின் நடுவர் என்று சொல்வதைவிட இந்த திறமைசாலிகள் செயல்படுத்தப்போகும் சாதனைகளை ஒரு ஓரமாக அமர்ந்து ரசிக்கப்போகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். அதில்தான் எனக்கும் ஆனந்தம். முதன்முதலாக இப்படி ஒரு இசை நிகழ்ச்சி வழியே தொலைக்காட்சி பக்கம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது!" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE