கார்த்திக் சுப்புராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்: தனித்துவம்மிக்க ட்ரெண்ட் செட்டர்  இயக்குநர்

By ச.கோபாலகிருஷ்ணன்

குறும்படங்கள் என்னும் காட்சி ஊடக வடிவம் பிரபலமடையத் தொடங்கிய கடந்த தசாப்தத்தின் தொடக்க ஆண்டுகளில் குறும்பட இயக்குநர்கள் தமிழ் திரைப்படங்களின் இயக்குநராகும் போக்கு தொடங்கியது. அந்தப் போக்கின் தொடக்கத்திலேயே மிகப் பெரிய வெற்றியையும் பாராட்டுகளையும் குவித்து ட்ரெண்ட் செட்டராக அடையாளப்படுத்தப்பட்டவர் இளம் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இன்று (மார்ச் 19) தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவின் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தையும் விமர்சகர்களின் பெரும் மதிப்பையும் பெற்ற இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். அவர் இயக்கிய குறும்படங்கள், திரைப்படங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையிலேனும் பொதுச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்தவை. குறும்படம், திரைப்படம். வெப் சீரீஸ்கள் இயக்கம் தயாரிப்பு என பல்வேறு குதிரைகளில் வெற்றிகரமாகச் சவாரி செய்துகொண்டிருக்கும் திறமையாளராகவும் மற்றவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு அதை வெளிப்படுத்தத் தளம் அமைத்துக்கொடுப்பவராகவும் திகழ்கிறார் இந்த இளம் படைப்பாளி

மதுரையில் பிறந்து பொறியியல் பட்டம் பெற்றவரான கார்த்திக் சுப்புராஜ் கல்லூரி நாட்களில் மேடை நாடகங்கள், குறும்படங்களை எழுதி இயக்கியவர். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட குறும்படங்களுக்கான நிகழ்வில் இவர் மீதான கவனம் அதிகரித்தது. இணையம் பரவலாகத் தொடங்கிய காலத்தில் யூட்யூப்பில் பதிவேற்றப்பட்ட அவருடைய குறும்படங்களை விரும்பிப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது.

அசலான திகில் படம்

கார்த்திக்கின் வெற்றிகரமான குறும்படங்களில் ஒன்றான 'பீட்சா' திரைப்படமாக உருவெடுத்தது. மிகக் குறைந்த பொருட்செலவில் அதிக பிரபலமில்லாத நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் உருவாக்கப்பட்ட 'பீட்சா' 2012ஆம் ஆண்டின் மிக வெற்றிகரமான அதிக பாராட்டுகளைப் பெற்ற தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. அதில் கதாநாயகனாக நடித்த விஜய் சேதுபதியின் திரை வாழ்வில் முதல் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அந்தக் காலகட்டத்தில் ஹாரர்-காமெடி திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்திவந்தன. ஆனால் 'பீட்சா' முதல் பாதியில் ரொமான்ஸ் இரண்டாம் பாதியில் திகில், கடைசியில் அனைவரையும் அதிசயிக்க வைத்த ட்விஸ்ட் என ரசிகர்கள், விமர்சகர்கள் அனைவரையும் இன்ஸ்டண்ட்டாக கவர்ந்தது. திரைக்கதையாக மட்டுமல்லாமல் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட காட்சிமொழி சார்ந்த அம்சங்களிலும் தனக்கு ஆழ்ந்த புரிதலும் தனித்துவம் மிக்க ஆளுமையும் இருப்பதை முதல் திரைப்படத்திலேயே தெளிவாகப் பதிவு செய்தார் கார்த்திக் சுப்புராஜ்.

பெயர்ச் சொல்லும் படைப்பு

முதல் வெற்றியும் அது கொடுத்த எதிர்பார்ப்புக்கும் மத்தியில் இரண்டாம் படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ். 'ஜிகர்தண்டா' என்னும் தலைப்பில் வெளியான இந்தப் படம் மதுரையை ஆட்டிப் படைக்கும் ஒரு ரெளடியையும் தான் இயக்கப் போகும் முதல் திரைப்படத்துக்கான புதுமையான சுவாரஸ்யமான கதையைத் தேடி மதுரைக்குச் செல்லும் இளைஞனையும் முதன்மைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. மதுரையையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அசகாய சூரனான ரெளடியை கோமாளியாகவும் தான் இயக்கும் திரைப்படம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகச் சூழலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தயங்காத சுயநலவாதியாக இளைஞனும் மாறிவிடும் ரசவாதத்தை எந்த பிரச்சாரமும் பிரகடனமும் இன்றி ஒரு சுவாரஸ்யமான வெகுஜன திரைப்படத்துக்கான சட்டகத்துக்குள் அழகாக நிகழ்த்திக்காட்டியிருந்தார் கார்த்திக் சுப்பாராஜ். புதுமையான கதை, அரிதான காட்சிச் சூழல்கள், நச்சென்ற வசனங்கள் நிரம்பிய திரைக்கதையுடனும் வெகு சிறப்பான காட்சிமொழியுடனும் உருவாக்கப்பட்ட இந்தப் படம் மிகப் பெரிய வணிக வெற்றியையும் விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டுகளையும் நிரந்தர ரசிகர்கள் படையையும் பெற்றது. தமிழ் சினிமா ரசிகர்கள் பலரின் ஆல்டைம் ஃபேவரைட் படங்களில் ஒன்றாக இடம்பெற்றது. எல்லாவற்றையும் விட முக்கியமாக கார்த்திக் சுப்புராஜ் யார் என்பதை உலகுக்கு அறிவித்தது. இந்தப் படத்தில் ரெளடி அசால்ட் சேதுவாக நடித்த பாபி சிம்ஹா சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றார். சிறந்த படத்தொகுப்பான தேசிய விருது விவேக் ஹர்ஷனுக்கு கிடைத்தது.

பெண் விடுதலைக்கான குரல்

அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி', சமூக -அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமானது. குடும்ப அமைப்பில் ஆண்களின் மனம் போன போக்கிலான செயல்பாடுகளால் பெண்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களையும் ஒடுக்குமுறைகளையும் ஆழமான அசலான அக்கறையுடன் இந்தப் படம் பதிவு செய்தது. இந்தப் படத்தில் வரும் ஆண்கள் யாரும் தீயவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் செய்யும் செயல்கள் தம்முடன் வாழும் பெண்களை எப்படி எல்லாம் துன்புறுத்துகிறது என்பதை உணர முடியாத சுரணையற்றவர்களாக அல்லது உணர்ந்தும் அதைப் பொருட்படுத்தாத சுயநலவாதிகளாகவுமே ஆண்கள் இருக்கிறார்கள் அவர்கள் அப்படி இருப்பது இயல்புதான் என்று இந்த குடும்ப அமைப்பும் சமூகமும் அனைவரையும் ஏற்றுக்கொள்ளவும் வைத்திருக்கின்றன. நம் சமூகத்தில் புதைந்து கிடக்கும் இந்த யதார்த்தத்தை ஆழமாக உள்வாங்கி வெளிப்படுத்தியதோடு பெண்கள் இதிலிருந்து விடுபட வேண்டும் என்னும் புரட்சிகரமான செய்தியையும் 'இறைவி' படத்தின் மூலம் சொல்லி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ். விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது இந்தப் படம். அதோடு பெண் விடுதலைக்காகப் போராடியவர்களில் ஒருவரான தந்தை பெரியாரைப் பின்பற்றும் சில அமைப்புகள் 'இறைவி' படத்தை இயக்கியதற்காக கார்த்திக் சுப்புராஜுக்கு பாராட்டு விழா நடத்தின.

அசலான ரஜினி ரசிகனின் காணிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகத் தீவிரமான ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய 'தலைவரை' இயக்கும் பொன்னான வாய்ப்பைப் பெற்றதோடு அந்த வாய்ப்பை வெகு சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார். ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கிய 'பேட்ட' மிகப் பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. அதைவிட முக்கியமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனைத்து வயது ரஜினி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான கமர்ஷியல் சினிமா ரசிகர்களையும் திருப்திப்படுத்தியது. ரஜினி ரசிகர்களுக்கு முழுமையான தீனி போடும் ரஜினி அம்சங்கள் அனைத்தும் 'பேட்ட' படத்தில் நிரம்பியிருந்தன. நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், பாபி சிம்ஹா என நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தாலும் 'பேட்ட' அசலான அவுட் அண்ட் அவு ரஜினி படமாகவே இருந்தது. கார்த்திக் சுப்புராஜ் என்னும் ரசிகர் தன்னை திரைப்படங்கள் மூலமாகவும் ஆளுமைப்பண்புகள் மூலமாகவும் மகிழ்வித்த பெருமிதம் கொள்ள வைத்த சாதிப்பதற்கான உந்து சக்தியாகத் திகழ்ந்த 'தலைவ'ருக்கு (ரஜினி) செலுத்திய நன்றிக் காணிக்கை என்றே இந்தப் படத்தை அடையாளப்படுத்த வேண்டும்.

நட்சத்திரங்கள் நாடும் இயக்குநர்

இவற்றுக்கிடையில் 'மெர்க்குரி' என்னும் வசனம் இல்லாத திரைப்படத்தை இயக்கி புதுமை படைத்தார் கார்த்தி சுப்புராஜ். குறும்படங்கள். வெப்சீரீஸ்கள் ஆகியவற்றைத் தயாரித்து இளம் படைப்பாளிகளுக்குத் தளம் அமைத்துக்கொடுத்தார். இவருடைய தயாரிப்பில் வெப் சீரீஸ்கள் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன.

தற்போது தனுஷை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் 'ஜகமே தந்திரம்' ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவிருக்கிறது. தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கமர்ஷியல் சினிமா ரசிகர்களும் 'ஜகமே தந்திரம்' வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். மதுரை மண்ணின் அம்சங்களை உள்ளடக்கி பெரும்பகுதி வெளிநாடுகளில் உருவாகியிருக்கும் இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்துவதோடு கார்த்திக் சுப்புராஜின் தனி முத்திரை வெளிப்படும் முக்கியமான படைப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தற்போது விக்ரம்-துருவ் விக்ரம் நடிப்பில் நடிகர் விக்ரமின் 60ஆம் திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அசாத்திய திறமை வாய்ந்த நட்சத்திர நடிகரும் அபாரமான இயக்குநரும் இணைந்திருக்கும் 'சீயான் 60' ரசிகர்களுக்கு முழு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதுபோல் இன்னும் பல நட்சத்திரங்களுடனும் புதியவர்களுடன் கைகோத்து தனித்துவமிக்க தரமான படைப்புகளை வழங்கி வெற்றிகளையும் விருதுகளையும் குவித்து கார்த்திக் சுப்புராஜின் திரைப் பயணம் மென்மேலும் வளர வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.தமிழ்ச் சமூகத்துக்குக் கிடைப்பார்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE