ஆஸ்கர் போட்டியிலிருந்து வெளியேறியது 'சூரரைப் போற்று' - போட்டியிடும் படங்களின் முழு விவரம்

By செய்திப்பிரிவு

நடைபெறவுள்ள ஆஸ்கர் விருதுகள் போட்டியிலிருந்து 'சூரரைப் போற்று' திரைப்படம் வெளியேறியுள்ளது. இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்தப் படம் இடம்பெறவில்லை.

93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏப்ரல் 25ஆம் தேதி அன்று நடக்கிறது. இந்தியாவில் ஏப்ரல் 26ஆம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் ஒளிபரப்பாகும். இந்த விழாவில் இடம்பெறவுள்ள திரைப்படங்களின் இறுதிப் பரிந்துரைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் இம்முறை ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்திருந்தனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம். அந்த வரிசையில் பொதுப் பிரிவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிட்டது.

மேலும், 366 படங்கள் கொண்ட அடுத்த கட்டப் பட்டியலிலும் 'சூரரைப் போற்று' படமும் இடம்பெற்றது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள அதிகாரபூர்வ இறுதிப் பட்டியலில் எந்தப் பிரிவிலும் 'சூரரைப் போற்று' தேர்வாகவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால், இன்னொரு பக்கம் இவ்வளவு தூரம் போட்டிக்குச் சென்றதே பெருமைதான் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த இறுதிப் பரிந்துரைப் பட்டியலை நிக் ஜோனாஸ் மற்றும் ப்ரியங்கா சோப்ரா ஜோடி அறிவித்தது. மொத்தம் 23 பிரிவுகளில் போட்டியிடும் திரைப்படங்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் டேவிட் ஃபின்ச்சரின் 'மேன்க்' திரைப்படம் அதிகபட்சமாக, சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த உறுதுணை நடிகை உள்ளிட்ட 10 பிரிவுகளில் போட்டியிடுகிறது.

'தி ஃபாதர்', 'ஜூடாஸ் அண்ட் தி ப்ளாக் மெஸ்ஸைய்யா', 'மினாரி', 'நோமேட்லேண்ட்', 'சவுண்ட் ஆஃப் மெடல்', 'தி ட்ரயல் ஆஃப் தி சிகாகோ' திரைப்படங்கள் மொத்தம் தலா 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆஸ்கர் வரலாற்றில் முதல் முறையாக, க்ளோ ஸாவோ, எமெரல்ட் ஃபென்னல் என இரண்டு பெண் இயக்குநர்கள், சிறந்த இயக்குநர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரிவில் பரிந்துரைக்கப்படும் முதல் ஆசிய பெண் இயக்குநர் ஸாவோ. இவர் முன்னதாக சில வாரங்களுக்கு முன் கோல்டன் க்ளோப் விருதை வென்றார். 2009ஆம் ஆண்டு 'தி ஹர்ட் லாக்கர்' திரைப்படத்துக்காக கேத்ரின் பிஜெலோ சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கரை வென்றார். ஒரு பெண் இயக்குநர் இந்தப் பிரிவில் ஆஸ்கரை வென்றது அதுவே முதல் முறை.

இந்தியாவின் ஆஸ்கர் பரிந்துரையாக அனுப்பப்பட்ட மலையாளத் திரைப்படமான 'ஜல்லிக்கட்டு' சிறந்த அயல் மொழித் திரைப்படப் பிரிவின் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை. சிறந்த குறும்படப் பிரிவில் தேர்வாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'பிட்டூ' திரைப்படமும் ஆஸ்கர் பேட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE