'காதல் மன்னன்' வெளியான நாள்: புதுமைகளும் அழகும் நிறைந்த காதல் படம்

By ச.கோபாலகிருஷ்ணன்

இன்றைய முதல்நிலை நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழும் 'தல' அஜித் குமார் ரசிகர்களின் 'தல'யாக உருவெடுப்பதற்கு முன் அவருடைய தொடக்கக்கால வெற்றிப் படங்களில் ஒன்றான 'காதல் மன்னன்' வெளியான நாள் இன்று (மார்ச் 6, 1998).

1993இல் தெலுங்கில் 'பிரேம புஸ்தகம்', தமிழில் 'அமராவதி' திரைப்படங்கள் மூலமாகத் திரையுலகில் முதல் தடம் பதித்த அஜித்துக்குத் தொடக்கக்காலப் படங்கள் பெறும் வெற்றி பெறவில்லை என்றாலும் அவருடைய தோற்றம் பலரைக் கவர்ந்தது. தமிழ் சினிமாவின் அடுத்த 'ஆணழகன்' என்று வர்ணிக்கப்பட்டார். 'ஆசை', 'காதல் கோட்டை', 'வான்மதி' போன்ற சூப்பர் ஹிட் படங்களின் மூலம் அதிக மக்களைச் சென்றடைந்தார்.

1997ஆம் ஆண்டில் அவர் நடித்து வெளியான ஐந்து படங்களும் தோல்வி அடைந்தன. திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஒரு வெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த சூழலில்தான் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துவிட்டு முதல் படத்தை இயக்கும் வாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருந்த சரணுடன் இணைந்து 'காதல் மன்னன்' படத்தில் நடிக்கத் தயாரானார். இந்தப் படம் அஜித்தின் ஆணழகன் இமேஜுக்கு வலுசேர்த்ததோடு அவருடைய ஆக்‌ஷன், நகைச்சுவை, உணர்வுபூர்வமான நடிப்புத் திறன்களுக்கும் தீனி போட்டது. இளமைத் துடிப்பு மிக்க அஜித் இந்தப் படத்தின் முதன்மையான ஈர்ப்பு சக்தியாக விளங்கினார்.

கண்டிப்பான தந்தையின் அன்பையும் தவிர்க்க முடியாமல் அவரது கட்டுப்பாடுகளால் சிறைப்பட்டு வாழும் பெண்தான் நாயகி. அவளுடைய திருமண நிச்சயதார்த்த தினத்தன்று யதேச்சையாக அவளைச் சந்திக்கும் நாயகனும் அவளும் பரஸ்பரம் ஈர்க்கப்படுகிறார்கள். சமூகக் கட்டுப்பாடுகளின் தயக்கம் என்னும் வேலியைத் தாண்டி அந்த ஈர்ப்பு காதலாக மலர்ந்து தடைகளைத் தாண்டி வெற்றி பெறுகிறது. இப்படி மாறுபட்ட கதையைப் புதுமையான காட்சி சூழல்கள், சுவாரஸ்யமான காட்சிகள், வெவ்வேறு குணாம்சங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் ஆகியவற்றை அமைத்து காதல், சென்டிமென்ட், ஆக்‌ஷன் நகைச்சுவை என அனைத்து அம்சங்களையும் சரிவிகிதத்தில் கலந்து நிறைவளிக்கும் திரைக்கதையை உருவாக்கி அதைச் சிறப்பாகப் படமாக்கியும் இருந்தார் அறிமுக இயக்குநர் சரண்.

அஜித்துக்கு முக்கியமான தருணத்தில் அமைந்த வெற்றிப் படம், சரணனின் அறிமுகப் படம், தெலுங்கில் சில படங்களுக்கு இசையமைத்திருந்த தமிழரான பரத்வாஜ் தமிழில் இசையமைத்த முதல் படம் என்னும் சிறப்புகளோடு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு நடிகராக அறிமுகமான படம் என்னும் சிறப்புக்காகவும் 'காதல் மன்னன்' என்றென்றும் நினைவுகூரப்படும்.

இன்கம் டேக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாத அப்பாவித்தனமும், மேன்ஷன் இளைஞர்கள் மீதான அக்கறையால் விளையும் கண்டிப்பும், பழமை சார்ந்த பெருமிதங்களும் அவை குறித்த நினைவுகளால் எழும் ஏக்கமும் இணைந்து உருவான சுவாரஸ்யமான 'மெஸ் விஸ்வநாதன்' கதாபாத்திரத்துக்கு எம்.எஸ்.வி. மிகப் பொருத்தமான தேர்வாக அமைந்திருந்தார். அவருடைய நடிப்பு அவதாரத்துக்கு மிகச் சரியான தொடக்கமாக அந்தக் கதாபாத்திரம் அமைந்திருந்தது.

சரணைப் போலவே பாலசந்தர் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட விவேக் அதுவரை நகைச்சுவை நடிகராக மட்டுமே அறியப்பட்டுவந்த நிலையில், கதையை ஒட்டிய இயல்பான நகைச்சுவையோடு கிட்டத்தட்ட இரண்டாம் நாயகன் என்று சொல்லத்தக்க கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நண்பனின் காதலை முதலில் எதிர்த்து பின் அந்தக் காதலின் வெற்றிக்கு உதவும் கதாபாத்திரத்தை வெகு சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். விவேக்கின் நெடிய திரைவாழ்வில் நகைச்சுவையைத் தாண்டிய நடிப்புப் பரிமாணங்கள் அவரிடமிருந்து சிறப்பாக வெளிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

இந்த ஒரே ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்துவிட்டு திரையுலகிலிருந்து ஒதுங்கிவிட்ட மானு, குடும்பப் பாசம், தந்தை மீதான பயம், மனதுக்குப் பிடித்தவன் மீதான பரிவு, காதலுக்காக வேலி தாண்டலாமா, கூடாதா என்னும் குழப்பம், அதனால் விளையும் பதற்றம் என அனைத்து உணர்வுகளையும் கச்சிதமாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்தார். இதற்குப் பின் 2014இல் வெளியான 'என்ன சத்தம் இந்த நேரம்' என்னும் படத்தில் மட்டுமே அவர் நடித்தார்.

'காதல் மன்னன்' படத்தின் வெற்றிக்கு பரத்வாஜின் பாடல்கள் மிக முக்கியமான பங்காற்றின. குறிப்பாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் வைரமுத்து வரிகளில் அமைந்த 'உன்னைப் பார்த்த பின்பு நான்' பாடல் அஜித்தின் திரை வாழ்வில் மிக முக்கிய இடம்பெற்றுவிட்ட பாடலாகும். எந்த அளவுக்கு என்றால் இதற்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்து வெளியான 'ஏகன்' படத்தில் தான் காதலிக்கும் பெண்ணான நயன்தாராவைப் பார்த்து அஜித் இந்தப் பாடலை அதே இசையுடன் பாடுவதுபோல் காட்சியமைத்திருப்பார்கள்.

ஒட்டுமொத்த திரையிசை ரசிகர்கள் பலரின் விருப்பத்துக்குரிய காதல் பாடல்களின் பட்டியலில் 'உன்னைப் பார்த்த பின்பு நான்' பாடலுக்குத் தவிர்க்க முடியாத இடமுண்டு. 'தேனிசைத் தென்றல்' தேவாவின் குரலில் அமைந்த 'மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா', படத்தில் அஜித்தைப் புகழும் அறிமுகப் பாடலான 'கன்னிப் பெண்கள் நெஞ்சுக்குள்', ஹரிஹரன் - சித்ரா குரலில் அமைந்த டூயட் பாடலான 'வானும் மண்ணும்', எம்.எஸ்.வி. இசையிலும் குரலிலும் அமைந்த 'மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு' என இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களுமே காலம் கடந்து ரசிக்கப்படுகின்றன.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித், சரண், தயாரிப்பு நிறுவனமான வெங்கடேஸ்வராலயம் இணைந்து அஜித்தின் 25ஆவது படமான 'அமர்க்களம்' படத்தை அளித்தார்கள். அந்தப் படமும் வெற்றி பெற்றதோடு அஜித்தை ஒரு ஆக்‌ஷன் நாயகனாக அழுத்தமாகத் தடம் பதிக்க வைத்தது. சரண்-பரத்வாஜ்-வைரமுத்து கூட்டணி 'காதல் மன்னன்' தொடங்கிப் பல படங்களில் தொடர்ந்து மறக்க முடியாத பல பாடல்களை அளித்தது.

மாறுபட்ட கதையம்சத்துடன் ரசிக்கத்தக்கக் காதல் கதையாக அமைந்த 'காதல் மன்னன்' எப்போது பார்த்தாலும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத அளவு புதுமைகளும் சுவாரஸ்யமும் நிறைந்தது. அதனாலேயே அது தமிழ் சினிமாவின் எண்ணற்ற காதல் படங்களில் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்ற படங்களில் ஒன்றாக நிலைத்துவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE