நான் இனி மலிவானவள் இல்லை: வருமான வரித்துறை சோதனை குறித்து டாப்ஸி கிண்டல்

By செய்திப்பிரிவு

தன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது குறித்து நடிகை டாப்ஸி கிண்டலாகக் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், அவர் நடத்தி வந்த ஃபேண்டம் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கூட்டாளிகள், நடிகை டாப்ஸி உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பில் பண மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்திருந்தது.

ஆனால், நவம்பர் மாதம் முதல் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால்தான் அனுராக், டாப்ஸி உள்ளிட்டோரைப் பழிவாங்கும் விதமாக இந்த வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் டாப்ஸிக்கும், அனுராக் காஷ்யப்புக்கும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

டாப்ஸியின் இடத்தில் நடந்த சோதனையில் ரூ. 5 கோடி மதிப்பிலான பண ரசீது ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து டாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

"3 நாட்கள், 3 விஷயங்களைத் தேடி தீவிரமான சோதனை நடந்தது.

1. பாரிஸ் நகரில் எனக்குச் சொந்தமாக ஒரு பங்களா இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன் சாவியைத் தேடினார்கள். ஏனென்றால் கோடை விடுமுறை நாட்கள் வரப்போகின்றன.

2. என் பெயரில் இருப்பதாகச் சொல்லப்படும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ரசீது. அதை எடுத்து ஃப்ரேம் செய்து மாட்ட எதிர்காலத்தில் எனக்குத் தரப்போகிறார்கள். ஏனென்றால் அந்தப் பணம் வேண்டாம் என்று நான் ஏற்கெனவே மறுத்தேன்.

2. நமது மத்திய நிதியமைச்சர் சொன்னதுபோல, 2013ஆம் ஆண்டு நடந்த வருமான வரித்துறை சோதனையைப் பற்றிய என் நினைவுகளைத் தேடினார்கள்.

பி.கு: இனி நான் மலிவானவள் இல்லை"

என்று டாப்ஸி பகிர்ந்துள்ளார். அவரது இந்தப் பதிவைப் பகிர்ந்தும், பாராட்டியும் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE