யானைகளைப் பார்த்து பயமில்லை; மனிதர்களைப் பார்த்து பயம்: விஷ்ணு விஷால் ஒப்பன் டாக்

யானைகளைப் பார்த்து பயமில்லை, மனிதர்களைப் பார்த்து தான் பயமாக உள்ளது என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காடன்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று, வெளியீட்டுக்கு தயாரானது. அப்போது தான் கரோனா அச்சுறுத்தல் வந்து அனைத்தும் தடைப்பட்டது.

திரையரங்குகள் திறக்கப்பட்டு அனைத்தும் சகஜநிலைக்கு திரும்பி வருவதால், 'காடன்' படத்தை வெளியிட முடிவு செய்து விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது படக்குழு. மார்ச் 26-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் இயக்குநர் பிரபு சாலமன், ராணா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் விஷ்ணு விஷால் பேசியதாவது:

"யானைகள் பார்த்து சின்ன வயதில் பயப்படுவேன். படப்பிடிப்பு தளத்தில் யானையைப் பார்க்கும் போது கூட முதல் முறை பயம் இருந்தது. கடந்த 2-3 வருடங்களாக வாழ்க்கையில் நடந்த விஷயங்களைப் பார்க்கும் போது, மனிதர்களைப் பார்த்துத் தான் பயப்பட வேண்டும் என்று புரிந்து கொண்டேன். யானை கூட பாசமாகத் தான் இருக்கிறது. மனிதர்கள் அப்படியில்லை.

யானைகளுக்கு ஞாபகத் திறன் மிகவும் அதிகம். உன்னி என்ற யானையுடன் நடித்து 3 ஆண்டுகள் ஆகிறது. இப்போது கூடப் போய் நின்றால் என்னைத் தெரியும். என் கூட விளையாடுவதற்குக் கூட வாய்ப்புகள் இருக்கிறது. மனிதர்கள் தான் சில விஷயங்களைச் சீக்கிரமாக மறந்துவிடுகிறார்கள். யானையா, மனிதனா என்று கேட்டால் யானை தான் பரவாயில்லை என்று சொல்வேன்.

யானை மீது முதன்முறையாக ஏறும் போது பயமாக இருந்தது. அது எப்படி என்று பாகன் சொல்லிக் கொடுத்தார். யானையுடன் பழகியவுடனே டீ கொடுப்பது, சாப்பிடுவது, தூங்குவது எல்லாமே யானை மீது தான். அந்தளவுக்குப் பழகிவிட்டேன். யானை மீது கூட ஏறி உட்கார்ந்துவிடலாம், வாழ்க்கையில் மேலே போகும் போது தான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதுள்ளது. நிறையப் பேர் கீழே இழுப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்.

'காடன்' படத்துக்காகக் கடுமையாக உழைத்துள்ளோம். படம் மூலம் நிறைய நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கிறோம். உலகம் இப்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்துள்ளது. அது எதனால் என்பதைப் படத்தைப் பதிவு செய்திருக்கிறார் பிரபு சாலமன் சார். இது எதார்த்தமாக நடந்துள்ளது. யானை ஏன் காட்டுக்கு முக்கியம் என்பதற்குப் பின்னால் ஒரு கதையே சொன்னார் பிரபு சாலமன் சார். எனக்கு வியப்பாக இருந்தது. இந்தப் படத்துக்காக ராணா கடுமையாக உழைத்திருக்கிறார். இந்தக் கதையின் தொடக்கப் புள்ளியிலிருந்து, இப்போது வரை பிரபு சாலமன் சாருடன் இருக்கிறார்"

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

வீடியோ வடிவில் காண:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE