‘பொறுத்தது போதும் மனோகரா’ வெளியாகி 67 ஆண்டுகள் ; கலைஞர், சிவாஜி, கண்ணாம்பா, எல்.வி.பிரசாத் கூட்டணியின் மெகா வெற்றி! 

By வி. ராம்ஜி

ஒரு படம் வெற்றி அடைவது மிகப்பெரிய விஷயமே இல்லை. ஆனால், காலங்கள் கடந்தும் தலைமுறையைக் கடந்தும் பேசப்படுவது என்பதுதான் சரித்திரம். சரித்திரப் படங்கள் எடுப்பார்கள். சாதனை புரிவார்கள். சாதனை செய்வதையே சரித்திரமாக்கிய படங்களும் உண்டு. அப்படியான சரித்திரப் படம்... சாதனைகள் புரிந்து மாபெரும் சரித்திரமாக அமைந்த படம் என்றெல்லாம் பெருமைகள் கொண்ட திரைப்படம்... ‘மனோகரா’.
பம்மல் சம்பந்த முதலியாரின் புகழ் மிக்க நாடகம் இது. இதற்கு திரைக்கதையும் வசனமும் எழுதினார் கலைஞர் கருணாநிதி. அப்படி கலைஞரின் பேனாவில் இருந்து தெறித்து விழுந்த வசனங்கள்தான், இன்று வரைக்கும் ‘மனோகரா’ படத்தை மறக்கமுடியாத படமாக்கியிருக்கின்றன.

சிவாஜி கணேசன், கிரிஜா, டி.ஆர்.ராஜகுமாரி, கண்ணாம்பா என பலரும் நடித்திருந்த இந்தப் படத்தை இயக்கியவர் இந்தியாவின் தலை சிறந்த இயக்குநர்களில் ஒருவர் எனப் பேரெடுத்த எல்.வி.பிரசாத். கமலின் ‘ராஜபார்வை’யில் வரும் மாதவியின் தாத்தா என்றால் இன்னும் சட்டென்று முகப்பரிச்சயத்துக்கு வந்துவிடுவார்கள் ரசிகர்கள்.

நடிகருக்கு வெவ்வேறு விதமான கதாபாத்திரங்கள் கூட கிடைத்துவிடும். தப்பித்தவறி நாயகிகளுக்கும் அப்படியான கதாபாத்திரங்கள் நிகழ்ந்துவிடும். ஆனால் நாயகனுக்கு அம்மாவாகவோ நாயகிக்கு அம்மாவாகவோ நடிக்கும் நடிகைகளுக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைப்பதென்பது எப்போதாவது பூக்கிற அத்தி. குறிஞ்சி. ’மனோகரா’வில், சிவாஜிக்கும் அவரின் அனல் தெறிக்கும் குரலுக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதேபோல், சிவாஜிக்கு நிகராக, இன்னும் சொல்லப்போனால், சிவாஜியை விட இன்னும் ஒரு படி அதிகமாகவே இன்னொருவருக்கும் மிகப்பெரிய பேர் கிடைத்தது. அவர்... கண்ணாம்பா!

‘அம்மா கேரக்டருக்கு இந்த அம்மாதான், பிரமாதமா இருப்பாங்க. இவங்க நடிக்கிறதால, இன்னும் பத்து பக்கத்துக்கு வசனத்தை தாராளமா எழுதலாம்’ என்று திரையுலகம், பி.கண்ணாம்பாவின் நடிப்பின் மீதும் அவரின் குரல்வளத்தின் மீதும் தமிழ் உச்சரிப்பின் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கையும் பிரமிப்புமாக வைத்திருந்தது. .

எத்தனை பக்க வசனங்கள் என்றாலும் ஏற்ற இறக்கங்களுடன் பேசி கைதட்டல் வாங்குவாரே சிவாஜி. கண்ணாம்பாவும் அப்படித்தான். ‘மனோகரா’ படத்தின் வசனங்களும் காட்சிகளும் அந்தக் காலத்தில் தெறிக்கவிட்டன. இந்தக் காட்சியில் சிவாஜி அப்ளாஸ் அள்ளியிருப்பார். அடுத்த காட்சியில் கண்ணாம்பா ஸ்கோர் செய்துவிடுவார்.

ராஜா, ராணிக்கு துரோகம் செய்வார். இன்னொரு பெண்ணுடன் பழகுவார். ராணியை துரத்திவிடுவார். கூடவே மகனும் அல்லாடுவார். அந்தப் பெண் சூழ்ச்சியால் மொத்த தேசத்தையும் தன் கைக்குள் கொண்டு வரத் திட்டமிடுவார். இதில் துரோக்த்தால் குலைந்து போன ’மனோகரா ஆவேசமாவார். அப்போதெல்லாம் அடக்கி வைப்பார் கண்ணாம்பா. ஒருகட்டத்தில், ஆத்திரத்தை சிவாஜியாலும் அடக்கமுடியாது. கண்ணாம்பாவும் தடுக்கமாட்டார். அப்போது சொல்லும் வசனம்தான் இன்று வரைக்கும் பிரபலம். அந்த வசனம்... ‘பொறுத்தது போதும் மனோகரா’. ‘கண்ணாம்பா அளவுக்கு அனல் பறக்கும் வசனங்களை எவரும் பேசவே முடியாதுப்பா’ என்று கொண்டாடினார்கள். அட்சரம் பிசகாமல், அழகுத்தமிழை, உச்சரிப்பு பிசகாமல், பாவம் மாறாமல், உணர்ச்சிப் பெருக்குடன் பேசி கரவொலிகளை அள்ளிய கண்ணாம்பாவிறு தெலுங்குதான் தாய்மொழி. தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமிழ்ப் பாடலை தெலுங்கில் எழுதிவைத்துக்கொண்டு பாடுவது போலத்தான், கண்ணாம்பா, தமிழ் வசனங்களை தெலுங்கில் எழுதிவைத்துக்கொண்டு பேசினார்.

நாடகமாக இருந்த ‘மனோகரா’, திரைவடிவத்துக்கு மாறியதுதான் தமிழ்சினிமாவின் மலர்ச்சி; இன்னொரு வளர்ச்சி. நகைச்சுவை ஒருபக்கம், நக்கல் இன்னொரு பக்கம், கோபம் ஒருபக்கம், ஆவேசம் மற்றொரு பக்கம் என கலைஞரின் பேனா கதகளி ஆடியிருக்கும்.

இயக்குநர் எல்.வி.பிரசாத்தின் அற்புத இயக்கம் இன்னொரு ப்ளஸ் பாயிண்ட். 52ம் ஆண்டு சிவாஜி, கலைஞர் கூட்டணியில் வெளியான ‘பராசக்தி’ எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியதோ.... அதைவிட பல மடங்கு கரவொலியையும் வசூலையும் அள்ளினான் ‘மனோகரா’.

பாடல்களும் இசையும் அமர்க்களம். கருப்பு வெள்ளையில் காவியம் படைத்திட்டார் எல்.வி.பிரசாத். பின்னர் ‘இருவர் உள்ளம்’ மாதிரியான படங்களையும் இயக்கினார். ‘மனோகரா’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே எதிர்பார்ப்பை ஏற்றியது. வசனங்களும் சிவாஜியின் நடிப்பும் பெரிதாகப் பேசப்பட்டன. அடுத்தடுத்த நாட்களில், அரங்கு நிறைந்த காட்சிகளாக் ஓடின. நூறுநாள் படம், நூற்று இருபத்து ஐந்து நாட்கள் ஓடின. பல ஊர்களில் வெள்ளிவிழாவைக் கடந்து வெற்றிகரமாக ஓடின.

இதையடுத்து எத்தனையோ வெற்றிப் படங்களைக் கொடுத்தார் சிவாஜி. எத்தனையோ படங்களுக்கு வசனம் எழுதினார் கலைஞர். மிகச்சிறந்த படங்களை இயக்கினார் எல்.வி.பிரசாத்.

1954ம் ஆண்டு, மார்ச் மாதம் 3ம் தேதி வெளியானது ‘மனோகரா’. படம் வெளியாகி இன்றுடன் 67 வருடங்களாகின்றன.

கலைஞர், எல்.வி.பிரசாத், சிவாஜி, கண்ணாம்பா கூட்டணியில் உருவான ‘மனோகரா’ திரைப்படத்துக்கு வயசும் இன்னும் ஏறவில்லை. அதன் மவுசும் குறையவில்லை. ‘பொறுத்தது போதும் மனோகரா... பொங்கியெழு’ எனும் வசனம், இன்றைக்கும் டிரெண்டிங்கில் இருப்பதும் கூட மற்றுமொரு சாதனைதான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE