‘தாண்டவ்’ சர்ச்சை: பார்வையாளர்களிடம் மன்னிப்புக் கோரிய அமேசான் ப்ரைம்

By செய்திப்பிரிவு

சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் 'தாண்டவ்', கடந்த ஜனவரி மாதம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியானது.

அலி அப்பாஸ் ஸாஃபர் உருவாக்கி, இயக்கி, தயாரித்திருக்கும் இந்தத் தொடரை ‘ஆர்டிகள் 15’ திரைப்படத்தின் கதாசிரியர் கௌரவ் சொலாங்கி எழுதியிருந்தார்.

இந்துக் கடவுள்களைப் பரிகாசம் செய்வதால் தாண்டவ் வெப் சீரிஸைத் தடை செய்ய வேண்டும் என்று பாஜக எம்.பி. மனோஜ் கோடக் தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

தொடர்ந்து ஓடிடி தளங்களில் இந்துக் கடவுள்களை நல்ல முறையில் காட்டக்கூடாது என்ற முயற்சிகள் நடந்து வருவதாக அக்கடிதத்தில் மனோஜ் கோடக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகை கங்கனா உள்ளிட்ட பலரும் ‘தாண்டவ்’ வெப் சீரிஸை அமேசான் தளத்திலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து இத்தொடரின் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாஃபர் மன்னிப்புக் கோரியிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமேசான் ப்ரைம் தளம் மன்னிப்புக் கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சமீபத்தில் வெளியிடப்பட்ட 'தாண்டவ்' என்ற கற்பனைத் தொடரில் குறிப்பிட்ட சில காட்சிகளுக்கு பார்வையாளர்கள் ஆட்சேபனை தெரிவித்ததால் அமேசான் பிரைம் வீடியோ மீண்டும் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது. இது எப்போதும் எங்கள் நோக்கம் அல்ல, ஆட்சேபனைக்குரிய காட்சிகள் எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது அவை நீக்கப்பட்டோ அல்லது திருத்தமோ செய்யப்பட்டுள்ளன. எங்கள் பார்வையாளர்களின் பலதரப்பட்ட நம்பிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம். இந்த காட்சிகள் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் அவர்களிடம் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE