- பாலா
இசைக்கு பேதமெல்லாம் இல்லைதான். அதேபோல் எல்லா இசைக்கருவிகளும் இனிமையைத் தந்து, மயிலிறகென நம் மனதை வருடி விடுபவைதான். அப்படியான இசையில், தனிசுகம் தரும் இசைக்கருவிகளில் கிடாருக்கு அட்டகாசமான இடம் உண்டு. அதிலும் ’பேஸ் கிடார்’ ஒரு தென்றலைப் போல் நம் மனதுக்குள் இறங்கி, நம்மை என்னவோ செய்யும் ஜித்துவேலை கொண்டவை! இளையராஜாவின் இசையில், ‘பேஸ் கிடாருக்கு’ எப்போதுமே மாஸ் இடம் உண்டு. அப்படி ‘பேஸ் கிடார்’ இசையைக் கொடுப்பதில் வல்லவர் எனப் பேரெடுத்தவர் சசிதரன்.
விரல்களைக் கொண்டு கிடாரைக் கொஞ்சிக் கொண்டிருந்தவர்... நம்மையெல்லாம் அந்த இசையால் கிறங்கடித்தவர்... இப்போது உறங்கிக் கொண்டிருக்கிறார். எழுந்திருக்கவே முடியாத நித்திரையில் இருக்கிறார். அவரின் மரணாம் நிகழ்ந்து ஒருமாதத்தைக் கடந்துவிட்டாலும் அவரின் நினைவுகள், ஒரு ‘பேஸ் கிடாரின்’ இசையைப் போலவே, இம்சை செய்து பெருந்துக்கத்துக்குக் கடத்திச் செல்கிறது.
எழுபதுகளின் மத்தியில் தமிழ் திரையிசையில் இளையராஜாவின் வருகையால் ஏற்பட்ட இசை ரசனையும் அவை ஏற்படுத்திய மாற்றமும் கிட்டத்தட்ட ஒரு புரட்சி என்றுதான் சொல்லவேண்டும். அதுவரை நம் காதுகளுக்கு பழக்கமாகியிருந்த இசையும் அது சார்ந்த ஒலிகளும் இல்லை அவை! புதியதொரு பாணி இசையும் அதன் கூடவே பல புதிய ஒலிகளும் தமிழ் மக்களை மட்டுமல்லாமல் தென் மாநிலங்கள் மொத்தத்தையும் சேர்த்தே வசியம் பண்ணியிருந்தன.
அதுவரை வந்த திரை இசை எல்லாம் மிக தேர்ந்த திறமைசாலிகளால் உருவாக்கப்பட்டவை. இருந்தாலும் அவர்களின் இசையை வகைபடுத்திவிட முடிந்தது. பெரும்பாலும் நம் சாஸ்திரிய இசையின் மென் உருவாக்கம் என்ற வகையில் அந்தப் பாடல்கள், நம்மை ஈர்த்தன.
ஆனால் அதன் பின் வந்த இளையராஜாவின் இசையோ அப்படி எந்தக் கட்டுக்குள்ளும் அடங்கவில்லை. ஒரு எல்லைக்குள் முடிந்துவிடவில்லை. நாட்டுப்புற இசை, மேற்கத்திய செவ்வியல் இசை, மேற்கத்திய இசையின் ராக், ஜாஸ் போன்ற பல பரிமாணங்கள், கர்நாடக செவ்வியல் இசை என்று எல்லாவற்றின் தனித்துவ அம்சங்களையும் தன்னுள்ளே கொண்டதாக இருந்தன. இவைதான் இளையராஜாவின் இசை மக்களிடையே வெகுவான தாக்கத்தை ஏற்படுத்தக் காரணங்களாக அமைந்தன.
முக்கியமான காரணம்... மண் சார்ந்த இசை. அவர்களின் விவரிக்க முடியாத உணர்வுகளின் இசை வடிவிலான பிரதிபலிப்பாக இருந்ததுதான். ஆசை,காதல், மோகம், பாசம், கோபம், பரிகாசம், விரகம், ஏக்கம் என்று எண்ணிலடங்கா உணர்வுகளுக்கு யதார்த்தமான இசை எப்போதுமே ஒரு வெளிப்பாடாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவையாக இருக்கும்.
70 களின் துவக்கம் இசை மற்றும் ஒலிநாடா சம்பந்தப்பட்ட தொழில்நுட்பம் பெரிதும் முன்னேறி ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய காலம். அதுவரையில் மக்கள் பாட்டு கேட்க வேண்டும் என்றால் ரேடியோவில் தேன்கிண்ணம், நேயர் விருப்பம் போன்ற நிகழ்ச்சிகள் தான் ஒரே வழி. அதிலும் நாம் விரும்பி கேட்டிருக்க வேண்டும் அல்லது நமக்கு பிடித்த பாட்டை யாராவது விரும்பி கேட்டிருக்க வேண்டும். ஆனால் 70 களில் கேசட் டேப் ரிக்கார்டர்கள் என்ற புதிய தொழில்நுட்பம் வந்ததால் நமக்கு விருப்பமான பாடல்களை நாம் பதிவு செய்து கேட்டுக் கொள்ளும் வசதி வந்தது. அந்த நேரத்தில் பாடல்களை கேசட்டில் பதிவு பண்ணி தரும் கடைகள் என்று ஒரு புதிய தொழிலும் அதனால் பட்டிதொட்டியெங்கும் பரவ ஆரம்பித்தன.
ஸ்டீரியோ டேப் ரிகார்டரில் இளையராஜாவின் இசையைக் கேட்கும்போது அதில் வரும் அடிநாதமாய் மூளும் பேஸ் கிடாரின் ஒலியை கேட்டு கிறங்கி போயிருப்போம். ராமர் பாதம் பட்ட அகலிகை போல அதுவரை காத்திருந்த பேஸ் கிடார் தனது வசிய வித்தையைக் காட்டியது அப்போதுதான்!
அதுவரை கேட்காமல் இருந்த பேஸ் நோட்ஸ்கள் தொழிநுட்ப முன்னேற்றம் மற்றும் இளையராஜா என்ற மகத்தான ஆளுமையின் வருகை ஆகிய காரணங்களால் உருக்கொண்டு மக்களை வசீகரிக்க துவங்கியது. அத்தகைய மயக்கும் இசையை இசையை உருவாக்கியவர் இளையராஜா. அந்த இசையை இளையராஜா சொல்ல வழங்கியவர்கள் எனும் பட்டியல் நீளம்.
வயலின் நரசிம்மன், ட்ரம்ஸ் புருஷோத்தமன், கிடார் சதானந்தம், பேஸ் கிடார் சசிதரன், கீபோர்ட் விஜி மானுவல், கிடார் சந்திரசேகர், வீணை பார்த்தசாரதி, மிருதங்கம் ஸ்ரீநிவாசன், புல்லாங்குழல் நெப்போலியன், புல்லாங்குழல் சுதாகர், வயலின் அவுசப்பச்சன், வயலின் பிரபாகர் என்று பல ஜாம்பவான்கள், இசைக்கலைஞர்கள் இசைக்குழுவில் இருந்து அவருடைய இசை பிரவாகத்தில் பங்கெடுத்தார்கள். அவர்களில் ஒரு சிலர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் நம்மை விட்டுப் பிரிந்தார் சசிதரன். கிடாரிஸ்ட் சசிதரன். பிறந்த நாளிலேயே இறந்தார் என்பது கூடுதல் சோகம்.
பிரபல கிடார் இசைக் கலைஞரும் இளையராஜா மற்றும் ரஹ்மானின் இசைக்குழுவில் வாசித்த அனுபவம் உள்ளவருமான பிரசன்னா, கனத்த மனத்துடனும் உடைந்த குரலுடனும் சசிதரன் குறித்துச் சொன்னார்... ’’உலகின் தலை சிறந்த மூன்று கிடாரிஸ்ட்டுளில் சசிதரனும் ஒருவர்.’’
கிட்டத்தட்ட 45 ஆண்டுகால இசைப்பயணம், அதில் கிட்டத்தட்ட 7000 பாடல்கள் மற்றும் பின்னணி இசை, தனிப்பட்ட ஆல்பங்கள், மேடை கச்சேரிகள் என்று இவருக்கிருக்கும் அனுபவத்தை பார்க்கும்போது சசிதரனுக்கும் கிடாருக்கும் பிணைப்பை உணரமுடிகிறது. மேலும் தனித்துவமான வாசிக்கும் பாணி என்பது சசிதரனை அற்புதக் கலைஞர் என்று கொண்டாட வைத்தது.
இளையராஜாவின் ஆஸ்தான பேஸ் கிடாரிஸ்ட் சசிதரன் தான். இளையராஜாவின் மனைவி (ஜீவா)யின் சகோதரரும் கூட. இளையராஜா இசையமைத்த கிட்டத்தட்ட அனைத்து படங்களிலுமே இவர்தான் பேஸ் கிடாரிஸ்ட்.
திறமைசாலி. என்றாலும் படாடோபம் இல்லை. பந்தா இல்லை. அமைதியானவர். பழகுவதற்கு இனிமையானவர். இவரோடு பழகிய இசைக் கலைஞர்கள் அவரைப் பற்றி இப்படித்தான் சொல்கிறார்கள்.
சசிதரன் இசைக் கலைஞரானது தற்செயலானது. இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜா குழந்தையாக இருக்கும்போது அவரை பார்த்துகொள்ளும் பொறுப்பு சசிதரனுக்கு வாய்த்தது. எப்போதும் அழுதுகொண்டே இருக்கும் குழந்தையை சமாதானப் படுத்த அங்கிருந்த கிடார் ஒன்றை எடுத்து சத்தப்படுத்தினார் சசிதரன். அதைக் கேட்டு குழந்தை அழுகையை நிறுத்தியது. அதன் பிறகு, குழந்தையின் அழுகையை நிறுத்த வேண்டும் என்றால் கிடாரை எடுத்து ஏதேனும் வாசிக்க வேண்டும் என்பதால் அதை வாசிக்க ஆரம்பித்து தனக்கு வாசிக்க தெரியும் என்று நினைத்து தேவாவின் சகோதரர்களான சபேஷ் முரளியிடம் சொல்லி அவர்களும் இவரை இசை அமைப்பாளர் சந்திரபோஸின் மேடைக் கச்சேரி ஒன்றிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே போய் கிடார் வாசிக்கத் தெரியாமல் மலங்க மலங்க முழித்தார். திட்டு வாங்கினார். வீடு திரும்பினார்.
அப்படி திரும்பி வருகிற வழியில், அண்ணாசாலையில் உள்ள இசைக்கருவிகள் விற்பனை செய்யும் கடைக்கு போய் கிடார் வாசிப்பது எப்படி என்ற புத்தகத்தை வாங்கி கொண்டார். பிறகு கிடாரை ஆசிரியர் ஒருவரிடம் கற்றுக் கொண்டார். எப்படியும் ஒரு நல்ல கிடாரிஸ்ட் ஆகியே தீருவேன் என்ற வைராக்கியத்துடன் இருந்தார். அவருடைய உழைப்பும் ஆர்வமும் வெறியும் அவரை இந்தியாவின் மிகச் சிறந்த பேஸ் கிடாரிஸ்ட் என்ற நிலைக்கு உயர்த்தியது.
1981இல் வெளிவந்த ’ஆராதனை’ என்ற படத்தில் வந்த ’இளம்பனி துளிர் விடும் நேரம்’ என்ற பாடல் இன்றைக்கும் பிரபலம். . ராதிகா என்ற பாடகி பாடிய அந்தப் பாடலை கேட்டு மயங்காத இள வயதினர் அந்தக் காலத்தில் ஏராளம். அந்த பாடலில் வரும் பேஸ் கோர்வைகள் அதுவரை கேட்டிராத புது தினுசு. கிறங்கிப் போனார்கள் ரசிகர்கள். பேஸ் கிடாரின் தாக்கம் அதில் முக்கியமான ஒன்று.
பாரதிராஜாவின் ‘கடலோர கவிதைகள்’ படத்தில் வந்த ’கொடியிலே மல்லியப்பூ’, ’மௌன ராகம்’ படத்தில் வந்த ’சின்ன சின்ன வண்ணக் குயில்’, ’டிக் டிக் டிக்’ படத்தில் வந்த ’நேற்று இந்த நேரம்’, ’அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் வந்த ’காதல் ஓவியம்’, ’பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் வந்த ’கோடை கால காற்றே’, ’நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்தில் வந்த ’உறவெனும் புதிய வானில்’, ’பருவமே புதிய பாடல் பாடு’, ‘நிழல்கள்’ படத்தில் வந்த ’பொன்மாலைப் பொழுது’, ’மடை திறந்து பாயும் நதியலை நான்’ என்று பல பாடல்களில், சசிதரன் விரல்கள், பேஸ் கிடாரைக் கொண்டு விளையாடியிருக்கும்.
அந்தக் காலத்தில் பதின்ம வயதில் இவற்றைக் கேட்டவர்கள் தங்கள் மனதின் இசையாய் எக்காலத்திலும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
இசைக்கலைஞர்கள் எப்போதுமே வாழ்வார்கள். மரணமெல்லாம் இல்லை. மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்கிறார்கள். பாடல்கள் மூலம் இசைக்கருவிகள் மூலம் நம்மோடு வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். என்றென்றும் நம் மனதில் வாழ்வார்கள். பேஸ் கிடார் கலைஞர் சசிதரனும் அப்படித்தான்.
முக்கிய செய்திகள்
சினிமா
26 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago