முடிவுக்கு வந்தது 'மாமனிதன்' சர்ச்சை: சீனு ராமசாமி தகவல்

By செய்திப்பிரிவு

'மாமனிதன்' தலைப்பு தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டதாக இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ள படம் 'மாமனிதன்'. யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் காயத்ரி நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிவடைந்துவிட்டது.

அதற்குப் பிறகு 'மாமனிதன்' படம் தொடர்பாக எந்தவொரு தகவலுமே இல்லை. சில தினங்களுக்கு முன்பு, இந்தப் படத்தின் மீதான அனைத்துப் பிரச்சினைகளும் பேசித் தீர்க்கப்பட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியது படக்குழு. அப்போது புதிதாக ஒரு சர்ச்சை உருவானது.

என்னவென்றால், 'மாமனிதன்' படத்தின் தலைப்புக்கான உரிமை மற்றொரு தயாரிப்பாளரிடம் இருந்தது. அதனைத் தொடர்ந்து அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தற்போது அதுவும் முடிவு பெற்றதாக இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"'மாமனிதன்' தலைப்பு ஏற்கெனவே தயாரிப்பாளர் ஜெயசீலன் என்பவரிடம் இருந்தது. அதை முறைப்படி யுவன் சங்கர் ராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றார். ஆகவே, 'மாமனிதன்' படத்தின் தலைப்பு எங்கள் படத்திற்கு உறுதியானது. தலைப்பு பெற்றதால் முதல் பார்வை. பாடல் விரைவில்".

இவ்வாறு சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

இதனால் விரைவில் 'மாமனிதன்' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE