முதல் பார்வை: சங்கத்தலைவன்

By க.நாகப்பன்

விசைத்தறி ஓட்டும் தொழிலாளி ஓர் இயக்கத்தின் தொண்டனாக மாறி, மக்களின் இதயங்களில் தலைவராக இடம் பிடித்தால் அவரே 'சங்கத்தலைவன்'.

மாரிமுத்துவின் தறி தொழிற்சாலையில் விசைத்தறி ஓட்டும் தொழிலாளியாகப் பணிபுரிகிறார் கருணாஸ். அவருடன் தறி ஓட்டுபவர்கள், டப்பா மிஷினில் நூல் இழைப்பவர்கள் எனத் தொழிலாளர்கள் சிலர் பணிபுரிகின்றனர். அவர்களில் திவ்யா என்ற இளம்பெண் எதிர்பாராவிதமாக தறியின் மோட்டார் பெல்ட்டில் சிக்கி தூக்கி அடிக்கப்படுகிறார். இதனால் அவரது கை துண்டாகிறது.

முதலாளி மாரிமுத்துவோ இதனைக் காதும் காதும் வெச்ச மாதிரி மறைக்கப் பார்க்கிறார். நஷ்ட ஈடு எதுவும் கொடுக்காமல் ஏமாற்றும் எண்ணத்தில், சிகிச்சை செலவுகளை மட்டும் ஏற்பதாகக் கூறுகிறார். இதற்கு நியாயம் கேட்கும் விதத்தில் முதலாளிக்குத் தெரியாமல் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சமுத்திரக்கனியிடம் நடந்ததைக் கூறி நீதி கிடைக்க உதவுமாறு கருணாஸ் முறையிடுகிறார். சமுத்திரக்கனியின் தலையீட்டில் திவ்யாவுக்கு நஷ்ட ஈடு கிடைக்கிறது. ஆனால், கருணாஸ் தன் மீது விசுவாசம் காட்டாமல் துரோகம் செய்ததாக மாரிமுத்து நினைக்கிறார். தொடர்ந்து அவரை அவமானப்படுத்தும் செயல்களில் ஈடுபடுகிறார். கருணாஸின் வேலையும் பறிபோகிறது.

வீட்டை விட்டு விலகி ஆதரவற்றுத் தனித்து நிற்கும் கருணாஸ் என்ன முடிவெடுக்கிறார், சமுத்திரக்கனியின் தூண்டுதல் கருணாஸின் வாழ்வை எப்படி மாற்றுகிறது, அவருக்கும் மாரிமுத்துவின் அண்ணன் மகளுக்குமான காதல் கைகூடியதா, விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வில் வெளிச்சம் வந்ததா, கூலி உயர்வு, போனஸ் உள்ளிட்ட விவகாரங்களுக்கு முடிவு கிடைத்ததா போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.

பாரதிநாதனின் 'தறியுடன்' நாவலை மையமாகக் கொண்டு சங்கத்தலைவனை உருவாக்கியுள்ளார் இயக்குநர் மணிமாறன். 'உதயம் என்.எச்4', ' புகழ்' படங்களுக்குப் பிறகு அவரது மூன்றாவது படம். ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் என்பதால் விசைத்தறி தொழில் களம் அவருக்கு நெருக்கமானது. அதனால் தெரிந்த களத்தில் நம்பிக்கையுடன் இறங்கியுள்ளார். ஆனால், அதற்கான நம்பகத்தன்மையைப் படமாக்கிய விதத்தில் கூட்டவில்லை.

படத்தின் நாயகன் ரங்கன் கதாபாத்திரத்தில் கருணாஸ் பக்குவமான நடிப்பைக் கொடுத்துள்ளார். அப்பாவித்தனம், விசுவாசம், காதல், தியாகம், உதவும் உள்ளம், வெறுப்பு, அதிருப்தி, வேதனை, பயம், எதிர்ப்பு, இயலாமை, ஆதங்கம் என அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார்.

சமுத்திரக்கனியின் நடிப்பை இரண்டாகப் பிரிக்கலாம். 'விசாரணை', 'வடசென்னை' போன்ற படங்களில் நுட்பமாக நடிப்பதன் மூலம் அசரவைப்பது. இன்னொன்று சாட்டையடி வசனங்களால் தத்துவங்களைத் தனக்கே உரிய பாணியில் சொல்லும் கதாபாத்திரங்களில் போகிற போக்கில் நடிப்பது. இப்படத்தில் இரண்டாவது வகை நடிப்பின் மூலம் சமுத்திரக்கனி, 'சாட்டை', 'அப்பா', 'தொண்டன்' ஆகிய முந்தைய படங்களின் பாணியில் கருத்துச் சொல்லியாக டெம்ப்ளேட் நடிப்பைக் கொடுத்துவிட்டுச் செல்கிறார்.

கருணாஸ் மீது காதலைக் கொட்டி இயல்பான நடிப்பில் சுனுலட்சுமி கவர்கிறார். குடிகாரத் தந்தையாக பிரகதீஸ்வரனும், சமுத்திரக்கனியின் மனைவியாக ரம்யா சுப்பிரமணியனும், கருணாஸின் தந்தையாக E.ராமதாஸும் நடிப்பில் குறை வைக்கவில்லை. பாலா சிங், ஜூனியர் பாலையா, சீனு மோகன் ஆகியோரும் தங்கள் இருப்பைப் பதிவு செய்கிறார்கள். வழக்கமும் பழக்கமுமான கதாபாத்திரம் என்பதால் மாரிமுத்து எந்தப் பிசிறும் இல்லாமல் வில்லனுக்கே உரிய தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

ஸ்ரீனிவாசன் தேவாம்சத்தின் ஒளிப்பதிவு விசைத்தறி தொழிலாளர்களின் வீடும் வீடு சார்ந்த தொழிலும் என்கிற களத்தை நெருக்கமாகக் காட்டத் தவறிவிட்டது. ராபர்ட் சற்குணத்தின் இசையில் யுகபாரதியின் வரிகளில் போராட்டம் இல்லாமல் பாடல் தெறிக்க விடுகிறது. உமாதேவியின் புதுவித இழையோடும் பாடல் மென்மையின் பக்கம் நின்று ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை படத்துக்குப் பெரிதாகக் கை கொடுக்கவில்லை. இயக்குநரின் ஒத்துழைப்புடன் வெங்கடேஷ் நிறைய இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம்.

விசைத்தறி தொழிற்சாலைகள், ஒன்றிரண்டு தறிகள் இருக்கும் வீடுகள், பாவு ஓடும் மிஷின், டப்பா மிஷின், தார் மிஷின் என்று விசைத்தறிகள் வீட்டுடன் சேர்ந்து இருப்பதை இயக்குநர் மணிமாறன் பதிவு செய்துள்ளார். ஆனால், அதனூடாக உறவாடும் தொழிலாளர்களின் இயங்கியல் அனுபவத்தை முழுமையாகக் காட்சிப்படுத்தவில்லை. அவற்றை செட் பிராப்பர்டியாக மட்டுமே பயன்படுத்தியுள்ளார்.

தொழிலாளர்களுகள் பிரச்சினை, வறுமை, போராட்டம், வேலை நிறுத்தம், தொழிற்சங்கத்தின் செயல்பாடுகள், உழைப்பு, சுரண்டல் ஆகிய தளங்களைத் திரைக்கதையில் கோத்த விதத்தில் இயக்குநரின் அக்கறை தெரிகிறது. பேச்சுவார்த்தையின்போது இருவிதமான வேட்டி உருவாக்கம், அதில் இருக்கும் அடர்த்தியைப் பொறுத்து கூலி மாற்றம் போன்றவற்றின் மூலம் எடுத்துக்கொண்ட களத்துக்கு நியாயம் சேர்க்க முயன்றுள்ளார்.

ஆனால், கதையின் போக்கை இதே திசையில் செலுத்தாமல் சாதி மறுப்புத் திருமணம், ஆணவக் கொலை, பழிவாங்கும் நடவடிக்கை என்று அடுத்தடுத்துத் தாவுவது அயர்ச்சியைத் தருகிறது. நீதிபதியைத் தவிர்த்து காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளும் கெட்டவர்களே என்று நிறுவுவது உறுத்தலாக உள்ளது.

ஒரு தறி முதலாளி அந்த அளவுக்கு எல்லை மீறுவதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். மாரிமுத்துவின் கதாபாத்திரப் படைப்பு வழக்கமான சினிமா வில்லனுக்குரிய குணங்களுடன் காட்சிப்படுத்தி இருப்பது செயற்கையின் உச்சம். அவருக்கு எல்லா முதலாளிகளும் ஒத்துழைப்பதாகக் காட்டுவதும் நெருடல்.

சர்வேசா பாடல் படத்தில் ஒட்டவில்லை. அதற்கு முந்தைய காட்சியிலேயே படம் முடிந்துவிட்டது. அதற்குப் பிறகும் ஏன் புரட்சி, போராட்டம் என்று நீட்டி முழக்கி, நரம்புகளை முறுக்கேற்றி ஆவேசப்படுகிறார்கள் என்று புரியவில்லை. படமாக்கப்பட்ட விதத்திலும், கதைக்களத்துக்கான நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றாத விதத்திலும் 'சங்கத்தலைவன்' சங்கடப்படுத்துகிறான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE