'மகாவீர் கர்ணா' திரைப்படத்திலிருந்து விலகினாரா விக்ரம்? 

By செய்திப்பிரிவு

ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் 'சூர்யபுத்ர மகாவீர் கர்ணா' திரைப்படத்தின் தலைப்பைச் சொல்லும் காணொலி வெளியிடப்பட்டுள்ளது. இதில் எந்த இடத்திலும் நடிகர் விக்ரமின் பெயர் இடம்பெறவில்லை என்பதால் அவர் இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டதாகத் தெரிகிறது.

‘என்னு நிண்டே மொய்தீன்’ என்ற மலையாளப் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் 'மகாவீர் கர்ணா' என்கிற திரைப்படத்தில் நடிகர் விக்ரம் நடிப்பதாக இருந்தது. நியூயார்க்கில் உள்ள யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த வருடம் ஜூலை மாதம் மெய்நிகர் தயாரிப்பு என்று சொல்லப்படும் விர்ச்சுவல் (Virtual Production) தயாரிப்புத் தொழில்நுட்பத்தில், 'தர்மராஜ்யா' என்கிற திரைப்படத்தை விமல் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. திருவிதாங்கூர் வரலாற்றில் இருக்கும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்களை வைத்துப் புனையப்பட்டிருக்கும் கற்பனைக் கதை இது என்று விமல் கூறியிருந்தார்.

தற்போது 'சூர்யபுத்ர மகாவீர் கர்ணா' என்கிற பெயரில், படத்தின் தலைப்பும், கிராபிக்ஸில் போர்க்களக் காட்சிகளும் கொண்ட ஒரு டீஸர் வெளியாகியுள்ளது. ஆர்.எஸ்.விமல் இயக்க, பூஜா எண்டெர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் வஷு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக் மற்றும் ஜாக்கி பாக்னானி ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள் என இந்த டீஸரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் டீஸரிலோ அது தொடர்பான எந்த ஒரு செய்தியிலோ விக்ரம் நடிப்பது குறித்து எந்தவிதத் தகவலும் இல்லை. இயக்குநர் விமல் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த பதிவிலும் விக்ரம் பெயரைக் குறிப்பிடவில்லை. விசாரித்ததில் விக்ரம் இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE