ரசிக மனங்களை திருடிய ‘திருட்டுப்பாட்டி’; நடிப்பில் யதார்த்தம் காட்டிய எஸ்.என்.லட்சுமி! 

By வி. ராம்ஜி


’எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி’ என்பார்கள். அப்படியொரு அம்மாவாக, பாட்டியாக பல அவதாரங்கள் எடுத்தவர்தான் எஸ்.என்.லட்சுமி. அந்தக் காலத்து ரசிகர்களுக்கு எஸ்.என்.லட்சுமி என்றால் சட்டென்று தெரிந்துவிடும். இந்தக் காலத்து ரசிகர் கூட்டத்துக்கு, ‘திருட்டுப்பாட்டி’ என்றால்தான் தெரியும். ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தின் திருட்டுப் பாட்டி... எஸ்.என்.லட்சுமி.

’சந்திரலேகா’ காலத்து நடிகை எனும் பெருமையும் புகழும் கொண்டவர். விருதுநகர் பக்கம் சின்னஞ்சிறிய கிராமத்தில் இருந்து, சிறு வயதிலேயே நடிக்க வந்த எஸ்.என்.லட்சுமி, நாடகத்துறையில் இருந்துதான் திரைத்துறைக்கு வந்தார். நாடகத்தில் இவரின் நடிப்பைக் கண்டு பிரமித்துப் போனார்கள், ரசிகர்களும் உடன் நடித்த, பணிபுரிந்த கலைஞர்களும்!

பிறகு, திரைப்பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. எம்ஜிஆர், சிவாஜிக்கு அம்மாவாக நடித்தார். ஆரம்பத்தில் கதாநாயகி வேடங்களெல்லாம் கிடைத்தன. போகப் போக, இவருக்கு கேரக்டர் ரோல்களே கிடைத்தன. இந்த சமயத்தில், இயக்குநர் கே.பாலசந்தரின் ராகினி ரிக்ரியேஷன்ஸ் குழுவில் இணைந்தார். தொடர்ந்து தன் நாடகங்களில் அருமையான கதாபாத்திரங்களை வழங்கினார் பாலசந்தர். ‘எதிர்நீச்சல்’, ‘சர்வர் சுந்தரம்’ மாதிரியான படங்கள் வந்த பிறகுதான், லட்சுமியின் திறமையை அடையாளம் கண்டுகொண்டது தமிழ் சினிமா.

அதற்கு முன்னதாக, எம்ஜிஆரின் ‘பாக்தாத் திருடன்’ படத்தில் புலியுடன் சண்டை போட்டு மிரட்டியெடுத்தார். இப்படி, இந்த மாதிரிதான் என்றில்லாமல், எல்லாவிதமான கேரக்டர்களும் பண்ணி ரவுண்டு வந்தார் எஸ்.என்.லட்சுமி. ’துலாபாரம்’ படத்தில் கலங்கடித்துவிடுவார் தன் நடிப்பால்!

துணிச்சலானவர். திறமைகள் மிக்கவர். எதையும் எளிதில் கற்றுக்கொண்டு செயல்படுபவர் என்றெல்லாம் திரையுலகில் இவருக்குப் பெயர் உண்டு.

‘எனக்கு டூவீலர் கூட ஓட்டுவதற்குத் தெரியாமல் இருந்த காலம் அது. சொல்லப்போனால், டூவீலருக்கு டிரைவர் வைத்துக் கொண்டவன் நானாகத்தான் இருப்பேன். அந்தசமயத்தில்தான், ஆழ்வார்பேட்டை சிக்னலில், ஸ்டைலாக வந்து நின்றது கார். இன்னும் ஸ்டைலாக கூலிங்கிளாஸெல்லாம் போட்டுக்கொண்டு ஒரு பெண்மணி டிரைவிங் செய்தார். சிக்னல் போட்டதும் அவர் வண்டியை ஸ்டார்ட் செய்து, ஸ்மூத்தாகச் சென்ற விதம்தான் என்னை டிரைவிங் கற்றுக் கொள்ளவைத்தது. அந்த பெண்மணி... எஸ்.என்.லட்சுமி அம்மா’ என்று இயக்குநர் வஸந்த எஸ்.சாய் தெரிவித்துள்ளார்.

‘சந்திரலேகா’ காலம் தொடங்கி, அஜித், விஜய் படங்கள் வரை ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் எஸ்.என்.லட்சுமி. நடுவே அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. அந்த சமயத்தில்தான் மீண்டும் அவரை நடிக்க அழைத்து வந்தார் கமல்ஹாசன்.

''முதலில் என்.எஸ்.கே. நாடகக் கம்பெனில இருந்தேன். ஜெமினி ஸ்டுடியோவில் மாசம் 60 ரூபாய் சம்பளத்துக்கு டான்ஸ் ட்ரூப்ல இருந்தேன். அப்புறம் சகஸ்ரநாமம் நாடகக் கம்பெனில ஆர்ட்டிஸ்ட்டா இருந்தேன். என் முதல் படம் 'கண்ணம்மா என் காதலி’. பிறகு ஏகப்பட்ட படங்கள். அனைத்திலும் அம்மா, அத்தை, பாட்டி, சித்தின்னு எல்லா உறவுகள்லயும் நடிச்சிருக்கேன்’’ என்று சொல்லும் லட்சுமி, எம்ஜிஆருடன் இருபது படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

எம்ஜிஆருக்கு அம்மா இவர். படத்தில் ஒருகாட்சியில், காலில் விழுந்தாராம் எம்ஜிஆர். ‘இப்படி டைரக்டர் சொல்லவே இல்லியே’ என்று பதறிப்போனாராம் லட்சுமி. ‘இந்தப் படத்துல எனக்கு நீங்க அம்மா. அவ்ளோதான்’ என்றாராம் எம்ஜிஆர். நெகிழ்ந்து போனார் லட்சுமி.
‘சிவாஜி மாதிரி நடிக்க இனிமே பொறந்துதான் வரணும். அவரோடயும் ஏகப்பட்ட படங்கள் பண்ணிருக்கேன். அவர்கிட்டே ஒவ்வொரு நாளும் கத்துக்கிட்டே இருக்கலாம். அப்படி கத்துக்கிட்டதுதான், என் நடிப்பை இன்னும் விஸ்தரிக்கக் காரணமா இருந்துச்சு’ என்று நெக்குருகிச் சொல்லியிருக்கிறார் எஸ்.என். லட்சுமி.

கமல் இவரைப் பார்க்கும் போதெல்லாம், ‘என் மனசுலயே இருக்கீங்கம்மா. ஒரு வாய்ப்பு வரும். அப்ப உங்களை நிச்சயமா பயன்படுத்துவேன்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அப்படித்தான் ‘மகாநதி’யில் தனக்கு மாமியாராக கதாபாத்திரம் வழங்கினார். இன்றைக்கும் மனதில் நிற்கிற கேரக்டர் அது. ‘தேவர் மகன்’, ‘காதலா காதலா’, ‘விருமாண்டி’ என தொடர்ந்து தன் படங்களில், அற்புதமான கேரக்டர்களாக வழங்கினார்.
இதில் உச்சபட்சம்... திருட்டுப் பாட்டி கதாபாத்திரம். ’மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் ஊர்வசிக்குப் பாட்டியாக, திருட்டுப் பாட்டியாக அதகளம் பண்ணியிருப்பார் எஸ்.என்.லட்சுமி. படத்தில் இவர் வருகிற காட்சிகளிலெல்லாம், அந்தக் காட்சியில் நடித்த அத்தனை நடிகர்களையும் குறிப்பாக, நாகேஷ், கமல் உட்பட அனைவரையும் தாண்டி கரவொலியைப் பெற்றவர் இவராகத்தான் இருக்கமுடியும்.

அந்தக் காலத்து சினிமா, நாடகங்கள் என்று ரவுண்டு வந்தவர், எண்பதுகளின் படங்கள் என்றெல்லாம் தனி முத்திரை பதித்தார். ‘வானத்தைப் போல’ படத்தில் இவரின் காமெடி தனி ரகம். சீரியல்களின் பக்கமும் தன் நடிப்பு முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை எஸ்.என். லட்சுமி.
இன்னும் எத்தனை வருடங்களானாலும் எஸ்.என்.லட்சுமியை எவராலும் மறக்கமுடியாது. அந்த ‘திருட்டுப் பாட்டி’ எஸ்.என். லட்சுமி, நம் மனங்களையெல்லாம் திருடிக் கொண்டார்.

எஸ்.என்.லட்சுமி நினைவுதினம் 20.2.2021. சினிமா உள்ளவரை, எஸ்.என்.லட்சுமியும் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருப்பார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE