அரசியலுக்கு வருவீர்களா? - சிவகார்த்திகேயன் பதில்

அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் இயல், இசை, நாட்டியம், நாடகம், சினிமா, இசை நாடகம், நாட்டுப்புறக் கலைகள், சின்னத்திரை உள்ளிட்ட கலைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு தமிழக அரசின் கலை மற்றும் கலாச்சாரத்துறை சார்பாக ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் இன்று (பிப்.20) வழங்கப்பட்டது.

பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சௌகார் ஜானகி, பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, எடிட்டர் ஆண்டனி, தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தலினால் இந்த விருதினை அனைத்து நடிகர்களும் புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையினால் பெற்றுக் கொண்டனர்.

இந்த விருதினை வாங்கிவிட்டு சிவகார்த்திகேயன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியதாவது:

"ரொம்ப மகிழ்ச்சியான தருணம். இந்த தருணத்தில் இந்த இடத்தில் நிற்பதற்குக் காரணமான தமிழக மக்கள் அனைவருக்கும் என் நன்றி. இந்த விருதினை வழங்கி இன்னும் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டும் என்று ஊக்குவிக்கும் தமிழக அரசுக்கும் நன்றி. இன்னும் நிறைய நல்ல படங்கள் பண்ண வேண்டும், இன்னும் நல்லா நடிக்க வேண்டும் என்று ஊக்குவிப்பது போல் உள்ளது. முக்கியமாக இந்த தருணத்தில் எனது அப்பா - அம்மாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரை செய்திகளில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த கோட்டைக்கு இன்று தான் வந்துள்ளேன். ஒரு குழந்தை எப்படி பிரம்மாண்டமான இடத்துக்குப் போகும் போது மிரட்சி, சந்தோஷம் இருந்ததோ அப்படி இருந்தது. தமிழ்நாட்டுக் குடிமகனாக இந்தக் கோட்டையைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும்"

இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சில கேள்விகளை சிவகார்த்திகேயனிடம் எழுப்பினார்கள். அவை பின்வருமாறு:

மக்கள் பிரதிநிதியாக எப்போது வரப்போகிறீர்கள்?

இன்றைக்கு சினிமாவில் பெரிய கதாநாயகனாக ஆவேன் என்பது கனவு என்று சொன்னாலே அது பொய். நான் சினிமாவில் இருக்க ஆசைப்பட்டேன். கதாநாயகன் அந்தஸ்து கொடுத்து, நிறைய வெற்றிப் படங்கள் கொடுத்து இன்றைக்கு கலைமாமணி என்ற மிகப்பெரிய விருதையும் கொடுத்துள்ளார்கள். இந்த விருதுக்கு இன்னும் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அதைத் தாண்டி பயங்கரமாக யோசிக்கவில்லை. அடுத்த படம் நன்றாக ஓட வேண்டும், இன்னும் நல்ல நடிக்க வேண்டும் என்பது மட்டுமே மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.

இளம் நடிகர்களுக்கு உங்களுடைய அட்வைஸ்?

நானும் இளம் நடிகர் தான். கஷ்டப்பட்டு உடம்பை எல்லாம் குறைத்துள்ளேன். என்னாலேயே முடியும் போது, உங்களாலும் முடியும் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

பல விஷயங்களுக்குக் குரல் கொடுத்து வருகிறீர்கள். தொடர்ந்து குரல் கொடுப்பீர்களா?

எனக்கு எதில் எல்லாம் புரிதல் இருக்கிறதோ, எதுவெல்லாம் சரியென்று படுகிறதோ நிச்சயமாகச் சொல்லிக் கொண்டுதான் இருப்பேன். சமுதாயப் பிரச்சினைகள் நிறைய உள்ளன. அதில் சிலவற்றை வேலைக்காரன், ஹீரோ, கனா மாதிரியான படங்களில் முடிந்தளவுக்கு சொல்றோம். சில நேரங்களில் சமூக வலைதளம் மூலமாகவும் பகிர்ந்து கொள்கிறோம். ஒரு குடிமகனாக என்னால் முடிந்ததை நிச்சயமாகச் செய்வேன்.

அரசியலுக்கு வருவீர்களா?

அதெல்லாம் ரொம்ப பெரிய கேள்வி. என்னைப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

விவசாயிகள் போராட்டத்தைக் கவனிக்கிறீர்களா?

நிச்சயமாக. திரைப்படத்துறையில் உள்ள பலரும் அவர்களுடைய பார்வையைப் படங்களில் பதிவு செய்து கொண்டுதான் இருக்கிறோம். கனா படத்திலும் அதைப் பதிவு செய்தோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE