விஷ்ணு வர்தனின் 'ஷெர்ஷா' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

விஷ்ணு வர்தன் இயக்கியுள்ள 'ஷெர்ஷா' படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் விஷ்ணு வர்தன். 'அறிந்தும் அறியாமலும்', ‘பட்டியல்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’ என பல ஹிட் படங்களைக் கொடுத்தவர், முதன் முதலாக இந்திப் படமொன்றை இயக்கியுள்ளார்.

1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர் விக்ரம் பத்ரா. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 24 வயதிலேயே வீர மரணம் அடைந்த இவருடைய வாழ்க்கையைத்தான் படமாக இயக்கியுள்ளார் விஷ்ணுவர்தன்.

'ஷெர்ஷா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை கரண் ஜோஹர் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது 'ஷெர்ஷா' திரைப்படம் ஜூலை 2-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதில் விக்ரம் பத்ரா வேடத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். அவருடன் கைரா அத்வானி, ஜாவின் ஜாஃப்ரி, ஷிவ் பண்டிட், பவன் சோப்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீவஸ்தவா, படத்தின் கதையை எழுதியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE