சின்ன பட்ஜெட் படங்களால் தான் திரையுலகம் வாழ்கிறது: ஆர்.கே.சுரேஷ்

சின்ன பட்ஜெட் படங்களால் தான் திரையுலகம் வாழ்கிறது என்று 'வேட்டை நாய்' இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்தார்.

சுரபி பிக்சர்ஸ் மற்றும் தாய் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'வேட்டை நாய்'. ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நாயகியாக சுபிக்‌ஷா, இசையமைப்பாளராக கணேஷ் சந்திரசேகரன், ஒளிப்பதிவாளராக முனீஸ்வரன், எடிட்டராக விஜய் கிருஷ்ணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன், பவித்ரன், ஏ.எல்.உதயா, போஸ் வெங்கட், ரவிவர்மா, ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும் போது, "ஆர்.கே.சுரேஷைப் பார்க்கும்போது அவர் இன்னொரு ரஜினிகாந்த் போல வரப்போகிறார். ரஜினியை ஹீரோவாக்கிய தயாரிப்பாளர் கலைஞானத்திடம், 'பைரவி' படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வந்தால் நான் அவரை வைத்து படம் இயக்கத் தயாராக இருக்கிறேன். நிச்சயம் ரஜினி போலப் பெரிய ஹீரோவாகி விடுவார் என்பது நிச்சயம்" என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பவித்ரன் பேசும்போது, "ஆர்.கே.சுரேஷ் மற்றும் ராம்கி இருவரையும் இந்தப்படத்தில் பார்க்கும்போது, அருண்பாண்டியன், ராம்கி இருவரும் நடித்த, 'இணைந்த கைகள்' படக் கூட்டணியைப் பார்த்தது போல இருக்கிறது.

விஜயகாந்த் ஆரம்பக் காலகட்டப் படங்களில் இருந்ததைப் போல ஆர்.கே.சுரேஷ் அவரை ஞாபகப்படுத்துகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப்படத்தின் மூலம் ராம்கி ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இது தொடர வேண்டும்.

இன்று தயாரிப்பாளர்கள் பலரும் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தான் படம் எடுக்கிறார்கள். இதனால் இங்கே பல தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போகிறது. நம் தயாரிப்பாளர்கள் தமிழ்நாட்டில் படம் எடுக்க வேண்டும். அரசாங்கத்தின் உதவியுடன் மிகப்பெரிய இடத்தை வாங்கி, ராமோஜிராவ் பிலிம் சிட்டி போல இங்கேயும் மிகப்பெரிய ஸ்டுடியோவை உருவாக்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.

நாயகன் ஆர்.கே.சுரேஷ் பேசும் போது, "இந்தப் படத்தின் இயக்குநர் ஜெய்சங்கர் படாத கஷ்டமே கிடையாது. இயக்குநர் பாலாவுக்கு அடுத்து என்னைச் செதுக்கியதில் இயக்குநர் ஜெய்சங்கருக்குத்தான் பங்கு உண்டு. இந்தப்படத்திற்கு 'வேட்டை நாய்' என பைரவரின் பெயரை டைட்டிலாக வைக்கும்போதே ஒரு அதிர்வு ஏற்பட்டது.

'புதிய பாதை' படத்தில் வருவது போலத்தான் இந்த படத்தில் என் கதாபாத்திரமும். ராம்கி தற்போது திரையுலகில் பட்டும் படாமல் நடித்துவருகிறார். இந்தப்படத்திற்குப் பிறகு அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்பது உறுதி. திரையரங்குகளோ, ஓடிடி தளங்களோ எதுவானாலும் பெரிய படங்களுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தைச் சிறிய படங்களுக்கும் கொடுக்க வேண்டும். சின்ன பட்ஜெட் படங்களால் தான் திரையுலகம் வாழ்கிறது” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE