முதல் பார்வை: கமலி from நடுக்காவேரி

By க.நாகப்பன்

தஞ்சையின் நடுக்காவேரி கிராமத்திலிருக்கும் ஒரு சராசரிப் பெண், சென்னை ஐஐடியில் படிக்க விரும்பினால், அதற்கான தடைகளைத் தகர்த்தெறிந்தால் அதுவே ‘கமலி from நடுக்காவேரி’.

தஞ்சையின் நடுக்காவேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கமலி (ஆனந்தி). இவர் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். பிளஸ் 2வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த அஸ்வினைப் (ரோஹித் செராப்) பார்த்ததும் காதல் வயப்படுகிறார். அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் ஐஐடியில் படிக்கத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள முடிவெடுக்கிறார். தஞ்சை, திருச்சி போன்ற நகரங்களில் இருக்கும் கோச்சிங் சென்டர்களுக்குச் செல்கிறார். ஆனால், அங்கு எங்கும் பயிற்சி வழங்கப்படாததால், ஆசிரியர் இமான் அண்ணாச்சியின் உதவியுடன் உள்ளூரில் இருக்கும் ஓய்வுபெற்ற பேராசிரியர் அறிவுடை நம்பியிடம் (பிரதாப் போத்தன்) பயிற்சிக்குச் சென்று ஐஐடியில் படிக்கத் தேர்வாகிறார்.

ஐஐடி அவர் நினைத்த மாதிரியான கல்விக்கான வெளிச்ச வாய்ப்புகளைத் திறந்துவிட்டதா, அஸ்வினைச் சந்தித்தாரா, காதல் மட்டும்தான் கமலியின் வாழ்க்கையா, அவருக்குள் மாற்றம் நிகழ்ந்ததா, தன் அடையாளத்தைக் கண்டடைய முடிந்ததா, கிராமத்து மாணவிக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் படிக்கும்போது ஏற்படும் சவால்கள், தடைகள் என்னென்ன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

கல்வி என்று பொதுவான வரையறையை மட்டும் வகுத்துக்கொண்டு, வசனங்களைப் போட்டு நிரப்பாமல் ஒரு கான்செப்ட்டைக் கொண்டு அதற்கு நியாயம் சேர்த்த விதத்தில் இயக்குநர் ராஜசேகர் துரைசாமி கவனம் ஈர்க்கிறார். படிக்கும் விதத்தை மாற்றுவது, பயிற்சிக்குத் தயாராவது போன்ற அம்சங்களில் மட்டும் அவர் காட்டிய ஈடுபாடு அட போட வைக்கிறது.

அப்பாவித்தனத்தின் இன்னொரு பெயர் ஆனந்தியாகத்தான் இருக்க முடியும். ‘கயல்’ ஆனந்தி இப்போது ‘கமலி’ஆனந்தியாகக் கவர்கிறார். வெகுளித்தனம், ஆச்சரியப்பட்டு பார்ப்பது, அகல விரித்த கண்களில் தன் எதிர்பார்ப்புகளையும், ஏக்கங்களையும் சுமப்பது என கண்களில் மேஜிக் நிகழ்த்தியுள்ளார். பெண் மையச் சினிமாவில் ஆனந்தி எந்த உறுத்தலும், நெருடலும் இல்லாமல் கதாபாத்திரத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறார்.

ஓய்வுபெற்ற பேராசிரியர் அறிவுடை நம்பி கதாபாத்திரத்தில் பிரதாப் போத்தன் தன் அனுபவத்தைக் கொட்டியுள்ளார். ஆர்வம் நிறைந்த ஆனந்திக்கு அவர் வழிகாட்டும் விதமும், துவண்டுபோன தருணத்தில் அட்வைஸ் மழை பொழியாமல் மறைமுகமாக ஊக்கம் கொடுக்கும் உத்தியும் ரசனை அத்தியாயங்கள். ஆனந்தியின் தோழி வள்ளி கதாபாத்திரத்தில் ஸ்ரீஜா நிறைவான நடிப்பைக் கொடுத்து சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறார். இமான் அண்ணாச்சி, ரோஹித் செராப் ஆகியோர் தங்கள் பங்களிப்பைச் சரியாகச் செய்துள்ளனர்.

கமலி, அறிவுடைநம்பி என்ற இரு கதாபாத்திரங்கள் எழுதப்பட்ட விதத்தில் இயக்குநரின் அக்கறையை வரவேற்கலாம். ஆனால், மற்ற கதாபாத்திரங்கள் சரியாக எழுதப்படவில்லை. குறிப்பாக அழகம் பெருமாள் கதாபாத்திரத்தைச் சொல்லலாம்.

லோகையனின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். தீனதயாளனின் இசையும், பின்னணியும் கதையோட்டத்துக்குப் பொருத்தமாக உள்ளன.

பொம்பளைப் புள்ள படிச்சு என்ன பண்ணப்போறா? இந்த வருஷமோ, அடுத்த வருஷமோ படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் செய்து கொடுத்துட வேண்டியதுதான் என்று ஆசிரியர் இமான் அண்ணாச்சியிடம் சொல்லும் அழகம் பெருமாள், தன் மகளால் படிக்க முடியாது என்ற முன்முடிவுடன் கூடிய தவறான நம்பிக்கையால்தான் ஐஐடியில் சேர்வதற்குரிய பயிற்சியில் சேர்ந்து படிக்கச் சொல்கிறார். ஆனால், அதற்குப் பிறகு அவர் அவ்வளவு சாதாரணமாக மனம் மாறிவிடுவது நம்பும்படியாக இல்லை. இவ்ளோ பெரிய இடத்துல படிக்கப் போற என்று மகளிடம் ஆச்சரியப்பட்டுப் பேசும்போதும் அந்தக் கதாபாத்திரத்தின் பண்பு சரியாகக் கடத்தப்பவில்லை. மகளை உச்சி முகர்ந்து பாராட்டும் தந்தையாகவும் பெருமிதப்படவில்லை.

மகனை சிபிஎஸ்இ பள்ளியில் படிக்க வைப்பது, மகளை அரசுப் பள்ளியில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்க வைப்பது என்ற தந்தையின் மனோபாவத்தை, ஆணாதிக்க மனநிலையை இயக்குநர் ராஜசேகர் துரைசாமி கோடிட்டுக் காட்டியிருக்கிறார். ஆனால், அந்தத் தந்தை அதற்காக, அந்த முடிவுக்காக கவலைப்பட்டதாகவோ, வருத்தப்பட்டதாகவோ காண்பிக்கப்படவில்லை.

காதல் என்கிற வஸ்துவை கமர்ஷியல் காரணங்களுக்காக இழுத்து வந்து கதையில் திணித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். காதலின் பிடியில் தன்னைக் கரைத்துக் கொள்ளாமல் தன்னைத்தானே அறிந்து, ஆற்றலை முழுமையாக வெளிக்கொணரும் நாயகி கதாபாத்திரத்தை வடிவமைத்தவர், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ போல வினாடி வினா நிகழ்ச்சியை பெரிதும் நம்பியது பலனளிக்கவில்லை. வழக்கமான டெம்ப்ளேட்டுக்குள் திரைக்கதை சிக்கிக் கொள்கிறது. அதிலும் திரைமொழி படத்தின் பெரிய பலவீனம். தொலைக்காட்சி சீரியலைப் போன்று காட்சிக்கு காட்சி எந்த சுவாரஸ்யமும், திருப்பமும் இல்லாமல் நகர்கிறது.

யாராவது கிண்டல் செய்தாலோ, அவமானப்படுத்தினாலோ ஆனந்தி தூக்கம் தொலைந்து கண் முழித்துப் படிக்கிறார், நூலகமே கதி என்று கிடக்கிறார். இதனால் சிக்கலான விஷயங்களிலும் சாதிக்கிறார் என்று காட்டியிருப்பது செயற்கையாக உள்ளது.

படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரம், வில்லன் என்று வழக்கமான அம்சத்தைப் புகுத்தாதது பாராட்டுக்குரியது. பெண்கள் இன்னும் அவர்களுக்கான முடிவை எடுக்க முடியவில்லை என்பதையும், பெண்கள் புத்திசாலிகள் என்பதையும் சொன்ன விதத்தில் மட்டும் ‘கமலி from நடுக்காவேரி’ கவனிக்க வைக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE