தொற்றுக் காலத்தில் நான் ஏற்ற கதாபாத்திரம்தான் என் வாழ்வில் மிக முக்கியமானது: சோனு சூட்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றுப் பரவலின்போது அல்லும் பகலும் உழைத்த முன்களப் பணியாளர்களான காவல்துறையினரைப் பாராட்டும் விதமாக ஹைதரபாத் காவல்துறை சார்பில் நேற்று ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சோனு சூட் கலந்து கொண்டார்.

இதில் சோனு சூட் கூறியதாவது:

''என்னுடைய படங்களில் நான் பல சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால், கரோனா ஊரடங்கின்போது நான் ஏற்ற கதாபாத்திரம்தான் என் வாழ்வில் மிக முக்கியமான கதாபாத்திரம். வாழ்வில் சரியான விஷயங்களைச் செய்யுமாறு கடவுள்தான் என்னை இயக்கியுள்ளார். என்னை விழிக்கவைத்த கடவுளுக்கு நன்றி கூற விரும்புகிறேன்.

கரோனா பரவத் தொடங்கியபோது நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், எனக்கு என்ன செய்வதென்று குழப்பமாக இருந்தது. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஒரு இலவசத் தொலைபேசி எண்ணை நாங்கள் அறிவித்தோம். அடுத்த ஒரு மணி நேரத்திலேயே லட்சம் அழைப்புகள் வந்துவிட்டன. என் மெயில் பாக்ஸ்கள் இ-மெயில்களால் நிரம்பி வழிந்தன. என் போன் எந்நேரமும் அலறியபடியே இருந்தது. எந்த ஒரு அழைப்பையும் தவறவிடக் கூடாது என்று நான் என் உதவியாளரிடம் கூறியிருந்தேன்.

இந்த கரோனா தொற்றுக் காலத்தில் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் வாழ்க்கை என்பது புது காலணிகளும், ஆடைகளும் வாங்குவதல்ல. நம்முடைய உதவியை எதிர்பார்க்காத ஒருவருக்கு உதவினால் மட்டுமே நாம் நம் வாழ்வில் வெற்றி பெற முடியும் என்று என் அம்மா சொல்வார்''.

இவ்வாறு சோனு சூட் கூறினார்.

கரோனா நெருக்கடி காரணமாகப் பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். தொடர்ந்து மாணவர்களுக்கும், ஏழைகளுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE