'பூவே உனக்காக' வெளியாகி 25 ஆண்டுகள்: தலைமுறைகள் கடந்து ரசிக்கப்படும் தரமான திரைப்படம் 

By ச.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் காதல் ஒரு அத்தியாவசிய கச்சாப் பொருளாகத் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. காலத்தால் அழிக்க முடியாத காவிய அந்தஸ்து பெற்றுவிட்ட பல காதல் படங்கள் உள்ளன. ஆனால் காதலை முதன்மையான உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு படம் குழந்தைகள், முதல் தாத்தா-பாட்டி வரை அனைத்து வயதினரையும் ரசித்துக் கொண்டாட வைப்பது அரிதானது. அப்படி ஒரு திரைப்படம் வெளியாகி இன்று 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

தியாகமும் காதல்தான்

இன்று தமிழ் வெகுஜன சினிமா வணிகத்தில் உச்ச நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றவராகவும் அனைத்து வயதினரிலும் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களைக் கொண்டவராகவும் இருக்கும் 'தளபதி' விஜய்யின் தொடக்கக் காலத்தில் மிகப் பெரிய வெற்றிப்படம், விஜய் படம் என்றாலே இன்று குடும்பம் குடும்பமாகத் திரையரங்குக்குப் படை எடுக்கிறார்கள் என்றால் அவருடைய படங்கள் அனைத்து வயதினரையும் ஈர்ப்பதற்கான கலகலப்பான அம்சங்களை உள்ளடக்கியிருக்கும் என்னும் மக்களின் நம்பிக்கைதான் காரணம். அந்த நம்பிக்கையின் தொடக்கப் புள்ளியாக, அழுத்தமான ஆழமான முதல் முத்திரையாக அமைந்த படம்- 25 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (பிப்ரவரி 15, 1996) வெளியான 'பூவே உனக்காக'.

ஆபாசமில்லாமல் வக்கிரமில்லாமல் நல்ல எண்ணங்களையும் சிந்தனைகளையும் மட்டுமே விதைக்கும் உள்ளடக்கத்துடன் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கக்கூடிய திரைப்படங்களை மட்டுமே இயக்கி ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்ற இயக்குநர் விக்ரமனின் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் முக்கியமானது. காதலருடன் வாழ்வில் இணைந்து 'வெற்றி பெறுவது மட்டும் உயர்வான காதல் அல்ல தன் காதல் தோற்றாலும் தன் காதலுக்குரியவரை அவருடைய காதலருடன் இணைத்து வைப்பதும் தலைசிறந்த காதல்தான் என்று சொன்ன படம். உண்மையான அன்பும் காதலும் பிரதிபலனை எதிர்பாராத எத்தகைய தியாகத்தையும் செய்யும் என்னும் மேன்மையான கருத்தை இந்தப் படத்தின் மூலம் சொல்லியிருந்தார் இயக்குநர் விக்ரமன். அதனாலேயே இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு ட்ரெண்ட் செட்டராகவும் அமைந்தது.

அனைவரையும் ஈர்த்த அம்சங்கள்

மதம் கடந்த திருமணத்தால் பிரிந்து கிடக்கும் இந்து, கிறிஸ்தவ குடும்பங்களை இன்னொரு மதம் கடந்த திருமணத்தாலேயே இணைத்துவைக்கிறான் நாயகன். அவன் அதைச் செய்வதற்கான நோக்கம் தான் ஒருதலையாகக் காதலித்த பெண்ணின் காதல் நிறைவேற வேண்டும். தன் காதல்தான் வெல்லவில்லை, தான் காதலித்த பெண்ணின் காதலாவது வெல்லட்டும் என்பதே இதற்கு அவன் கொடுக்கும் விளக்கம்.

இப்படி ஒரு வித்தியாசமான காதல் கதையில் இரு குடும்பங்களுக்கிடையே பிரிந்துவிட்ட பழங்கால நட்பு, உறவுகள் குறித்த ஏக்கம், அதை வைத்துப் பின்னப்பட்ட சென்டிமென்ட், நகைச்சுவைக் காட்சிகள், நாயகன் தான் எடுத்துக்கொண்ட காரியத்தைச் சாதிக்க வேறொருவரின் அடையாளத்தைப் பயன்படுத்துவதால் நேரும் குழப்பங்கள் சார்ந்த நகைச்சுவை என முழுக்க முழுக்க கலகலப்பும் மனதைத் தொடும் வசனங்களும் காட்சிகளும் நிறைந்த திரைக்கதையை அமைத்திருப்பார் விக்ரமன்.

நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு

அன்பும் நல்லெண்ணங்களும் மட்டுமே கொண்ட, முதல் சந்திப்பிலேயே அனைவருக்கும் பிடித்துப்போகக் கூடிய ஒரு இளைஞனின் கதாபாத்திரத்தில் விஜய் மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருப்பார். அவருடைய திரை வாழ்வுக்கு அழுத்தமான நங்கூரமிட்ட வெற்றிப் படம் மட்டுமல்ல அவருடைய தலைசிறந்த படங்களில் ஒன்றாகவும் 'பூவே உனக்காக' கொண்டாடப்படுவதற்கு அதில் நடிப்பு, நகைச்சுவை, நடனம் என அனைத்தையும் மிகச் சிறப்பாக அளித்த விஜய்யின் முழுமையான பங்களிப்பும் காரணம். விஜய்யால் ஒருதலையாகக் காதலிக்கப்படுபவராக அஞ்சு அரவிந்த், விஜய்யை ஒருதலையாகக் காதலிப்பவராக சங்கீதா என நாயகியரும் கச்சிதமான தேர்வுகளாக அமைந்தார்கள்.

வலுவான துணைக் கதாபாத்திரங்கள் அமைந்த திரைப்படங்கள் எதுவும் பரவலான ரசிகர்களைக் கவர்வதில் சோடை போனதில்லை. 'பூவே உனக்காக' இந்தக் கூற்றுக்கான நிராகரிக்க முடியாத ஆதாரம். தாத்தாக்களாக நம்பியார், நாகேஷ், பாட்டிகளாக விஜயகுமாரி, சுகுமாரி, மத உணர்வால் முட்டிக்கொண்டு நிற்கும் தந்தைகளாக மலேசியா வாசுதேவன், ஜெய் கணேஷ், அனாதரவாக நிற்கும் நாயகனுக்கு அடைக்கலம் கொடுக்கும் கிராமத்து வெள்ளந்தி மனிதராக மீசை முருகேஷ், நாயகனின் நண்பனாக சார்லி, பழைய ரூம் மேட்டாக மதன் பாப், விஜய் யார் என்னும் உண்மையைத் தெரிந்துகொண்டு அதைத் தன் முதலாளியான மலேசியா வாசுதேவனிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் ஆர்.எஸ்.சிவாஜி உட்பட அனைத்து துணைக் கதாபாத்திரங்களும் பார்வையாளர்களின் மனங்களில் என்றென்றும் நீங்கா இடம்பிடித்தன.

என்றும் சிரிக்கவைக்கும் நகைச்சுவை

முதன்மை நகைச்சுவைக் கதாபாத்திரமாக சார்லி மிகச் சிறந்த பங்களிப்பை அளித்திருந்தார். “எனக்கும் எங்க அப்பா மாதிரி டாக்டராகணும்னு ஆசை” “உங்க அப்பா டாக்டரா சொல்லவேயில்ல”, “இல்ல அவரும் டாக்டராகணும்னு ஆசைப்பட்டார்” என்பது போன்ற சார்லியின் வசனங்கள் எப்போது நினைத்தாலும் சிரிக்கவைப்பவை. மீசை முருகேஷ், மதன் பாப் ஆகியோரும் அருமையான நகைச்சுவைப் பங்களிப்பை ஆற்றியிருப்பார்கள். “வாயில் வருகிற மாதிரி ஒரு பெயர் சொல்லுங்களேன்” என்று சார்லி சொல்ல அதை வேறோரு அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் மீசை முருகேஷ் “வாந்தின்னு வய்யி” என்று பதில் கொடுக்கும் கணத்தில் திரையரங்கம் வெடித்துச் சிரித்தது. நம்பியார், நாகேஷ் இருவருக்கும் அசலான பேத்தியான சங்கீதா தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் அவர்களிடம் சென்று வம்பிழுக்கும் காட்சிகளும் கலகலப்புக்குரியவையாக இருந்தன.

கிளாசிக் அந்தஸ்து பெற்ற பாடல்கள்

பாடல்கள் பற்றிப் பேசவில்லை என்றால் 'பூவே உனக்காக' படத்துக்கான மரியாதை முழுமையடையாது. 'புது வசந்தம்' படத்தில் தொடங்கிய விக்ரமன் – எஸ்.ஏ.ராஜ்குமார் என்னும் இயக்குநர்-இசையமைப்பாளர் கூட்டணி உச்சத்தைத் தொடவைத்த பாடல்கள் இந்தப் படத்தில் அமைந்தன. 'ஆனந்தம் ஆனந்தம் பாடும்' என்னும் காதலின் மேன்மையைச் சொல்லும் பாடல் முதலில் சித்ராவின் குரலில் பிறகு உன்னி கிருஷ்ணன் குரலிலும் படத்தின் இருவேறு சூழல்களில் முழுமையாக இடம்பெறும். இரண்டு வெர்ஷன்களிலும் சரணங்களில் மட்டும் வெவ்வேறு வரிகளை எழுதியிருப்பார் பழனிபாரதி. இரண்டு பாடல்களும் இன்றும் திரையிசை ரசிகர்கள் மிகவும் விரும்பும் கிளாசிக் பாடல்களாக அமைந்ததற்கு இசை, அர்த்தம் பொதிந்த பாடல் வரிகள், பாடகர்களின் குரல் வளம் என அனைத்துமே காரணமாக அமைந்தன. குறிப்பாக ஆண் பாடும்போது 'மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம்கூட சுகமாகும். வாழ்க்கை இன்பவரமாகும்” என்று காதல் ஜோடிகள் வாழ்வில் இணைவதன் உன்னதத்தை ஒற்றை வரியில் உணர்த்தியிருப்பார் பழனிபாரதி.

'ஓ பியாரி பானி பூரி' என்று தொடங்கும் நாயக அறிமுகப் பாடல், 'சொல்லாமலே', 'சிக்லெட் சிக்லெட்' ஆகிய டூயட் பாடல்கள், 'மச்சினிச்சி வர்ற நேரம்' என்னும் ஆட்டம் போட வைக்கும் பாடல் என அனைத்துப் பாடல்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு இன்றளவும் இசை ரசிகர்களை ஈர்க்கும் பாடல்களாக அமைந்துள்ளன.

சமூகத்துக்குத் தேவையான படம்

எல்லாவற்றுக்கும் மேலாகக் காதலுக்குச் சாதி, மதம் தடையில்லை என்னும் செய்தியை அழுத்தமாகச் சொன்னது 'பூவே உனக்காக'. படத்தைக் கேளிக்கை என்னும் அம்சத்தைத் தாண்டி சமூகத்துக்கு முக்கியமான படைப்பாகவும் ஆக்குகிறது. காதலர்களைச் சேர்த்து வைப்பதற்காக நாயகன் இறுதியில் பேசும் வசனங்கள் எந்த மதத்தையும் இழிவுபடுத்தாமல் அதே நேரம் மதத்தைவிட மனிதமும் மனித உணர்வுகளுமே முக்கியமானவை என்னும் செய்தியைக் கச்சிதமாக அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் கடத்தின.

அதற்குப் பிறகு நாயகன் வேறோரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பை மறுத்து 'ஒரு செடியிலிருந்து விழுந்துவிட்ட பூவை மீண்டு ஒட்டவைக்க முடியாது' என்று யதார்த்தம் மீறிச் சொன்னாலும், முதல் காதல் குறித்த அழுத்தத்தையும், அந்தக் காலகட்ட இளைஞரின் மனநிலையைப் பதிவு செய்வதாகவும் அக்காட்சி அமைந்தது.

கடந்த 25 ஆண்டுகளில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போதெல்லாம் அதிக மக்களால் பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அது திகழ்கிறது. இன்னும் நெடுங்காலத்துக்கு அப்படியே திகழும். ஏனென்றால் 'பூவே உனக்காக' தலைமுறைகளைத் தாண்டிய ரசிகர்களைக் கவரும் தரமான திரைப்படம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE